செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூல், அனுமதியின்றி பஸ் இயக்கம்: தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

சென்னை, அக். 21–

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி இயங்கிய ஆம்னி பேருந்துகள் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையுடன் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சேர்த்து தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக ரெயில்களில் பலர் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தனர். இதுதவிர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும் மக்கள் செல்கின்றனர்.

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களை குறி வைத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதன்படி போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல், அனுமதியின்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 5 ஆயிரம் பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 70 பஸ்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யபட்டிருந்தன. இந்நிலையில் கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இது போன்ற அதிரடி நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக மேற்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

கூடுதல் கட்டணம்

வசூல்

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, சண்முகஆனந்த், சிவக்குமார், கருப்புசாமி ஆகியோர் திண்டுக்கல்லில் பழனி மற்றும் வத்தலக்குண்டு புறவழிச்சாலைகளில் நேற்று அதிகாலையில் ஆம்னி பஸ்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் செயலிகளில் கட்டணத்தை ஆய்வு செய்தனர்.

அதில் சென்னையில் இருந்து பழனி, தேனிக்கு சென்ற 4 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 4 ஆம்னி பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் வருகிற 25-ந்தேதி காலை வரை தினமும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் தொடர்பாக சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதே போல் திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முனுசாமி உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி, பறக்கும் படை அலுவலர் தனபால் ஆகியோர் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அதிக பயணக் கட்டணம், அனுமதி சீட்டு, சாலை வரி செலுத்தாமல் இயங்கிய 3 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *