கதைகள் சிறுகதை

குழந்தை செருப்பு …! ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஆறு காலப் பூஜையில் முதல் பூஜை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் ஆங்காங்கே வழிபட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பக்திக் கோஷங்கள் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தன. நல்லது செய்தவர்கள் . கெட்டது செய்தவர்கள் என்று தங்கள் குறைகளை அந்தச் சன்னதியில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். திவாகர் மனைவி தமிழ்நதி குழந்தை ஷர்மியுடன் வழிபாட்டுத் தலத்தில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தான். அவனின் மூன்று வயது குழந்தை ஷர்மி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தாள்.

“அங்கெல்லாம் போகக்கூடாது. இங்க வா”

என்று ஷர்மியை அதட்டிக் கொண்டிருந்தாள் தமிழ்நதி. எதையும் கேட்காமல் பக்தர்கள் கூட்டத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள், ஷர்மி

ஷர்மியைக் கவனிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தி இருந்தாள் தமிழ் நதி . சிரிப்பது. ஓடுவது . அவளைப் பிடிக்கத் தமிழ் நதி ஓடுவது சமாதனப்படுத்துவது என்று இருந்தாள்.

இந்த நிகழ்வு அங்கிருந்த பக்தர்களுக்கு அலர்ஜியைக் கொடுத்தது .

“என்ன இது? சாமி கும்பிடுகிற இடத்தில, இவ்வளோ சத்தம் போட்டுகிட்டு இருக்காங்க. கொஞ்சம் கூட நாகரீகம் இல்லையே?”

என்று மனதுக்குள் தான் நினைத்தார்கள், பக்தர்கள்

” அதுவோ குழந்தை. அதை எப்படிப் பேசுவது ?” என்று நினைத்து எதுவும் பேசாமல் இருந்தார்கள்.

ஷர்மியைச் சத்தம் போடச் சொல்லியோ, சிரிக்க சொல்லியோ யாரும் சொல்லவில்லை. குழந்தைக்கு கோயிலும் ஒன்றுதான் . குப்பையும் ஒன்று தான். எல்லா இடமும் அதற்கு ஒன்றுதான். குழந்தைக்கு என்ன தெரியும் ? “

என்று சில பேர் பேசிக்கொண்டு சென்றார்கள். கூட்டம் கொஞ்சம் குறைய ஷர்மி ஓடுவதையும் சிரிப்பதையும், பாடுவதையும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பூசாரி

” என்ன இது? கோயில்ல இந்த மாதிரி சத்தம் போட்டு இருக்கீங்க? இது தப்பு. அதையும் தாண்டி குழந்தை கால்ல செருப்பு இருக்கு. செருப்ப வெளிய வச்சிட்டு வாங்க . கோயிலுக்குள்ள செருப்பு போட்டுட்டு வரக்கூடாதுன்னு தெரியாதா? நீங்க படிச்சவங்க தானே?

என்று ஏகமாய்த் தீட்டினார் அந்த பூசாரி. தாங்கள் செய்தது தவறு என்று நினைத்த அந்த தம்பதிகள் குழந்தையின் காலில் இருந்த செருப்பை லாவகமாக அவிழ்த்தார்கள்.

செருப்பை அவிழ்க்க விடமாட்டேன் என்று சிணுங்கிச் செல்லமாக அழுதாள், ஷர்மி

” இல்லம்மா கோவிலுக்குள்ள செருப்பு போடக்கூடாதுல்ல செருப்ப கழட்டு”

என்று செல்லமாகப் பேசி ஷர்மியின் காலிலிருந்து செருப்பைக் கழட்டினாள், தமிழ்நதி. அவிழ்த்தது தான் தாமதம் அங்கிருந்து குடுகுடுவென ஓடியது. திடீரென அந்தப் பிஞ்சுக் கால்களில் ஏதோ குத்த

“அய்யோ ” என்று அழுதபடியே அமர்ந்து தன் காலைப் பிடித்து குழந்தை மொழியில் எதையோ சொல்லி அழுது கொண்டிருந்தது.

” எதோ குத்திருச்சு போல “

என்று ஓடிப்போய் குழந்தையை தூக்கி மடியில் வைத்து அதன் பிஞ்சு காலைப் பார்த்தாள் தமிழ் நதி

ஒரு சின்னக்கல் அவள் காலில் குத்தி இருந்தது. அந்த பிஞ்சுக்கலில் ரத்தம் கட்டி இருந்ததை பார்த்த தமிழ் நதிக்கு என்னவோ போலாகிவிட்டது.

” சரியா போகும். அழாதே ? “

என்று ஷர்மியைச் சமாதானப்படுத்தி, அந்தக் கால்களுக்கு கைகளால் ஒத்தடம் வைத்துக் கொண்டிருந்தாள் தமிழ் நதி.

“பலமா குத்தியிருக்கும் போல, அதான் பிள்ளை அழுகுது “

என்று அழுது கொண்டே இருந்த ஷர்மியைத் தூக்கிக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தான் திவாகர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தார் அந்தப் பூசாரி. குழந்தையைச் செருப்பைக் கழற்றச் சொன்னது தான் தான். தன்னால்தான் அந்தக் குழந்தைக்கு காலில் ஏதோ குத்திவிட்டது என்ற எந்த கவலையும் இல்லாமல் அடுத்த பூஜைக்கு தயாராகச் சென்றார்.

அப்போது வந்த ஒரு பக்தர்

“ஐயா நான் கடவுளுக்கு விசேஷமான ஒரு பொருள் கொண்டு வந்திருக்கேன் .அதை வச்சு நீங்க பூஜை பண்ணனும். இது என்னோட ரொம்ப நாள் வேண்டுதல்”

“என்ன வேண்டுதல் ?”

என்று கேட்டார் அந்தப் பூசாரி .

தான் கொண்டு வந்திருந்த தட்டைப் பூசாரியிடம் கொடுத்தார், அந்தப் பக்தர்.

அந்தத் தட்டைக் கையில் வாங்கி, அதன் மேலே மூடி இருந்த துணியை நீக்கி அதைப் பார்த்த பூசாரிக்கு

சுரீர் என்று வலித்தது. அந்தப் பக்தர் கொண்டு வந்தது கடவுளுக்குப் படைக்கக் கொண்டு வந்திருக்கும் பாதணிகள். அந்தப் பாதணிகளைப் பார்த்து ஒரு நிமிடம் மலைத்துப் போய் நின்றார் அந்தப் பூசாரி

” என்ன பாக்கறீங்க. கடவுளுக்கு பாதணிகள் வாங்கிக் கொடுத்து, பாத பூஜை செய்யணும் அப்பிடிங்கிறது தான் என்னோட நீண்ட நாள் பிரார்த்தனை. வேண்டுதல் .பூஜை பண்ணுங்க “

என்று அந்தப் பக்தர் சொல்ல, அந்த பாதணிகளை எடுத்து கருவறையில் வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தார் பூசாரி. அவர் பூஜை செய்யும் போது கவனம் காணிக்கையளித்த பாதணிகள் மீது இல்லை. ஷர்மியின் காலில் அணிந்திருந்த பாதணிகளைக் கழற்றச் சொன்னதே அவரின் ஞாபகத்திற்கு வந்தது. மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தையின் காலில் கல்குத்தி ரத்தம் கட்டியதே பூசாரியில் நினைவில் வந்து கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *