சிறுகதை

பணத்தின் அருமை | ராஜா செல்லமுத்து

யாருக்கு என்ன செலவு என்றாலும் முதலில் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வான் ரவி.
அலுவலகத்திலிருந்து கூட்டமாக டீ குடிக்க சென்றாலும் அத்தனை பேருக்கும் செலவு செய்வதும் ரவி தான்.
பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டான். அது வரும் போகும் ஆனால் மனிதன் அப்படி அல்ல என்று வாழ்வின் அர்த்தத்தை அலாதியாக அறிந்தவன் ரவி.
அதனால்தான் என்னவோ அவன் பணத்தைவிட மனிதர்களை மதிப்பான். இருந்தாலும் அவன் மனைவி சங்கீதா அவனுடைய நடவடிக்கைையை ஒவ்வொரு முறையும் கவனித்துக் கொண்டே வந்தாள்.
அன்று ஒரு நாள் தன் வீட்டிற்கு அருகில் உள்ள மொத்த குடும்பமும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பார்க், பீச் என்று சுற்றிவிட்டு வீட்டில் சமைக்க வேண்டாம்; ஹோட்டலில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
மொத்தம் பத்து பதினைந்து பேர் இருக்கும் அந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான்.
எனக்கு மசால் தோசை, எனக்கு பூரி எனக்கு சப்பாத்தி, எனக்கு இட்லி என்று வந்திருந்த அத்தனை பேர்களும் ஆளுக்கொரு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அருகில் அமர்ந்திருந்தவர்கள் அத்தனை பேரும் சாப்பிடுவதும், சிரிப்பும் கேலியும் கிண்டலுமாக அந்த உணவகம் ஒருவிதமான மயக்கத்தில் இருந்தது.
யாருக்கும் இல்லாத அக்கறையாக சாப்பிட்டவர்களின் மொத்த பில்லையும் ரவி தன் டெபிட் கார்டை எடுத்து வைத்தான். இதை பார்த்த சங்கீதாவுக்கு சுரீரென்று கோபம். கூட்டத்தில் அவள் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் பில் கொடுக்க வேண்டுமென்று அவர்களுக்கும் யோசனை வரவில்லை . ஆனால் அதை சக்தி தான் முதலில் எடுத்து கொடுத்தான்.. மனைவிக்கு கோபம் வந்தது. சாப்பிட்டு முடித்த நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றார்கள்.
இரவு சங்கீதா தன் கச்சேரியை ஆரம்பித்தாள்.
அதென்ன எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது நீங்க மட்டும் பில் கொடுக்குறீங்க? ஏன் மத்தவங்க எல்லாம் கொடுக்க மாட்டாங்களா ? நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் எங்க போனாலும் எப்ப பார்த்தாலும் நீங்கதான் ஆளுக்கு முதல்ல போய் பணத்தை எடுத்து கொடுக்கிறிங்க. நீங்க என்ன அவ்வளவு பெரிய பணக்காரா? கொஞ்சம் அடக்கி வாசிங்க. நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்கு சேர்த்து வைக்கணும். இப்படி ஊதாரித்தனமாக செலவு வைத்துவிட்டு இருந்தீங்கன்னா நம்ம கையில ஒரு காசு மிஞ்சாது. என்று கணவனை திட்டினாள் மனைவி
சாப்பிட்டு இருந்தாங்க. அதான் நானே எடுத்துக் கொடுத்தேன் என்று மழுப்பினான் ரவி.
இன்னிக்கு மட்டுமில்ல. எப்ப எங்க போனாலும் யாருக்கும் நீங்க தான் செலவு பண்றீங்க உங்க கைய கொஞ்சம் குறைங்க.மத்தவங்களுக்கும் தெரியும். ஏதாவது கொடுக்கணும்னா அவங்க மட்டும் கொடுக்கிறது இல்ல. நீங்க என்ன பெரிய தாராள பிரபு. அவங்க ஒருநாள் கொடுக்கட்டும். பணத்தோட அருமை ,உங்களுக்கு தெரியாது என்னைக்காவது ஒரு நாள் நீங்க எங்கேயாவது மாட்டும் போது தான் தெரியும் .அது வரைக்கும் உங்களுக்கு பணத்தோட அருமை தெரியாது என்று மனைவி சொன்னாள்.
அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரவி. மனைவியின் பேச்ைசை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தான்.
ஒரு நாள் அவன் எப்எம் ரேடியோ கெட்டுப்போய் சத்தம் வராமல் இருந்தது .என்ன சவுண்ட் வர மாட்டேங்குது? என்று நினைத்தவன் அருகில் இருக்கும் ஒரு எலக்ட்ரிக் ஒர்க் ஷாப்புக்கு ரேடியோவை எடுத்து போனான்.செக் பண்ணி பரிசோதனை செய்து பார்த்த எலக்ட்ரீசியன், ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்றான்.
ரேடியோவை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த ரவி,
ஒரு மணி நேரம் கழித்து எலக்ட்ரிக் ஷாப் சென்றான். உங்க ரேடியா ரெடியாயிடுச்சு. 210 ரூபாய் கொடுங்க என்று எலெக்ட்ரிசின் கேட்க
ஐயோ அவ்வளவு பணம் எடுத்துட்டு வரலையே. இந்த நூறு ரூபா வச்சுக்குங்க. அப்புறமா நான் மீதம் தாரேன் என்று ரவி சொல்ல
அதெல்லாம் முடியாது. இப்போ மொத்த பணத்தையும் கொடுத்தால்தான் உங்க ரேடியா தருவேன். இல்லன்னா என்று அந்த ரேடியோவை கழட்டப் போனான், எலக்ட்ரீசியன்
ஹலோ நான் உங்க பணத்தை இல்லன்னு சொல்லல .வீட்ல போய் எடுத்துட்டு வரேன் என்று தான் சொன்னேன். நான் இவ்வளவு செலவாகும்னு நினைக்கல .கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க .பணத்தை எடுத்துட்டு வரேன். ரேடியா குடுங்க என்று ரவி கேட்டான்.
பணத்தை கொடுத்துட்டு ரேடியோவை எடுத்துட்டு போங்க என்று விடாப்பிடியாக சொன்னான் எலெக்ட்ரிசியன்”
அவனின் செய்கை ரவிக்கு எரிச்சலைத் தந்தது .
சரி என் கூட வாங்க என்று அவனை தன் வீட்டிற்கு கூட்டி வந்தான் ரவி. ரவியின் பின்னாலேயே வந்தான் எலக்ட்ரீசியன்.
என்னவாம்?என்று கேட்டாள் மனைவி சங்கீதா
இவன் நூறு ரூபாய்க்கு என்ன நம்ப மாட்டேங்கிறான். பணம்னா அவ்வளவு பெருசா. நீ சொன்னது சரி தான். இங்க இருக்குற எல்லாருமே பணத்தை பெருசாத்தான் மதிக்கிறார்கள். நான் மட்டும்தான் அப்படி இல்லை என்று மனைவி சங்கீதாவிடம் சொன்னான். பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே போய் எலக்ட்ரீசியன் கையில் கொடுத்த போது கடகடவென்று சிரித்தாள் சங் கீதா
‘‘பாத்தீங்களா? இதுதான் உலகம். மத்தவங்க எல்லாம் பணத்தை பத்திரமாக பாதுகாக்கும் போது நீங்க மட்டும் தான் அதை தண்ணியா செலவு பண்ணிட்டு இருக்கீங்க. இனியாவது புரிஞ்சுக்கங்க. பணத்து மேல மனுசங்க இப்படித்தான் மரியாதை வச்சிருப்பாங்க ’’.
அப்போது ரவிக்கு சுருக் சுருக்கென்று இருந்தது.
அந்த எலக்ட்ரீசியன் கையில் மொத்த பணத்தையும் கொடுத்த ரவியின் மனதில் பணத்தை பற்றியான மதிப்பும் உயர்ந்தது . இனிமேல் யாருக்கும் செலவு செய்யக்கூடாது’ என்ற முடிவுக்கு வந்தான்.
அன்று மனைவியிடமும் சத்தியம் செய்தான். இனிமேல் நான் யாரக்கும் செலவு செய்ய மாட்டேன் என்று சொன்னதும் மனைவி சங்கீதாவிற்கு சந்தோஷம் ஏற்பட்டது.
அன்று அலுவலக இடைவெளியில், டீ குடிக்க நண்பர்கள் சென்றார்கள். ரவியும் சென்றா பத்து இருபது பேர் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.
யாருக்கும் முன்னால் டீ குடித்துவிட்டு பணத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
ரவி தான் அன்றும் அத்தனை பேருக்கும் பணத்தை செலுத்தினான். அவன் மனதில் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ரத்தத்திலேயே பணம் ஒரு பொருட்டல்ல என்பது ஊறியிருந்தது. மனைவியிடம் சொன்னால் வருத்தப்படுவாள் என்று நடந்த எதையும் மனைவியிடம் சொல்லாமல் இருந்தான்.
அன்று முதல் தான் ஒரு கஞ்சன் என்பது போலவே ரவி வீட்டில் நடித்துக் கொண்டிருந்தாலும்
அவன் எப்போதும் போலவே எல்லோருக்கும் செலவு செய்து கொண்டிருந்தான்.
பணத்தைப் பற்றிய மதிப்பீடு அவன் மனதில் அவ்வளவு தான் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *