சிறுகதை

குழுமைகள் – ராஜா செல்லமுத்து

கண்ணா இந்த கேப்பையை குழுமையில போட்டுட்டு வா என்று சொல்லுவாள் ஆத்தா .

எந்த குழுமை ஆத்தா ?

முதல் குமுமையா? கடைசிக் குழுமையா? என்று எதிர் கேள்விகள் கேட்டால் மாெதக் குழுமையில கேப்பையைப் போடு . ரெண்டாவது குழுமையில வரகரிசியைப் போடு, மூணாவது குழுமையில கோதுமையை போட்டு வை. நாலாவது குழுமையில அரிசியை போட்டு வை

என்று ஒவ்வொரு குழுமையிலும் தனித்தனியாக தானியங்களைப் போடச் சொல்லுவாள் ஆத்தா.

அவள் கீழே பரப்பி வைத்த தானியங்களை சாெலகு கொண்டு புடைத்து கல் ,மண். தூசி பார்த்து கொடுப்பாள்.

அத்தனை தானியங்களையும் வாங்கி அதனதன் குழுமைகளில் போட்டு வைப்பேன்.

இலக்கியத்தில் குதிர் , பத்தாயம், முதுமக்கள் தாழி என்று அழைக்கப்படுவதை குழுமை என்றே எங்கள் பகுதியில் அழைப்பார்கள்.

எங்கள் வீட்டில் நான்கு குழுமைகள் இருந்தன. மழை,வெயில், புயல், உணவு பஞ்சம் என்று எது வந்தாலும் ஆத்தா குழுமையில் சேர்த்து வைத்திருக்கும் தானியங்கள் எங்கள் பசியை ஆற்றும். கூடவே எங்கள் கிராமத்தில் யாராவது பசி, உலை வைப்பதற்கு அரிசி இல்லை என்று வந்தால் அவர்களுக்கும் தானியங்களை அன்பாக அள்ளிக் கொடுப்பாள் ஆத்தா.

வீட்டின் சுவர் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நான்கு குழுமைகளும் ஒரு வரலாறு உண்டு.

எதுக்குத்தா நாலு குழுமை என்று ஆத்தாவிடம் கேட்டால்

வெள்ளந்தியாகப் பதில்சொல்லுவாள் ஆத்தா

டேய் கண்ணு… எனக்கு பெறந்தது எல்லாம் நாலு ஆம்பள பயலுக தானே? உன் சித்தப்பன், பெரியப்பன் அவங்களுக்கு எல்லாம் சீதனமா கொடுக்குறதுக்கு தான் இந்த நாலு குழுக்கய வாங்கி வச்சிருக்கேன் என்று கிராமத்து பேச்சு வழக்கில் பேசுவாள்,

அரிசி, கோதுமை ,சோளம், வரகு என்று நிரப்பி வைத்திருக்கும் அந்தக் குழுமைகளின் கீழே சில நேரங்களில் எலிகள் குழி தோண்டி தானியங்களை திருடித் திங்கும்.

திருடியா திங்கிறிங்க உங்கள என்ன பண்றேன் பாருங்க என்று எலி பிடிக்கும் கூண்டை வைத்து எலியைப் பிடித்து அதைச் சாகடிக்காமல் உயிராேட விட்டுவிடுவாள் ஆத்தா.

உங்களுக்கு தான் தானியத்தை தனியா வச்சிருக்கேன்ல. பெறகு எதுக்கு குழுமையில் ஓட்டை போட்டு அதைத் திருடித் தின்கிறிங்க என்று எலியுடன் பேசுவாள்.

சிக்கிய எலியை அழிக்காமல் தூரத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுவாள்.

குழுமை நான்கையும் ஆத்தாவின் அம்மா வீட்டுச் சீதனமாக வாங்கி வந்ததாக அடிக்கடி சொல்லுவாள் ஆத்தா.

வெறும் மண்ணாலான அந்தக் குழுமைகளைத் தெய்வமாக வணங்கினாள் அவள்.

தீபாவளி, பொங்கல் என்று வந்து விட்டால் அவைகளுக்கு வெள்ளை அடித்து சுற்றி பார்டர் போட்டு வைப்பது வழக்கம்.

தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கி சாமிக்கு சமம் என்று குழுமைகளை கையெடுத்து கும்பிடுவாள் ஆத்தாள்.

காலங்கள் கடந்தன. ஆத்தா தவறிவிட்டாள். எளிமையாக இருந்த வீடு காெஞ்சம் மாடர்னாக மாறியது.

இருக்கும் வரைக்கும் தானிய கிட்டங்கியாக, சாமியாக வணங்கப்பட்ட குழுமைகள் இப்பாேது கேட்பாரற்றுக் கிடந்தன.

நாகரிகமான இந்த ஒலகத்துல இவ்வளவு பெரிய குழுமைகள் நமக்கு எதுக்கு ?அதுவும் இப்ப எல்லாம் அரிசி, பருப்பு வாங்கி இதுல சேமிச்சு வைக்கிற அளவுக்கு பஞ்சம் இன்னும் வரல. அதனால இந்த குழுமைகளை நம்ம வீட்டில இருந்து எடுத்திடலாம். இந்த நாலு குழுமைகள் வீட்டை விட்டு போச்சுன்னா நமக்கு நெறைய இடம் கிடைக்கும். சொந்த பந்தம் வந்தா விசாலமாக படுத்து இருந்துட்டு போயிருவாங்க

என்று இப்போதுள்ள தலைமுறைகள் நாகரிகம் பற்றி பேசிக் கொண்டார்கள் .

ஒரு நல்ல காரியத்திற்காக வெளியூரில் படித்துக் கொண்டிருந்த நான் ஊருக்குச் சென்றேன்.

தாத்தாவும் ஆத்தாவுமற்ற அந்த வீடு வெறுமையாக கிடந்தது .

சரி அவர்கள் சேமித்து வைத்த குழுமைகளையாவது பார்க்கலாம் என்று வீட்டுக்குள் நுழைந்த எனக்கு சுரீர் என்று உரைத்தது.

இங்கிருந்த குழுமைகள எங்க? என்று கேட்டபோது

அதுக எதுக்கு சும்மா வீட்டை அடைச்சு வச்சுக்கிட்டுன்னு தூக்கி தூரப் பாேட்டுட்டாேம் என்று உறவினர்கள் சொன்னார்கள்.

ஏன் தூக்கி போட்டீங்க ? என்ற போது இப்பல்லாம் அதுக எதுக்கு? அது வேண்டியதில்லை. நமக்குத் தேவை பணம்தான் .பணம் இருந்தா இங்க எல்லாத்தையும் வாங்கலாம். வீட்டுல அடைச்சு வச்சிருக்கிற அந்த குழுமைகளால் எந்த பிரயோஜனமும் இல்ல.

அதான் தூக்கி ஓடையில போட்டுட்டோம் என்று வீட்டில் இருந்தவர்கள் சொன்னபோது

எனக்கு கடுங்காேபம் வந்தது.

என்ன இது முதுமக்கள் தாழி போன்ற அந்த பத்தாயத்த கீழ தூக்கிப் போட்டீங்களா? அது வெறும் குழுமம் மட்டுமில்ல. அதுல தான் தாத்தா பாட்டியோட உயிர் இருக்கு. அதை ஒரு நெற்களஞ்சியமா தான் பார்த்தாங்க .

நீங்க அதை வெறும் எடத்த அடைக்கிற பொருளா மட்டும் தான் பார்த்திருக்கிறிங்க. அதுதான் உங்க தலைமுறைக்கும் தாத்தா பாட்டி வாழ்ந்த தலைமுறைக்கு உள்ள வித்தியாசம்.

என்று குழுமைகளை உடைத்த இடம் தேடி ஓடினேன் .

அங்குமிங்கும் தேடி அலைந்தேன் குழுமைகள் கண்ணில் படவில்லை . தேடிப் பார்த்தபோது கண்ணுக்கட்டிய தூரம் வரை குழுமைகள் தென்படவே இல்லை.

வேகமாக நடக்கும் பாேது என் காலில் ஏதோ தட்டுப்படுவது போல் தெரிந்தது. குனிந்து பார்த்தேன். சிதறிக்கிடந்த குழுமையின் சில்லுகள் அங்கங்கே உடைந்து நொறுங்கிக் கிடந்தன.

நாகரிகம் என்ற பெயரில் மனிதன் வாழ்ந்த வரலாற்றை அழிக்கிறார்கள். இது நியாயமா? என்று நினைத்த நான் உடைந்த குழுமைகளின் சில்லுகளை எல்லாம் ஒன்றாகச் சேகரித்து அடுக்கினேன் .

அந்தக் குழுமைகள் என்னிடம் பேசுவது போல இருந்தன.

என்ன கண்ணா எப்படி இருக்க? காலம் மாறிக்கிட்டே வருதுய்யா. எங்களுக்கும் வயசு ஆச்சுல்ல.. அதான் தூக்கி உடைச்சிட்டாங்க. குழுமைகள் என்னிடம் பேசுவது போல் இருந்தன.

என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

ஆத்தா தாத்தா நல்லா இருக்கீங்களா என உதடுகள் முனுமுனுத்தன.

–––––––––––––––––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *