செய்திகள்

‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்: ஜோ பைடனை சந்திக்கிறார்

Makkal Kural Official

புதுடெல்லி, செப்.20-

‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாைள அமெரிக்கா செல்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.

இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்ேதாணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை அமெரிக்கா செல்கிறார்.‘குவாட்’ உச்சி மாநாட்டில் ரஷியா-–உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ- பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர். தலைவர் களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறு கின்றன.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களுடனும் பிரதமர் மோடி தனித்தனி சந்திப்புகளை நடத்த உள்ளார்.

குவாட் மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா வில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சி மாநாட்டில் 23-ந்தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

முன்னதாக நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் 22-ந்தேதி அவர் சிறப்புரை நிகழ்த்துகிறார். இவற்றை தவிர அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பை சந்திப்பார் என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன்தினம் டிரம்ப் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் தொடர்பாக மத்திய வெளி யுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் மிகவும் முழுமையான மற்றும் அடிப்படையான நிகழ்ச்சி நிரல் இடம்பெறும். மாநாட்டில் நடைபெறும் விவாதங்களின் முடிவில் தலைவர்களின் பிரகடனம் வெளியிடப்படும். நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்து தல், பொதுப் பொருட்களை வழங்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் மேம்பாட்டு முன்னுரிமைகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

சுகாதார பாதுகாப்பு, காலநிலை மாற்றம், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இணைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் அடைந்த முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் அடுத்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கும் இதில் வாய்ப்பு உருவாகும். ஜோ பைடன் மற்றும் பிரதமர் கிஷிடா ஆகியோருக்கு இது ஒரு வகையான பிரியாவிடை நிகழ்வாக வும் இருக்கும். இந்த மாநாட்டில் புற்றுநோய் தொடர்பான முக்கிய நிகழ்வு நடைபெறும்.

அமெரிக்கா தலைமையிலான இந்தோ – -பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடர்பாக ஒரு ஒப்பந்தமும், இந்தியா-– அமெரிக்கா மருந்து கட்டமைப்பு தொடர்பாக மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்து போடப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *