செய்திகள்

குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில், எப்படி எரிவாயு வரும்? ப.சிதம்பரம் கேள்வி

காரைக்குடி, ஏப். 15–

குழாய் மூலமாக எரிவாயு வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்த நிலையில், ‘குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், எரிவாவு எப்படி வழங்குவார்கள், இது வேடிக்கையான வாக்குறுதி’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இல்லை. நாட்டில் 5 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிடி ஆயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்? குழாய் மூலமாக தண்ணீரே வழங்க முடியாதவர்கள், சமையல் கியாஸ் எப்படி வழங்குவார்கள்? குழாய் மூலமாக கியாஸ் என்பது வேடிக்கையான அறிவிப்பு. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்பாடு 3.7 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. எரிவாயு விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க, கூறியது பொய்க்கணக்கு. 4 கோடி வீடுகளை கட்டியிருந்தால், சராசரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 52 ஆயிரம் வீடுகளை கட்டி இருக்க வேண்டும். அப்படியெனில் சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளை காட்ட முடியுமா?

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பா.ஜ.க. ஒத்திப் போட்டுள்ளது. 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பா.ஜ.க. அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வராது. வேளாண் விளைப்பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல.

அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற வாக்குறுதியும் வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பா.ஜ.க, அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்தாதது ஏன்?. 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ரூ.11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ.க. அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *