கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னிடம் இருப்பதை கொடுக்கும் குணம் கொண்டவன் ரவிச்சந்திரன் .
அதனால் அவனிடம் கேட்டால் எப்படியும் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் பணம், பொருள் என்று தங்களுக்கு தேவையானதை ரவிச்சந்திரனிடம் கேட்பார்கள்.
ரவிச்சந்திரன் அவர்கள் கேட்பதை தயங்காமல் கொடுத்து விடுவான். அதனால் நண்பர்கள் வட்டத்தில் ரவிச்சந்திரன் நல்ல மனிதன் என்று பெயரெடுத்தான்.
நல்லவர்கள் என்பவர்கள் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பவர்கள். இல்லையென்றால் அதே நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவார்கள்.
அவர்களுக்கு இந்தச் சமூகம் இட்ட அவப்பெயர். இது இரண்டையும் கடந்து வாழ்ந்து வந்தான் ரவிச்சந்திரன்.
அவனுடைய மாத வருமானம் அவனுடைய தேவையே பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இருந்தாலும் அவனிடம் ஏதாவது உதவி கேட்டால் அவனால் முடிந்ததை செய்வான்.
ஒரு நாள் ரவிச்சந்திரனின் நீண்ட நாள் பழகிய மதன் பணம் கேட்டிருந்தார் .
முதலில் அவர் கேட்ட பணத்தை ரவிச்சந்திரன் கொடுத்தான் திரும்பவும் ஒரு முறை மதன் பணம் கேட்டார் . அப்போதும் ரவிச்சந்திரன் பணம் கொடுத்தான்.
அதன் பிறகு மதன் கேட்ட பணத்தை ரவிச்சந்திரன் கொடுக்க முடியவில்லை . அது அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது.
ரவிச்சந்திரனிடம் மதன், முன்னே இருந்ததை விட இப்போது கொஞ்சம் விலகி இருப்பதை அறிந்து கொண்டான்.
ரவிச்சந்திரன் ஒரு முறை கேட்டு விட்டான்.
என்ன மதன் முன்ன மாதிரி இப்ப நீங்க பேசுறது இல்ல என்று பளிச்சென கேட்டபோது
அதற்கு ஏதோ சமாளித்தார் மதன். நீங்க பணம் கேட்டீங்க. நான் தரல அதிலிருந்து நீங்க சரியா பேசுறதில்ல என்று ரவிச்சந்திரன் சொன்னது தான் தாமதம் |
அது எப்படி என்னை நீங்க இவ்வளவு கீழ்த்தரமாக எண்ணலாம் நீங்க என்னை எப்படி? என்று விதண்டாவாதம் செய்தார் மதன்.
உங்கள் நடவடிக்கையை பார்த்துட்டு தான் நான் சொல்றேன் இது தப்புன்னா என்னை மன்னித்துவிடுங்கள். இல்லை ரைட் ,சரின்னு தலையாட்டுங்க என்றான் ரவிச்சந்திரன்
ஆனால் மதன் விடுவதாக தெரியவில்லை . அதையே பேசிக்கொண்டு இருந்தார் .
சரி விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அன்றிலிருந்து மதனுடன் பேசுவதைக் கொஞ்சம் தவிர்த்தான் ரவிச்சந்திரன்.
அதேபோல் ரவிச்சந்திரன் இன்னொரு நண்பர் ஆன அரியபத்திரி பணம் கேட்டார். முதலில் பணத்தை கொடுத்தார் . கொடுத்த பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை .
மறுபடியும் அரியபுத்திரி பணம் கேட்க அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று சொன்னார் ரவிச்சந்திரன்.
அன்றிலிருந்து அரியபத்திரியும் பேசுவதில்லை.
என்ன இது ஒரு மனிதனுக்கு பணம் கொடுத்தால் மட்டும்தான் பேசுவார்களா ? பணம் கொடுக்கவில்லை என்றால் பேசமாட்டார்களா ? இது என்ன உலகம் ? என்று ரவிச்சந்திரன் அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக் கொண்டான்.
முன்பு நண்பர்களாக இருந்த மதனும் அரிய பத்திரியும் இப்போது எதிரிகளாகி விட்டார்களே ? அவர்கள் முதலில் பணம் கேட்கும் போதே இல்லை என்று சொல்லியிருந்தால் ,நண்பர்களாக இருந்திருப்பார்களே .
இப்போது அவர்களிடம் பணத்தையும் கொடுத்துவிட்டு வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டாேமே.
இனிமேல் இதுபோல் தவறு செய்யக் கூடாது என்று நினைத்தான் ரவிச்சந்திரன்.
ஒரு நாள் ஆசுவாசமாக ஒரு கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது பால்ராஜ் , ரவிச்சந்திரன் நோக்கி வந்தார்.
என்ன பால்ராஜ் டீ குடிங்க? என்று ரவிச்சந்திரன் சொன்னதும் தலையை சொரிந்த படியே தலையாட்டி சமிக்கையில் சரி என்று சாெல்ல
டீ குடுங்க என்று சொன்ன ரவிச்சந்திரன். டீ குடிப்பதில் கவனம் செலுத்தினான்.
தலையைச் சொரிந்து கொண்டு நின்று கொண்டிருந்த பால்ராஜ் ரவி….. என்று இழுத்தார்
சொல்லுங்கண்ணே என்ற ரவிச்சந்திரனிடம்
கொஞ்சம் பணம் தேவைப்படுது; எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா? என்று பால்ராஜ் கேட்டபோது ,
நீங்க எவ்வளவு வேணாலும் சாப்பாடு வேணும் எனக் கேளுங்க. நான் சாப்பாட்டு வாங்கிக் கொடுக்கிறேன்.
ஆனா பணம் மட்டும் கேட்காதீங்க . ஏன்னா நீங்க என்னோட நல்ல நண்பனா இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் என்றான் ரவிச்சந்திரன்.
இப்படி பளீரெனச் சாென்ன ரவிச்சந்திரனை ஒரு மாதிரியாக பார்த்து மெளனமாகிப் போனார் பால்ராஜ்.