போஸ்டர் செய்தி

கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, மே.22-

வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்துமுடிந்து, நாளை (வியாழக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அவரை கட்சித் தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர்கள் சிவ்ராஜ்சிங் சவுகான், கிரிராஜ்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார், சிவசேனைக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் உறுதியுடன் தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள், தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியுள்ளன; சாதிகள் அடிப்படையிலான அணுகுமுறை மாற வேண்டும், ஏழைகள் நலன் சார்ந்ததாக அணுகுமுறை இருத்தல் வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பட வேண்டிய திட்டம் முன்வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்து 2022ம் ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவு ஆகிறது. இதற்குள் வலுவான, வளர்ச்சியடைந்த, அபிவிருத்தியான நாடாக இந்தியாவை உருவாக்க உறுதியெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் முன்மொழிந்தார்.

அமித்ஷா வாழ்த்து

இதுபற்றி அமித்ஷா டுவிட்டரில், “கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான பணிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக மோடி அரசுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியாவை நோக்கி பயணித்த இந்த தருணங்களை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் அமித்ஷா பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.

ஆலோசனை கூட்டம் மற்றும் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைப் பொருளாளர் எல்.கே. சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக காலையில் அமித்ஷா மத்திய அமைச்சர்களை சந்தித்து 5 ஆண்டு சேவைக்காக நன்றி தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைக்கு கண்டனம்

முன்னதாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கம், கேரள தேர்தல் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–

இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. மோடி ஆட்சியில் வரலாற்றுத் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சகிப்பில்லா கொள்கையை பின்பற்றி வருகிறோம்.

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அரசியல் வன்முறைகளுக்கு கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், தேர்தல் ஆணையம், நீதித் துறை, காவல் துறை, பாதுகாப்புப் படைகள் மீது எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிக்கிறோம் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *