செய்திகள்

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தி.மு.க.வினர் பதவியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மார்ச் 5–

நகராட்சி, பேரூராட்சி மறைமுக தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க.வினர் உடனே பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்ற இடங்களில் சில நகராட்சிகள், பேரூராட்சிகளில் தி.மு.க. தலைமையின் அறிவிப்பையும் மீறி, அக்கட்சி உறுப்பினர்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தட்டிப்பறித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த இக்கட்டான நிலையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவசரமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் அதிரடியாக வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுக தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலையடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்ன “கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில்” மூன்றாவதாக சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார்.

அந்த கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கட்சி தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்த காலத்திலும் உருக்குலைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

தி.மு.க. தலைமை அறிவித்ததை மீறி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகவேண்டும். விலகாவிட்டால் அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சி தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கட்சியின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்த பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.