போஸ்டர் செய்தி

கூலிப்படையினருக்கு ஜாமீன் எடுத்த தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி தாக்கு

சென்னை, ஜன.25–

கூலிப்படையினருக்கு ஜாமீன் எடுத்த ஒரே கட்சி தி.மு.க. என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எத்தனை வழக்கு போட்டாலும் அதனை சந்திக்க தயார். எங்களுக்கு மடியில் கணம் இல்லை, எனவே எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தென்சென்னை தெற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்றது. பிரம்மாண்டாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:– எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, தினந்தோறும் நம் கட்சியை நினைக்க வில்லையென்றால் தூக்கமே வராது. முதலமைச்சர் என்ற நாற்காலி கிடைக்காத காரணத்தினால் அவர் விரக்தியின் விளிம்பிற்கே போய்விட்டார். ஏதாவது ஒரு குற்றத்தை சொல்லிக்கொண்டே இருக்கின்றார். இவர்கள் ஆட்சி செய்த பொழுது, என்ன திட்டங்களை கொண்டு வந்தார்? இவர்களுக்காக என்ன விருது வழங்கப்பட்டது? ஆனால், புரட்சித்தலைவி இருக்கின்றபொழுதும் சரி, அம்மா மறைவிற்குப் பிறகும் சரி, அம்மாவினுடைய அரசின் செயல்பாட்டை பாராட்டி விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அண்ணா தி.மு.க. அரசு எந்த அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிதி ஆயோக்-னால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார மாநிலம் முற்போக்கு இந்தியா என்ற அறிக்கையில், தமிழ்நாடு, மூன்று முன்னிலை மாநிலங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் நமக்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றது.

எப்பொழுது பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று வசை பாடிக் கொண்டிருப்பார் ஸ்டாலின். ஆனால் உண்மை நிலை என்ன? 2016–ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 19 நகரங்களில், பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் நகரமாக கோயம்புத்தூர் நகரமும், மெட்ரோ நகரங்களில் சென்னை முதல் நகரமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட நற்பெயரை நம்முடைய அம்மாவினுடைய அரசு பெற்றிருக்கிறது. இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாது.

இந்தியாவிலேயே பல்வேறு காவல் நிலையங்களை பல்வேறு காரணிகளை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து எந்த காவல் நிலையம் சிறந்த காவல் நிலையம் என்று தேர்ந்தெடுக்கின்ற பொழுது, தமிழகத்தின் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம், இந்தியாவிலேயே முதல் காவல் நிலையமாகவும், சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் ஐந்தாவது காவல் நிலையமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. எதற்காகச் சொல்கிறேன் என்றால் எப்பொழுது பார்த்தாலும் நம்முடைய சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற ஒரு பொய்யான தோற்றத்தை நாள்தோறும் பேசிவருகின்ற எதிர்க்கட்சித் தலைவர் இதை சற்றுப் பார்க்க வேண்டுமென்பதற்காகத்தான். இந்த ஆண்டு தேனி, பெரியகுளம் காவல் நிலையம் அகில இந்திய அளவில் எட்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முதன்மை மாநிலம்

இறந்தவர்களின் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதில் மிகச்சிறப்பாக செயல்படுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருதினை மூன்றாண்டுகாலமாக தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில், உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் வகித்து மத்திய அரசின் கிருஷி–கர்மான் என்ற விருதை தொடர்ந்து நான்கு ஆண்டுகாலம் தமிழகம் பெற்று வருகிறது.

புரட்சித் தலைவி அம்மா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் திருமண வயதை அடைகின்றபொழுது குறித்த காலத்தில் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்காக, அம்மா தொலைநோக்குத் திட்டத்தோடு, திருமண உதவித் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 10,64,315 பயனாளிகளுக்கு ரூ.5,082 கோடி உதவி செய்திருக்கின்றோம். தாலிக்கு தங்கம் கொடுத்தோம். எண்ணற்ற திட்டங்கள்

அன்னதானத் திட்டம், குறைந்த விலையில் தரமான உணவு வழங்க அம்மா உணவகம், கருவிலிருக்கும் சிசுவிற்கு ஊட்டச்சத்து, ஏழைத் தாய்மார்கள் பெற்றெடுக்கின்ற குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டுமென்பதற்காக, பிறக்கும் குழந்தைகள் சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற உயரிய நோக்குடன், கிலுகிலுப்பையுடன் கூடிய 14 பொருட்கள் அடங்கிய அம்மா பரிசுப் பெட்டகம், தாய்மார்கள் குழந்தைக்கு பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் சிரமங்களை நீக்குவதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தனி அறை, தாய்ப்பால் வங்கி, தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்;

மக்கள் நல்வாழ்வில் ஏழை, எளிய மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, பலவகை கலவைச் சாதம், 14 வகையான கல்வி உபகரணங்கள், பால்வாடியிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் ஏழை மக்களுக்கு ஏற்றமிகு திட்டங்கள், விலையில்லா மிதிவண்டி, புத்தகம், நோட்டுகள், பைகள், அறிவுப்பூர்வமான உலகத் தரத்திற்கேற்ற கல்வி பெற மடிக்கணினி வழங்கும் திட்டம், வெண்மைப் புரட்சிக்காக விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், நிலத்தடி நீரை சேமிப்பதற்கு அம்மா அமல்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உணவகம். சென்னையில் மூன்றாண்டுத் திட்டமாக, ஆறுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.300 கோடி செலவில் கூவம் ஆற்றையும், சுமார் ரூ. 550 கோடி செலவில் அடையாறு ஆற்றையும், சுற்றுச்சுவர் கட்டுதல், சுத்திரிப்பாலை அமைத்தல் ஆகியவையுடன் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சியினர் சட்ட மன்றத்தில் அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது வாக்கெடுப்பு எடுக்கும் சமயத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் மேஜை மீது ஏறி நாட்டியம் ஆடுதல், சட்டமன்றப் பேரவைத் தலைவர் இருக்கையிலிருந்து அப்புறப்படுத்தி அவருடைய இருக்கையில் அமர்தல் போன்ற அலங்கோலக் காட்சிகளை அரங்கேற்றினார்கள்.

இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டமன்றத்தையே மதிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மக்களை மதிக்காத காரணத்தை நாம் உணர முடியும். நம்முடைய பேரவைத் தலைவர் மறப்போம், மன்னிப்போம் என்று சொல்லி, பெருந்தன்மையோடு மன்னித்தார். ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில், நம்முடைய மறைந்த சட்டமன்ற உறுப்பினர் போஸின் தொப்பி கை தவறி கீழே விழுந்ததற்காக அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் செய்ததை பெருந்தன்மையோடு மன்னித்தது நம்முடைய அண்ணா திமுகவும் நமது பேரவைத் தலைவரும்தான்.

கூலிப்படைக்கு தி.மு.க. ஜாமீன்

எதிர்க்கட்சித் தலைவர் இந்த ஆட்சியை கலைக்க செய்யும் முயற்சிகள் எல்லாம் கானல் நீராகிவிட்ட காரணத்தினால் இப்பொழுது கொடநாட்டுப் பிரச்சினையை எடுத்துக்கொண்டார். இதற்கும் முதலமைச்சருக்கும் என்ன சம்பந்தம். இந்தியாவிலேயே எந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் கிடைக்காத பெருமை நமது எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைத்திருக்கிறது. கூலிப்படையைச் சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் எடுத்த கட்சி என்றால் அது திமுக கட்சிதான்.

அவன் நீங்கள் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் சொல்கிறான். எங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகமெல்லாம், இவர்கள் திட்டம் தீட்டி இதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றார்கள், பல புகார்கள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது, பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் என்னிடத்திலே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். அங்கே இரண்டாயிரம் கோடி இருக்கிறதென்று இவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒன்று வைத்தவனுக்கு தெரியும், இல்லையென்றால் எடுக்கச் சென்றவனுக்குத் தெரியும் அல்லது எடுப்பதற்கு திட்டம் தீட்டிக் கொடுத்தவனுக்குத் தெரியும்.

ஸ்டாலின் மீது சந்தேகம்

ஆகவே, இதிலிருந்து சந்தேகம் என்பது திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் மீதுதான் நமக்கு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு ஜாமீன் கொடுத்ததும், தி.மு.க.வின் வட்டச் செயலாளர், வாதாடியவர் திமுகவின் வழக்கறிஞர், கேட்டால் வழக்கறிஞர்கள் யாருக்கும் வாதாடலாம் என்கிறார்கள். ஆனால் கொலைகாரன், கொள்ளைக்காரன், ஆள்கடத்துபவன், பாலியல் வழக்கில் ஈடுபட்டவன், போதைப்பொருள் கடத்தியவன் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்களுக்காக வாதாடிய ஒரே கட்சி திமுக கட்சி தான்.

கூலிப்படைக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்கள், வழக்கு தள்ளுபடியாகி விட்டது. இந்த ஆட்சி மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாலும், இந்தியா டுடே நாளிதழ் நமக்கு விருது கொடுத்திருப்பதினாலும், இவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றார்.

இதைத் தவிர்க்க வேண்டுமென்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியிலே எப்படிப்பட்ட மரணம் ஏற்பட்டது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இதைச் சொன்னால், எங்களை மிரட்டிப் பார்க்கிறார் என்று சொல்வார்கள். மிரட்ட வேண்டியதெல்லாம் கிடையாது, எது உண்மை, எது பொய் என்று மக்களுக்குத் தெரியும், மக்கள் தான் நீதிபதி, அவர்கள் அளிக்கும் தீர்ப்புதான் இறுதியான தீர்ப்பு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு இன்றைக்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து, புதிய புதிய தொழில்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. அதன் வழியிலே வந்த புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, ஜனவரி 23.1.2019 மற்றும் 24.1.2019 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, மாயமான் என்று சொல்கிறார். எனக்கு அர்த்தம் புரியவில்லை.

உண்மையான மான்

ஆனால், அண்ணா தி.மு.க. அரசு உண்மையான மான். புரட்சித்தலைவி அம்மா எடுத்த நடவடிக்கை தொடர்ந்து அம்மாவினுடைய அரசு எடுத்து வருகிறது. இன்றைக்கு உலக முதலீட்டாளர் மாநாட்டை இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நாம் நடத்திக் காட்டியிருக்கின்றோம். இந்த மாநாட்டில், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன, சரித்திர சாதனையை நாம் படைத்திருக்கின்றோம்.

இரண்டு, மூன்று மாதத்திற்கு முன் ஸ்டாலின் சொன்னார், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில்கள் எல்லாம் அண்டை மாநிலத்திற்கு போகிறது என்று. இப்பொழுது தமிழ்நாட்டிற்கு தொழில் கொண்டு வந்தால், மாய மான் என்று சொல்கிறார். நாம் வெளிநாட்டில் இருக்கின்ற எல்லா முதலீட்டாளர்களையும் நமது தொழில் துறை அமைச்சர், தொழில் துறை செயலாளர் மற்றும் அவரைச் சார்ந்த அதிகாரிகளெல்லாம் நேரடியாகச் சென்று அவர்களை சந்தித்து, தொழில் துவங்க உகந்த மாநிலம், தமிழ்நாடு என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நாங்கள் இந்தெந்த உதவிகளைச் செய்கிறோம், தமிழ்நாட்டிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தோம்.

இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் இருக்கின்ற தொழிலதிபர்களைச் சந்தித்து, தமிர்நாட்டிலே முதலீடு செய்யுங்கள், உங்களுக்குத் தேவையானவைகளை செய்து தருகிறோம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்தோம். நம்முடைய அழைப்பை ஏற்று, இன்றைக்கு 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய முன்வந்திருக்கின்றனர், கிட்டத்தட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

பொறுத்துக் கொள்ள முடியவில்லை

இதையெல்லாம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த அரசு நிற்காது என்று சொன்னார்கள், நிலைத்து நின்றுவிட்டது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுகின்றது, கல்வி, மருத்துவத்துறை, போன்ற துறைகளிலே சிறந்து விளங்குகின்றது. அப்படிப்பட்ட அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற காரணத்தினால், தொழில் துறையும் இன்றைக்கு சிறந்து விளங்குகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வளவு முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், தொழில் துவங்குகின்ற சூழ்நிலை இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதிகமாக முதலீடு செய்வார்கள். தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம். இப்படி அனைத்து வகையிலும், தொழில் செய்கின்றவர்களுக்கு நாம் வசதி வாய்ப்பை உருவாக்கித் தந்ததன் காரணமாக 304 முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

ஸ்டாலின் இப்பொழுது ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுதாவது மக்களைப் போய் பார்க்கட்டும். இவர் தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார், குடிதண்ணீர், சாலை வசதி, தெரு வசதி, கழிவுநீர் அகற்றல், போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய பொறுப்பு உள்ளாட்சி அமைச்சரிடத்திலே இருக்கிறது. அப்பொழுதெல்லாம், கிராமத்திற்கு செல்லாமலும், மக்களை பார்க்காமலும் இருந்தார். இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக 3 வருடங்கள் ஆனபோதும் கிராமத்திற்கு செல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அதில் வெற்றி பெற்று, குடும்பத்தில் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சராக ஆகவேண்டும் என்ற எண்ணம் தான்.

தில்லு முல்லு

பதவியில் இருக்கும்பொழுது வந்திருந்தால், சாலை வசதி, குடிநீர் வசதி, போன்ற வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம். இப்பொழுது வந்து என்ன பிரயோஜனம் என்று மக்கள் கேட்கிறார்கள். ஆனால், இப்பொழுது மக்களை சந்தித்து, அந்த தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெறுவதற்காக போடுகின்ற நாடகம் தான் என்பதை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றைக்கு தி.மு.க. ஆட்சி இல்லாத போதே, எதிர்க்கட்சியாக இருக்கின்றபொழுதே, இந்தப் பகுதியில், ஓட்டலில் ஓசி பிரியாணி சாப்பிடச் சென்று எப்படி அடித்தார் என்று பார்த்தீர்கள், குஸ்தி போடுகிறார். குஸ்தி போடும் இடம் வேறு, அங்கு போய் குஸ்தி போட்டால் தெரியும், மூக்கையெல்லாம் உடைத்து விடுவார்கள். ஓட்டல் வைத்திருக்கும் அப்பாவி ஒருவர் ஓட்டலுக்குச் சென்று, பிரியாணி சாப்பிட்டு, அதற்கு காசு கேட்டால், முகத்தில் குத்தியதெல்லாம் எல்லா தொலைக்காட்சியிலும் வந்தது.

ஓசி பரோட்டா

திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர், பெரம்பலூரில், அழகு நிலையத்திற்குச் சென்று அந்த அம்மாவை அடித்து துவைக்கிறார். அந்தக் காட்சியும் தொலைக்காட்சியில் வந்தது. பெண்ணுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பது என்பது திமுக.வைக் கேட்டால் தான் தெரியும். ஓசி பரோட்டா சாப்பிட்டு அரிவாளைக் காட்டி மிரட்டியது திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று உங்களுக்குத் தெரியும். பரோட்டா வாங்குவதற்கெல்லாம் கத்தியைக் காட்டுகிற கட்சி அந்தக் கட்சி. திருவண்ணாமலை செல்போன் கடையில் உரிமையாளர்களை தாக்கி மண்டையை உடைத்ததும் திமுக. எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுதே இப்படி மக்களை அச்சுறுத்துகிறீர்களே, நீங்கள் ஆளுங்கட்சியானால், இந்த மக்களை எப்படி படாத பாடு படுத்துவீர்கள் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எப்படியாவது இந்த ஆட்சியை பிடிக்கவேண்டும், எப்படியாவது இந்த ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள், நாள்தோறும் அறிக்கை. சென்னையில் நான்கைந்து வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், எப்பொழுது பார்த்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். நீங்கள் எந்த வழக்கு போட்டாலும் பரவாயில்லை. மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. அண்ணா தி.மு.க. அரசானாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியானாலும் சரி, அதற்கு அஞ்சப் போவதில்லை. ஒரு அண்ணா தி.மு.க. தொண்டனைக் கூட உன்னால் மிரட்ட முடியாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை உருவாக்கும்பொழுது எவ்வளவு துன்பப்பட்டார், எவ்வளவு கொடுமைக்கு உள்ளானார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அத்தனையையும் தாங்கிக் கொண்டு, துணிவோடு நின்று வெற்றி கண்ட முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா பொறுப்பேற்று, எவ்வளவு துயரங்களுக்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் இடையிலே கட்சியையும் வழிநடத்தி, ஆட்சியையும் பிடித்தார்.

அம்மா சிறந்த ஆட்சியை நாட்டு மக்களுக்கு தந்தார். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக் காலத்திலே போடப்பட்ட திட்டங்கள் மக்கள் நெஞ்சத்திலே நிலைத்து நிற்கின்ற காரணத்தினால்தான், அம்மாவை அடக்கம் செய்த அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துகின்ற காட்சியை பார்க்கின்றோம். ஒரு தலைவன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான், இறந்த பிறகு ஒரு தலைவனுக்கு கிடைக்கின்ற மரியாதை அம்மாவிற்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

அதை பொறுக்க முடியாத சில எதிரிகள் அதை கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கும், இறைவனுடைய அருளால் நீதிமன்றத்தால், தவிடு பொடியாக்கப்பட்டது. ஒட்டுமொத்த அண்ணா தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியும், ஒட்டுமொத்த தமிழகத்தினுடைய மக்களுடைய விருப்பப்படியும் புரட்சித்தலைவி அம்மா அடக்கம் செய்த அந்தப் பகுதியில் 50 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான மண்டபம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா. தனக்கென்று குடும்பம் கிடையாது, மக்கள் தான் குடும்பம். மக்களுக்காக வாழ்ந்த இருபெரும் தலைவர்களுடைய நினைவைப் போற்ற வேண்டும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் போடப்பட்ட திட்டங்கள் என்றென்றைக்கும் அழிக்க முடியாத திட்டங்கள். மக்களிடத்திலே இன்றைக்கு சேர்ந்து கொண்டிருக்கின்றன, மக்களால் புகழப்படுகின்றன.

தொண்டர் ஆளும் மாநிலம்

அந்த இருபெரும் தலைவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதத்திலே அங்கே நினைவு மண்டபம் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, அண்ணா தி.மு.க. அரசானாலும் சரி, அண்ணா தி.மு.க. கட்சியானாலும் சரி, மக்களுடைய அரசு, மக்களுக்காக பணியாற்றுகின்ற அரசு, இது தொண்டன் ஆளுகின்ற அரசு, தொண்டன் ஆளுகின்ற கட்சி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருமித்த கருத்தோடு ஆளுகின்ற கட்சி. இந்தியாவிலேயே தொண்டன் ஆளுகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவித்து, அண்ணா தி.மு.க. மக்களுக்காக உழைக்கின்ற கழகம்.

எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவி அம்மாவினுடைய திட்டங்களை நிறைவேற்ற, தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களைப் பெற்றிட, தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர, தேவையான நிதிகளை மத்தியிலே இருந்து பெற, நம்முடைய கழகத்தின் சார்பாக நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால், மக்களுடைய பிரச்சினையை தீர்க்க, நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்க வேண்டும். இன்றைக்கு அதிக அளவிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற காரணத்தினால், காவிரி நதிநீர் பிரச்சினையானாலும் சரி, மேகதாது பிரச்சினையானாலும் சரி, இந்த நாட்டு மக்களே வியக்கின்ற அளவிற்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பணியை ஆற்றினார்கள். அதே நிலை உருவாக்குவதற்கு அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.ஜெயவர்தன் எம்.பி., விருகம்பாக்கம் பகுதி செயலாளர் கே.மலைராஜன், பகுதி செயலாளர்கள் எம்.பாஸ்கர், ஏ.அண்ணாமலை, விருகம்பாக்கம் பகுதி மாணவரணி செயலாளர் என்.குணசேகரன் மற்றும் ஆர்.ராஜேந்திர பாபு, ஏ.நுர்ஜகான், கோ.சாமிநாதன், சொ.கம்பாடி கே.தேவி, என்.எஸ்.மோகன், டி.ஜெயச்சந்திரன், பி.டி.சி.செல்வம், எஸ்.அபுபக்கர், ஏ.கம்.காமராஜ், விருகம்பாக்கம் பகுதி இணை செயலாளர் ஏ.குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *