சிறுகதை

கூட்டத்தில் வடை – ராஜா செல்லமுத்து

மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் பெரிய பெரிய ஆட்கள் பேச்சாளர்கள் என்று கலந்து கொண்டு அவர்கள் கருத்துக்களை பரிமாறினார்கள்.

அவ்வளவு அதிகமான கூட்டம் இல்லை என்றாலும் கூடி இருந்தவர்கள் எல்லாம் அறிவு சார்ந்த ஆட்களாக இருந்தார்கள்.

ஒரு பெண் வழக்கறிஞர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு தன் கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருந்தார்.

அவர் பேசும் போதும் சரி, அதற்கு முன்னால் பேசும் போதும் ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சாளர்கள் பேசுவதை மறந்துவிட்டு சில பேர் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் சின்னச் சின்னதாய் பேசிக் கொண்டிருந்தது. அங்கே கூடி இருந்தவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

ஏன் இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்று ஒருவருக்கொருவர் வருந்திக் கொண்டார்கள்.

அந்தப் பெண் பேச்சாளர் சமூகத்தைப் பற்றிய அக்கறையில் பயங்கரமாக பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது வடையை சில்வர் தட்டில் வைத்துக் கொண்டு ஒருவர் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே வந்தார் .

வடையை எடுத்தவர்கள் லாவகமாகக் கடித்து சாப்பிட்டபடியே பேசுபவரின் பேச்சை சிலாகித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

வடைத் தட்டு கூட்டத்தில் ஊர்வலமாக வந்தது.

எப்போது தன் பங்கிற்கு வடை வரும் என்று சில பேர் பேசுவதை விட்டுவிட்டு வடையை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள்.

சில்வர் தட்டில் வைக்கப்பட்ட வடையை எடுத்து மொறு மொறு என்று கடித்து தின்று கொண்டிருந்தார்கள் .

பேசுவதற்கு தான் எனர்ஜியும் தண்ணியும் தவிக்கும் என்ற விதி இருந்தபோது பார்வையாளர்களாய் அமர்ந்திருந்தவர்கள் வடையை விழுங்கி தண்ணீரைக் குடித்து கொண்டு இருந்தார்கள் .பேசிக் கொண்டிருந்தவருக்கு நாவில் எச்சில் ஊரினாலும் சபை நாகரீகம் கருதி உதடு வரை வந்த எச்சிலை உள்ளுக்குள்ளே விழுங்கிக் கொண்டார்.

வடை பரிமாறிய சமயத்தில் அத்தனை பேரின் எண்ணமும் செயலும் கொஞ்சம் மாறி இருந்தது உண்மைதான் .

கூட்டம் முடியும் தருவாயில் ஒரு பெண் எழுந்து அங்கே இருந்த மைக்கை எடுத்து,

இது என்ன நாகரீகம் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது இப்படி வடையை எல்லோருக்கும் கொடுப்பது தவறு. வடை ஒன்றும் பறந்து போகப்போவதில்லை ஒன்று கூட்டம் முடிந்த பிறகு சாப்பிடலாம் அல்லது கூட்டத்திற்கு வரும்போது சாப்பிட்டு வரலாம்.

இது இரண்டும் இல்லாமல் இவ்வளவு பெரிய விஷயத்தை பேசிக் கொண்டு இருக்கும் போது வடையைப் பரிமாறியது தவறு என்று சொன்னார்.

கூட்டத்திலிருந்தவர்கள் யாரும் பேசவில்லை . அந்த பேச்சாளருக்கு வேண்டுமானால் ஒரு கசப்பு தன்மை இருக்கலாம். காரணம் அவருக்கு வடை கொடுக்கப்படவில்லை என்பதாக கூட இருக்கலாம்.

ஆனால் வடையைப் பற்றி பேசும் பாேது அவரும் வடையை சாப்பிட்டு விட்டுத் தான் அந்தப் பெண்ணும் பேசினார் என்பது அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் .

இனிமேல் கூட்டம் கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது வடை சாப்பிடக்கூடாது என்று சொன்னார் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் உதட்டில் வடையின் மிச்சம் கொஞ்சம் ஒட்டி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.