செய்திகள்

கூட்டுறவு நிறுவனங்களில் தரமான பொருட்கள்: தமிழக அரசு விளக்கம்

தரம் குறைவு என்ற பேச்சுகே இடமில்லை

கூட்டுறவு நிறுவனங்களில் தரமான பொருட்கள்:

தமிழக அரசு விளக்கம்

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை

 

சென்னை, ஜூன் 20–

கூட்டுறவு நிறுவனங்களில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தரமற்ற பொருட்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

25.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நியாயவிலைக் கடைகள் வாயிலாக ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,000 கொரோனா ரொக்க நிவாரணத் தொகையானது வழங்கப்படும் என்னும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, 98.6 சதவீத அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த நிதியாதாரம் மூலம் முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருக்கும் தலா 5 கிலோ அரிசியினை இம்மூன்று மாதங்களுக்கும் விலையின்றி வழங்க ஆணையிட்டு ஏழை எளிய, அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெற்றுள்ளனர்.

நடமாடும் காய்கறிக்கடை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி தரமான காய்கறிகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வழங்கும் விதமாக கடந்த 29.3.2020 முதல் கூடுதலாக நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் தற்போது வரை செயல்பட்டு வரும் 188 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக 17.6.2020 வரை 4,593.048 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ 12.13 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தரமான பொருட்கள்

முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான 19 வகை மளிகைப் பொருட்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சில நாளிதழ்கள் தொடர்ந்து தவறான செய்திகள் வெளியிட்டு வருகின்றன. கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் மளிகைப் பொருட்கள் கூட்டுக்கொள்முதல் குழுக்கள் மூலம் தரமாகக் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொருட்களின் தரம் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் விற்பனை தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில், மக்களுக்குத் தேவையான மளிகைப்பொருள்கள் விற்கப்படும் கடைகள் மூடப்பட்டிருந்ததால், மளிகைப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களின் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்துடனும், தரமான மளிகைப் பொருள்கள் குறைவான விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய 10 லட்சம் தொகுப்புகளை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் ரூ.597 மதிப்புள்ள பொருள்கள் ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.37.77 கோடிக்கு விற்பனை

இடையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு தனியார் கடைகளும் விற்பனை செய்ய தொடங்கின. இருந்த போதிலும் ரூ.500 மதிப்பிலான 19 மளிகைப் பொருட்கள் 10 லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் (17–ந்தேதி வரை) 6 லட்சத்து 91 ஆயிரத்து 184 மளிகைத் தொகுப்புகள் ரூ.34.61 கோடி மற்றும் சில்லரை விற்பனையின் மூலம் ரூ.3.16 கோடி ஆக மொத்தம் ரூ.37.77 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்பட்டதால், வெளிச்சந்தையிலும் இப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் மக்கள் எளிதில் பெறுகிறார்கள். ஆயினும், தரமான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் தான் பொதுமக்கள் இதுவரை ரூ.37.70 கோடி மதிப்புள்ள மளிகை பொருட்களைப் பெற்று உள்ளனர். ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு அனைத்து தனியார் கடைகளும் திறக்கப்பட்ட போதிலும் மளிகைத் தொகுப்புகள் தொடர்ந்து விற்பனையாகி வருவதே இவற்றின் தரத்திற்கு சான்றாகும்.

அதுமட்டுமின்றி விற்காத பொருட்களை விற்பனையாளர்களை பெற்று செல்ல அலுவலர்களே நிர்பந்திக்கிறார்கள் என்பதும் தவறான செய்தியாகும். இம்மளிகைப்பொருள்களைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டிற்கே சென்று ரூ.218 கோடி நிவாரணம்

தற்போது முதலமைச்சரால் பெருநகர சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முழு ஊரடங்கு 19–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த அரிசி பெறும் 21.83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.218 கோடியே 35 லட்சம் மதிப்பில் தலா ரூ.1,000 ரொக்கம் அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இப்பணியினையும் துறை அலுவலர்கள், ஊழியர்கள் எவ்வித தொய்வுமின்றி வழங்கவுள்ளார்கள்.

ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

இப்பணியில் ஈடுபடும் நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு, ஒருமுறை ஊக்கத்தொகையாக விற்பனையாளர்களுக்கு ரூ.2500 ம் கட்டுநர்களுக்கு ரூ.2000 அனுமதித்து அரசு ஆணையிட்டுள்ளது.

பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாத நேரங்களில் அத்தியாவசியப்பொருள்களின் விநியோக சேவை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், பொது விநியோகத்திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தினசரி போக்குவரத்து செலவினமாக ரூ.200 அனுமதித்து ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு சம்பள விகித மாற்றம் செய்து உயர்த்தி வழங்கப்பட்டு சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து பொதுவிநியோகத்திட்டப்பணியாளர்களுக்கும், போதிய முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகையில், தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் பொதுவிநியோகத்திட்ட பணியாளர்களுக்கு அரசின் நிதியுதவிகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் போக்குவரத்து இல்லாத நேரத்திலும் தங்களது சிரமங்களை பொருட்படுத்தாமல் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சுணக்கம் அடைந்துவிடாமல் பணியாற்ற இது போன்ற செய்திகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *