தனலட்சுமிக்கு அவ்வளவு வருத்தம். அவ்வளவு சோகம். இனியும் இந்த பூமியில் நாம் வாழ்வது சாத்தியம் இல்லை. அதற்கான சூழலை நாம் குடும்பம் உருவாக்கித் தரவில்லை. எதற்கெடுத்தாலும் பிரச்சனை. எதற்கெடுத்தாலும் சந்தேகம். எதற்கெடுத்தாலும் நம்பிக்கையின்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உயிரைப் பிடித்து வாழ்வது என்பது உத்தரவாதம் இல்லை தான். எவ்வளவு நாள் தான் நாம் சகித்துக் கொண்டு வாழ முடியும் .கணவன் ஒரு பக்கம் தொல்லை என்றால் உறவுகள் மறுபக்கம் தொல்லை. நிம்மதி இல்லாத இந்த வாழ்க்கையை எவ்வளவு தூரம் தான் கொண்டு போக முடியும். நானும் மனுஷி தானே? எனக்கும் ஆசா பாசங்கள் இருக்கத் தானே செய்கின்றன.
ஏன் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இந்தக் குடும்பத்தினர்கள். வெளியில் செல்லக்கூடாது. யாருடனும் பேசக்கூடாது. சுதந்திரமாக இருக்கக் கூடாது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பொய்யான மாயை இவர்களுக்குள் கட்டி வைத்துக்கொண்டு ஏன் என்னை அதற்குள் அடக்க நினைக்கிறார்கள்? நான் ஒன்றும் தவறாக போகவில்லையே? நான் ஏதும் தவறு செய்யவில்லையே? தவறே செய்யாத என்னை ஏன் மறுபடியும் மறுபடியும் அந்த தப்பான வளையத்திற்குள் என்னைச் சிக்க வைக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இந்த அவஸ்தையைப் பட்டு தான் இந்த வாழ்வை நான் வாழ வேண்டி இருக்கிறது.
துயரம் தூரம் போகும் என்றால் மறுபடியும் மறுபடியும் நம்மை நெருங்கிக் கொண்டே இருக்கிறதே? இந்த வாழ்க்கை நமக்கு அவசியமற்றது. தேவையற்றது. என் மரணம் தான் அவர்களுக்கு அதைப் புரிய வைக்கும் என்றால் அதற்காக நான் என்னை இழக்கவும் தயாராக இருக்கிறேன். வேண்டாம் இந்த இழிவான வாழ்க்கை என்று முடிவெடுத்து வாழ்வை வெறுத்து பேருந்தில் ஏறி பயணப்பட்டாள் தனலட்சுமி.
பேருந்து நகர்ந்து போகும் திசையெங்கும் அவளின் எண்ணங்கள் அவளை அரித்துக் கொண்டிருந்தன. அவளை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. நாம் எடுத்த இந்த முடிவு சரிதான். இந்த வாழ்க்கையை இப்போது நாம் முடித்து விடப் போகிறோமா? இதற்குப் பிறகு இந்தச் சரீரம். இந்தக் குரல். இந்த பூமி நம்மை விட்டுப் போகப்போகிறது என்று எண்ணியபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் தனலட்சுமி. எப்படியும் இன்று நாம் இறந்து விடுவது என்று தீர்மானமாய் தீர்மானித்தாள். அவளின் எண்ணங்கள் எல்லாம் நிர்மூலமாக அவர்களுக்கு முன்னால் தெரிந்தன. யாருடனும் பேசவில்லை.
அந்தப் பேருந்து பயணம் அவளுக்கு கடைசி பயணமாகக் கூட இருக்கலாம். வெறுத்துப் போய் பேருந்தில் அமர்ந்தவளின் அருகில் ஒரு பெண் தன் கைக் குழந்தையுடன் அமர்வதைக் கூட கவனிக்காத தனலட்சுமி எதையோ வெறித்துப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தாள்.
அவளுக்குள் எந்த செயலும் அவள் இதயத்தையும் மூளையையும் எட்டவில்லை. உயிரிருந்தும் கோமா நிலையில் இருப்பவள் போல் பயணப்பட்டுக் கொண்டிருந்தவளை அந்தப் பிஞ்சு கரம் தொட்டது. அந்தப் பிஞ்சின் முதல் தொடுதல் கூட அவளுக்கு சரியாகத் தெரியவில்லை. இரண்டாவதாக அந்த மழலை தன் கீச்சுக் குரலில் ஏதேதோ சொல்லி அவளைத் தொட்ட போது திரும்பிப் பார்த்தாள்.
அந்த மழலை தன் பொக்கை வாயை திறந்த அந்தப் பிஞ்சுக் குழந்தை தன் கையைக் காட்டி, ஏதேதோ அவளிடம் பேசியது. அதுவரையில் எதையோ தொலைத்த அவதியில் கவலையில் பயணப்பட்டுக் கொண்டிருந்த தனலட்சுமிக்கு அந்தக் குழந்தையின் தொடுதல் வேறு ஒரு மாறுதலைத் தந்தது.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அந்தக் குழந்தையை லேசாக தொட்டாள். அந்தக் குழந்தை அவளைத் தொட்டுத் தொட்டு தன் வாய் திறந்து சிரித்தது. அந்தத் தாயும் தனலட்சுமியைப் பார்த்துச் சிரித்தாள்.
அதுவரையில் இந்த உலகம் சூன்யமானது. இந்த வாழ்க்கை இன்றோடு முடிந்து விட்டது. இந்தப் பயணம் தான் நமக்குக் கடைசிப் பயணம். இந்த பார்வை தான் நம் கடைசிப் பார்வை; இந்த வாழ்க்கை தான் நமக்கு கடைசி என்று நினைத்து தற்கொலை செய்யப் போய்க் கொண்டிருந்தவளின் எண்ணத்தை அந்த மழலை மாற்றியது. அதுவரையில் எதையோ நினைத்து சென்று கொண்டிருந்தவளை அந்த மழலைத் தொட்டுத் தொட்டுப் பேசப் பேச அவளுக்குள் ஒரு ஆனந்த மழை அடித்தது.
” கொஞ்ச நேரம் அந்தக் குழந்தைய தாரீங்களா? ” என்று கேட்டு வாங்கிய தனலட்சுமி குழந்தையுடன் கொஞ்சிப் பேச ஆரம்பித்தாள்.
” குழந்தை நல்ல அழகா இருக்கு. என்ன பேரு வச்சிருக்கீங்க”
என்று தாயிடம் கேட்டபோது
” இனியா ” என்று சொன்னாள் அந்தத் தாய்.
இனிமையான அந்தக் குழந்தையின் பெயரைக் கேட்ட தனலட்சுமிக்குள் இதயம் அழகாய் விரிந்தது. அந்தக் குழந்தையுடன் குழந்தையாய் பேசிக் கொண்டே வந்தாள். அந்தக் குழந்தையும் அழகாக அவளுடன் விளையாடிக் கொண்டே வந்தது. அதுவரையில் நொறுங்கிப் போயிருந்த அவளின் இதயத்தை அந்தக் குழந்தையின் மழலைச்செயல் உடல்மொழி கொஞ்சம் கொஞ்சமாக மடை மாற்றம் செய்தது.
தனலட்சுமியும் அந்தக் குழந்தையும் அந்தத் தாயும் ஒரே இடத்தில் இறங்கினார்கள். அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்ட அந்த தாய்
“சரி நாங்க வரோம்”,என்று சொல்லிச் சென்றார்கள்.
அந்தக் குழந்தையைப் பிரிய மனம் இல்லாத தனலட்சுமி, அந்தப் பிஞ்சுக் குழந்தையை இன்னொரு முறை வாங்கி தொட்டுத் தழுவி கன்னங்களில் முத்தமிட்டு அந்தத் தாயிடமே திரும்பக் கொடுத்த போது அவளுக்குள் சந்தோசம் சிறகடித்துப் பறந்தது.
‘‘நம் குழந்தையையும் இப்படித்தானே, வீட்டில் விட்டு விட்டு வந்தோம். நம் குழந்தையைப் பார்க்க வேண்டும்; தற்கொலை நமக்கு தீர்வாகாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை. நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும்’’
என்று தன்னுடைய தீர்க்கமான முடிவை திருத்தி எழுதி, அடுத்த பேருந்தில் தன் வீட்டிற்குப் பயணப்பட்டாள் தனலட்சுமி.
அவளின் எண்ணம் முழுவதும் வீட்டில் விட்டு வந்த தன் மழலையை நோக்கியே இருந்தது.
“எங்க தனலட்சுமிய வீட்டுல காணோம் “
என்று வீடு முழுக்கக் தேடினார்கள்.
” குழந்தை வேற அழுதுகிட்டு இருக்கு. இவ எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலையே? என்று கணவன் கத்த, வீட்டில் உள்ளவர்கள் அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தார்கள்.
முன்னைவிட ஆயிரம் மடங்கு மேலே போய் இறக்கை கட்டிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள் தனலட்சுமி.
தொட்டிலில் படுத்திருந்த தன் பிஞ்சுக் குழந்தையை வாரி அணைத்துத் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துத் தாலாட்டினாள். அது தன் மழலை மொழியில் பேசப்பேச அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
” சரி என் கண்ணுல்ல அழாத… அழாத …” என்று குழந்தையின் தோளைத் தட்டிக் கொடுத்தாள் தனலட்சுமி.
” குடும்பம்னா அப்படித்தான் இருக்கும். அதுக்காக பொசுக்குன்னு கோவிச்சுட்டு ஓடீர்றதா. நீ வெளிய போயிட்ட குழந்தை எவ்ளோ அழுதிச்சு தெரியுமா? என்றாள் அத்தை. அத்தனையும் மறந்து தன் குழந்தைக்கு அமுதூட்டினாள் தனலட்சுமி.
“குழல் இனிது யாழ் இனிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார் “
என்ற திருக்குறள் அவள் காதில் விழுந்தது.
முன்னை விட வாழ்வை அழகாக நேசித்து வாழ ஆரம்பித்தாள் தனலட்சுமி.