சிறுகதை

குழந்தை-ஆவடி ரமேஷ்குமார்

புட்லூர்.

படுத்த நிலையிலிருக்கும் புகழ் பெற்ற அந்த அம்மனை

தரிசிக்க கோவிலுக்கு வந்திருந்தாள் சாரதா.

கோவிலைச் சுற்றி ஒரு முறை அங்கப்பிரதட்சனம் செய்து முடித்த சாரதா தொட்டில்கள்

கட்டும் மரத்தின் முன் வந்து நின்றாள்.

மரத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவள்,

” தாயே…நான் இந்த மரத்துல தொட்டிலை கட்டி பல வருஷமாகுது.எனக்கு இன்னும் நீ குழந்தை பாக்கியம் கொடுக்கலையே…

எனக்கு ஒரு நல்ல வழி நீ காட்டக்கூடாதா? ” என்று கண்ணீர் மல்க மனமுருகி அழுதாள்.

பின்பு கோவிலுக்கு வெளியே

வந்த போது, ” முறுக்கு வாங்கிக்க தாயி…சூடா இருக்கு” என்று சொன்ன ஒரு

பாட்டியிடம் நான்கு முறுக்குகளை வாங்கிக் கொண்டு வில்லிவாக்கம் போக புட்லூர் ரயில் நிலையத்தை நோக்கி

நடந்தாள்.

ரயிலில் ஏறினாள்… ரெயில் புறப்பட்டது.

முறுக்கை சாப்பிட்டு விட்டு முறுக்கை வைத்து சுற்றிக் கொடுத்திருந்த அரைப்பக்க செய்தித்தாளை

வீசப்போன போது அதில் தெரிந்த செய்தியை படித்துப் பார்த்தாள் சாரதா.

‘ குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட பெண் குழந்தை!’

செய்தியை படித்தவள் வேதனைப்பட்டு புலம்பினாள்.

‘கடவுளே…தேவை இல்லாதவங்களுக்கெல்லாம்

குழந்தை பாக்கியம் கொடுக்கிறே..எனக்கு கொடுக்கமாட்டேன்கிறியே…!’

கண்களில் நீர் வர தொட்டிலில்

வீசப்பட்ட அந்த குழந்தையை நினைத்து அழுதாள். இப்போது

அந்த குழந்தை ஒரு போலீஸ்காரர் மூலமாக ஒரு ஆசிரமத்தில் இருப்பதாக செய்தியில் இருந்தது.

அப்போது சாரதாவின் செல்போன் ஒலித்தது.

எடுத்து ” ஹலோ” என்றாள்.

” சாரு…நான் அம்மா பேசறேன்”

குரலில் அழுகை தெரிந்தது.

” ஏம்மா,என்னாச்சு…

அழுதுட்டே பேசறே?”

” நம்ம பானு…உன் தங்கச்சி

நம்மளை மோசம் பண்ணிட்டு

போயிட்டாடீ..!”

” என்னம்மா சொல்லறே?”

” அவ புருஷன் கூட ஏதோ சண்டையாம்…கேட்க கூடாத கேள்வியை அவர் கேட்டுட்டார்னு கோவுச்சிட்டு திடீர்னு தீ வச்சுக்கிட்டாளாம்.காப்பாத்த

போய் போராடுன மாப்பிள்ளையும் தீயில சிக்கி கருகி…”

” அய்யய்யோ…ரெண்டு பேருக்கும் என்னாச்சு? நீ எங்கம்மா இருக்கே?”

“ரெண்டு பேரும் கருகி செத்து போயிட்டாங்க.”

“கடவுளே..செத்துட்டாங்களா..!?அப்ப எட்டு மாச குழந்தை அபியோட கதி?”

” குழந்தை தாய்க்காக அழுகுது.நானும் உங்க அப்பாவும்

பானு வீட்ல தான் இருக்கிறோம்.போலீஸ் வந்திருக்கிறாங்க.நீ உடனே

வாம்மா.இனி நீயும் உன் வீட்டுக்காரரும் தான் இனிமே

அபிக்கு அம்மாவும் அப்பாவும்”

” கடவுளே..!” என்றவள் மேற்கொண்டு பேச முடியாமல்

பெருங்குரலெடுத்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் சாரதாவை மிகவும் பரிதாபமாக பார்த்தனர்.

ஆவடி ரமேஷ்குமாரின் பிற கதைகள்:

பிடிச்சிருக்கு

அப்பா எடுத்த முடிவு

நேசி

பயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *