சிறுகதை

கூறியது அப்பாவா – மு.வெ.சம்பத்

Makkal Kural Official

சாந்தன் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையிடம் அடிக்கடிக் கூறுவது என்னவென்றால் தலைவலி, காய்ச்சல், இருமல், வயிற்று வலி, கால்வலி, ஜலதோஷம், சுளுக்கு போன்ற அசௌகரியங்களுக்கு உடனே மருத்துவரை நாடாமல், நம்மில் பலர் உங்களையும் சேர்த்துத் தான் மருத்துவர் ஆலோசனையைப் பெறாமல் சில மருந்துகளை தாங்களாகவே கேள்விப்பட்டது அல்லது ஒரு தடவை உபயோகித்து பலன் அடைந்ததை அல்லது மருந்துக் கடையில் சென்று அசௌகரியத்தைச் சொல்லி மாத்திரைகள் வாங்கும் பழக்கம் தவறானது தான் என்றான். சில மாத்திரைகள் மூலம் பக்க விளைவுகள் வந்தால் சிரமம்தான். சில சமயம் உயிருக்கே ஆபத்து தான். சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம் என்ற சொல வடையாகி விடும் என்றான்.

உடனே தங்கை நீலா அண்ணா சில மருந்துகள் நமக்கு ஒத்துப் போய் அதனால் சற்று நோய் தாக்கம் குறைந்தால், அதைப் பின்பற்றுவதில் தப்பில்லையே என்றாள்.

நமது அம்மா, அப்பாவிற்கு மருத்துவர் பரிந்துரை சீட்டின் மூலம் தான் வாங்குகிறோம். சில நேரங்களில் திடீரென்று ஏற்படும் அசௌகரியங்களுக்கு மருந்துக்கடை சென்று வாங்குவேன் என்றாள்.

சாந்தன் உடனே மருந்துக் கடைக்காரர் தனக்குத் தெரிந்த மற்றும் சில பேருக்குக் குணமான மாத்திரைகளை தருவதாக வைத்துக் கொண்டாலும் உடம்பின் தன்மை, மாத்திரையின் வீரியம்,. நோயின் தாக்கம் மருத்துவர்கள் தனது படிப்பு மற்றும் அனுபவத்தால் வைத்தியம் செய்வார்கள் என்றான்.

இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளியாக சாந்தன் அம்மா கல்யாணி நீ சொல்வதெல்லாம் சரி, உயிரோடு விளையாடக் கூடாது என்று கூறி விவாதத்திற்கு முற்றுப் புள்ளிவைத்தார்.

ஆனாலும் சாந்தன் சொன்ன மாதிரி வீட்டில் நடக்கவில்லை. அவரவர்கள் அந்தந்த நேரத்திற்கு தோன்றியபடி செய்தார்கள். சாந்தன் மருந்துக் கடைக் காரரிடம் சென்று இனிமேல் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மருந்து தராதீர்கள் என்றான். மருந்துக் கடைக்காரர் சாதுர்யமாக அவர்கள் வாங்கும் மருந்து அந்தப் பரிந்துரையில் உள்ளது தானே என்றார். நான் எதுவும் புதிதாக மருந்து தருவதில்லையே என்றார். இருந்தாலும் நீங்கள் சொன்னதை நினைவில் கொண்டு செயல்படுகிறேன் என்றார். சாந்தன் சற்று நிம்மதி அடைந்தான்.

மறுநாள் சாந்தன் அப்பா கண்ணன் மருந்துக் கடை சென்று ஒரு மாத்திரை கேட்க, மருத்துவர் பரிந்துரை சீட் இல்லையா என்றார். வழக்கமாக வாங்கும் மாத்திரை தானே என்றார் கண்ணன். உங்களுக்கு வயதாகி விட்டது. பரிந்துரை இல்லாத மாத்திரை தர இயலாது என்றார்.

உடனே கண்ணன் காலியான மாத்திரை கவரைக் காட்ட இந்தத் தடவை தருகிறேன். இனிமேல் நான் கேட்டதை கொண்டு வாருங்கள் என்றார். கண்ணன் மனதிற்குள் மருந்துக் கடையை மாற்ற வேண்டியது தான் என்று நினைத்தார். இதுவும் சாந்தனின் வேலை தானோ என்று ஐயப்பட்டார்.

சாந்தனுக்கு மருந்துக் கடைக்காரர் தொடர்பு கொண்டு உங்கள் அப்பா வந்து மருந்து கேட்ட போது நீங்கள் சொன்தை நினைவு கூர்ந்து பரிந்துரை சீட்டைக் கேட்டேன் என்றார். அப்பாவிற்கு சற்று வருத்தம் என்றார். சாந்தன் நன்றி என்றார்.

வீட்டிற்கு வந்த சாந்தனிடம் கண்ணன் ஏதும் கேட்பார் என்று எதிர் பார்த்தது வீணானது. உள்ளேயிருந்து வந்த தங்கை நீலா அம்மா மருத்துவரை காணச் சென்றுள்ளார்கள் என்றாள்.

என்ன எதாவது அசௌகரியமா என்று கேட்க மருத்துவர் பரிந்துரை சீட்டு பெறுவதற்கு என்றாள். மனதிற்குள் மகிழ்வாய் உணர்ந்தான் சாந்தன்.

அன்று அலுவலகத்தில் மாலை நேரம் சாந்தன் பத்திரிக்கையில் வந்த ஒரு உபயோகமான டிஜிட்டல் எண் பற்றிய செய்தியை படித்தான். அதன் பயன்பாட்டில் உள்ள நன்மைகளை மனதில் வரிசைப் படுத்தினான். உண்மையிலேயே ஆதார் எண் போன்றது தான் இது என்று எழுதி இருந்ததை கண்டு இது சௌகரியம் தானே என்று நினைத்தான். இது பயன்பாட்டுக்கு வந்தால் முதலில் நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது பயன்படுமே என்றான். ஆதார் போன்ற எண் என்றால் அனைத்து விவரங்களும் இருக்குமே என்று நினைத்தான். சீக்கிரம் இது பயன் பாட்டிற்கு வந்தால் நல்லதே என்று எண்ணினான்.

வீட்டிற்கு வந்தவன் எல்லோரிடமும் உடனே இதைக் கூற வேண்டாம் என்று முடிவு செய்தான். கண்ணன் சாந்தனை அழைத்து உன்னிடம் ஒரு சமாச்சாரம் சொல்ல வேண்டும் என்றார்.

என்ன சொல்லப் போகிறார் என்று சாந்தன் எதிர் பார்த்த வேளையில் கண்ணன் நான் தற்போது மருந்தின் முக்கியத்துவம் பற்றி நீ கூறியதை உள் வாங்கினேன். கண்ட மருந்தை சாப்பிடக் கூடாதென உணர்ந்தேன். இன்று நான் மாலை மக்கள் குரல் பத்திரிக்கையில் டிஜிட்டல் எண் பற்றிய பதிவைப் படித்தேன். மிகவும் உபயோகமான ஒரு செய்தி என்றார். அந்தக் கட்டுரையில் நான் படித்த வரிகளைக் கூறுகிறேன் என்றார்.

‘அதாவது மாத்திரைகள் வரைமுறையின்றி எடுத்துக் கொண்டால் அது கெடுதல் தானே. இந்த டிஜிட்டில் எண்ணால் மருந்து விநியோகத்தில் தவறுகள் ஏற்படாது. டிஜிட்டல் எண் ஆதார் எண் போன்றதே. நம்மைப் பற்றி எல்லா மருத்துவக் குறிப்புகளும் அடங்கியது தான் அது. தன்னிச்சையாக மருந்து வாங்கும் பழக்கத்தை குறைக்க முடியும் இதனால் என்றார். இது தற்காலத்திற்கு தேவையானஒன்றாகும்’ என்றார்.

மருந்து மேலாண்மையில் துல்லியத்தையும் பொறுப்பையும் உறுதி செய்யும் என்று படித்ததைக் கூறி, பயன்பாட்டில் வந்தால் நாம் பெற்று விடுவோம் என்றார்.

இவ்வளவும் கூறியது அப்பாவா என ஆச்சரியத்தில் மூழ்கினான் சாந்தன்.

நீலா சாப்பிடலாமா நேரம் ஆகுது என்று அழைத்ததும் சாந்தன் அப்பாவைக்கட்டிப் பிடித்து மகிழ்ந்தான்.

#சிறுகதை

Loading

One Reply to “கூறியது அப்பாவா – மு.வெ.சம்பத்

  1. அருமையான கதை, இந்த கதை நிறைய
    பேர்படிக்க வேண்டும்.
    பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *