சென்னை, ஜூலை 23–
குவைத்திலிருந்து பெல்டில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ. 1.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்தடைந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சுங்கவரி செலுத்தும் எந்த பொருள்களை கொண்டுவராத நிலையில், பயணி வெளியே செல்ல முற்பட்ட போது, சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனே அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது இடுப்பு பெல்ட்டில் மறைக்கப்பட்ட தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததை உறுதி செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2.4 கிலோ இருக்கும் எனவும், இதன் மதிப்பு ரூ. 1.3 கோடி இருக்கக் கூடும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தீவிர விசாரணையில், குவைத்தில் விமான நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய இடுப்பு பெல்ட்டை எடுத்துக் கொண்டு, அவர்கள் வைத்து இருந்த புதிய இடுப்பு பெல்ட்டை மாட்டி விட்டதாகவும் இது போன்ற கடத்தல் தொழிலுக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும், இதை சென்னை விமான நிலையம் வெளியே வேறொருவர் தன்னை அடையாளம் கண்டு தங்கபெல்ட்டை பெற்றுக் கொள்வார் எனவும் இதன் மூலம் கை மாறியதும் உடனே உனக்கான பணம் சேர்ந்து விடும் எனவும் அவர் அளித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட நபரின் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.