நாடும் நடப்பும்

‘குவாட்’ நடவடிக்கைகள்: இந்தியா – ரஷ்யா உறவுகளுக்கு புது சவால்


ஆர். முத்துக்குமார்


ரஷ்யா உக்ரைனில் நடத்தி வரும் கலவரத்தினால் உலக நாடுகள் இரு துருவங்களாகப் பிரிந்து இருப்பதை அறிவோம். இது ஐரோப்பிய நாடுகளின் சிக்கல்கள் என்பதாக இல்லை.

ஆசிய பகுதியிலும் உள்ள நாடுகளும் பிரிந்துள்ளது. ரஷ்யாவின் எல்லை பெரும்பகுதி ஆசியாவிலும் இருப்பதை அறிவோம். ஜப்பான், சீனாவுடனும் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான ஆசிய நாடுகள் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு தருவதை அறிவோம்.

இந்தியா – ஐநா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்துள்ளது. மேலும் இச்சிக்கல் முடிவுக்கு வர ரஷ்யாவையும் உக்ரைனையும் உயர்மட்ட தலைவர்கள் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும் என்றும் கோரி வருகிறது.

இந்நிலையில் தான் அமெரிக்க ஜனாதிபதி பிடன் ஜப்பானில் ‘குவாட்’ கூட்டணியின் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ளார். ‘குவாட்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியாவும் பங்கேற்கிறது. அதற்காக பிரதமர் மோடியும் அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குவாட் அமைப்பின் 3-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். குவாட் அமைப்பின் தலைவர்கள் நேரடி யாக கலந்து கொள்ளும் 2-வது உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அப்பானீஸ் ஆகியோரை பிரதமர் மோடி தனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். ரஷ்யா –- உக்ரைன் போர் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் உட்பட பல்வேறு விஷங்கள் குறித்து குவாட் மாநாட்டில் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, ஜப்பானில் சுமார் 40 மணி நேரம் தங்குகிறார். இதில் அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பிரதமர்களுடனான சந்திப்பு உட்பட மொத்தம் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். 35 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் மோடியை சந்தித்துப் பேச உள்ளனர்.

இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு மிகப்பெரிய சவாலாகும். காரணம் ‘குவாட்’ அமைப்பில் உள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா 3 நாடுகளுமே ரஷ்யாவை உலக வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றி விட்டனர். ஜப்பானுக்கு ரஷ்யாவுடன் வரப்பு பிரச்சனை பல ஆண்டுகளாகவே இருப்பதால் அவர்களது கோரிக்கைகளின் பின்னணியில் ஏதேனும் நியாயம் இருக்கும்.

ஆனால் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ரஷ்யா மீது இருக்கும் எதிர்ப்பு எந்த நியாயமான காரணங்களுக்காகவும் கிடையாது!

இந்த நிலையில்தான் சிக்கல் நிறைந்த முட்புதராக தெரியும் ‘குவாட்’ மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி.

மேலும் ஜனாதிபதி பிடன் 13 ஆசிய பகுதி நாடுகளைக் கொண்ட ஓரு புதிய கூட்டணியாக ‘இந்தோ பசுபிக்’ பொருளாதார கட்டமைப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்.

இது நேரடியாகவே ரஷ்யாவுடன் சேராதே என்று அமெரிக்கா மிரட்டுகிற அம்சமாகவே தெரிகிறது.

இதுவரை அமெரிக்கா இந்தியாவகிடம் எதையும் கேட்கவே இல்லை. ஆனால் ரஷ்யா மீது இந்தியா வைத்திருக்கும் அன்பைக் கண்டு பொருமிக் கொண்டு தான் அமெரிக்கா உற்று நோக்கி வருகிறது.

இந்த 13 நாடுகளின் கூட்டமைப்பு அமெரிக்க எதிர்ப்பு அரசியலை கட்டவீழ்த்து விட இருக்கிறது.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் ரஷ்யாவை அசைத்துப் பார்க்க முடியாத வலுவான நிலையில் 3 மாத போர் பதட்டத்திற்கு பிறகும் போர் தொடர்வதை அமெரிக்கா விரும்பவில்லை! அடுத்ததாக 13 ஆசிய நாடுகளையும் தன் கூட்டணியில் சேர்ந்தால் ரஷ்யாவை கலங்க வைத்து விடலாம் என்று் அமெரிக்கா கணக்குப் போடுகிறது.

அமெரிக்காவின் அந்த கனவை நனவாக விடமாட்டோம் என்று ரஷ்யா உறுதியாக நம்புகிறது. ‘குவாட்’ நாடுகள் இந்தியாவை ரஷ்யாவை நம்பாதே என்று கேட்கப் போகிறது. ரஷ்யா – அமெரிக்க நாடுகள் இரு துருவமாக பிரிந்து செயல்பட வைப்பதே அமெரிக்காவின் ஆசை!

இதை இந்தியா சமாளித்து தனது திட்டங்களைத் தொடர பிரதமர் மோடி சொல்லி இருக்கும் கருத்துக்களை கேட்க உலகத் தலைவர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published.