பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடியே இருந்த குழந்தையை வண்டிச் சேரில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றான், தகப்பன் அதன் பின்னாலே சிரித்துக்கொண்டே வந்தாள் தாய் .
ஐந்து மாதமாே ஆறு மாதமாே தான் அந்தக் குழந்தையின் வயது. ஆனால் அந்தக் குழந்தையை இடுப்பிலும் மார்பிலும் தோளிலும் தூக்கி சுமந்து வளர்ப்பதற்கு பதிலாக நாகரீகமான இந்த உலகில் சிலர் குழந்தையை சக்கர வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே சென்றார்கள்.
அதுவும் அவர்கள் தங்கள் உடம்பை குறைப்பதற்கும் சுகர், பிரஷரை குறைப்பதும் நடந்து கொண்டிருக்கையில் குழந்தையையும் சேர்த்து சுற்றுவது எந்த வகையில் நியாயம் என்று அந்த பூங்காவில் இருந்தவர்களுக்கு விளங்கவில்லை.
அந்தக் குழந்தையை அவர்களின் பார்வையில் படும்படியாக தலையை வைத்துத் தலைகீழாக உருட்டிப் போனது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
அதில் ஒரு பெரியவர் அந்தத் தகப்பனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் சட்டை செய்யாத அந்தத் தகப்பன் சக்கரவண்டியைத் தள்ளிக் கொண்டே சென்றான்.
ஏதும் அறியாத அந்தக் குழந்தை தகப்பனையும் தாயையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே போனது.
இப்போ எல்லாம் யாரும் குழந்தையைத் தூக்கி வளர்க்கறது இல்ல. தள்ளித்தான் வளக்கிறாங்க அதனாலதான் இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் தகப்பன் பாசம் எதுவும் இல்ல.
நம்ம காலத்தில் எல்லாம் தோள்லயும் மார்பிலயும் நெஞ்சுலயும் தூக்கிச் சுமந்தாேம். இடுப்புல வச்சு கொஞ்சிக் குழவி வளர்த்தம். அதனாலதான் குழந்தைங்க தாய்ப்பாசம் தகப்பன் பாசம் சொந்தக்காரங்க பாசம்னு இருந்தாங்க.
இந்த நாகரீக ஒலகத்துல யாரும் இதச் செய்றதில்ல. ஏன் தாய்ப்பால் குடுத்தாக் கூட அழகு குறையும்னு நிறைய பேரு குழந்தைகளுக்கு பால் குடுக்கிறது கூட இல்ல. இங்க பாருங்க நானும் இந்த பார்க்குக்கு வந்து இரண்டு மணி நேரமா பாத்துட்டு இருக்கேன். இந்த தாய் தகப்பன் குழந்தைய வச்சு தள்ளிக்கிட்டே தான் போறாங்களே தவிர யாரும் தொட்டுத் தூக்கல.
இப்படி இருக்கும்போது இந்த குழந்தை வளர்ந்து பெருசாகி இவங்கள எப்படி பாக்கும்.? இவங்கள எப்படி நேசிக்கும்? குழந்தைய தூக்கி சுமக்கிறதும் மார்புல வச்சுக்கிறதும் அந்த குழந்தை தகப்பன் தாய் உற்றார் உறவினர் கூட லப்டப் சத்தத்தை கேக்குறதுக்காக தான்னு உளவியல் ரீதியான உண்மைகள் சொல்லுது.
இந்த லப்டப் சத்தம் எல்லாம் இந்த குழந்தைக்கு எங்க கேக்க போகுது. சக்கரம் உருள்ற சத்தம் தான் கேக்கும். அதனாலதான் இவங்க வளந்து பெருசானதும், கார், வண்டி வாங்கணும்ன்ற கவனத்தில் இருக்கிறாங்க என்று ஒரு பெண்மணி சொன்ன போது அவளைச் சுற்றி இருந்த ஆட்கள் கொல்லென்று சிரித்தார்கள்.
உண்மைதானே நான் சொல்றது நம்ம காலத்துல எல்லாம் அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் இருந்ததில்லை. இப்ப ரொம்ப அதிகமா போச்சு. காரணம் இந்த மாதிரி குழந்தைகள தொட்டுத் தூக்காம வண்டியில வச்சு தள்ளிட்டு போறதுனால வந்த வென தான் இது என்று ஒருவர் சொல்ல…
அந்தப் பூங்காவில் வண்டியில் வைத்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் தாய் தகப்பனை இவர்கள் ஏசி கொண்டு இருந்தார்கள். இவர்கள் தங்களைத்தான் ஏசுகிறார்கள் என்று தெரியாதவர்கள் அந்தக் குழந்தையை விற்பனைப் பொருள் போல தள்ளிக் கொண்டும் அதை பார்த்துச் சிரித்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தார்கள்.
அந்தப் பூங்காவின் வெளியே ஏழைத்தாய் தன் தலையில் சுமையாேடு நடந்து கொண்டிருந்தாள். அவள் சட்டை முழுவதும் உப்பரித்திருந்தது. அவள் அக்குள் பகுதிகள் வேர்வையால் நனைந்திருந்தன. அவள் உடுத்தியிருந்த உடை கிழிந்திருந்தது. தலையில் கட்டிட வேலை செய்தற்கான தட்டுமுட்டுச் சாமான்கள் இருந்தன.
இது அத்தனையும் மீறி அவள் இடுப்பில் ஓரு குழந்தை அமர்ந்திருந்து. அந்தக் குழந்தை தன் ஏழைத்தாயை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தது. தட்டை பிடிக்காமல் தன் குழந்தையை ஒரு சேர பிடித்தருந்தாள் அந்த ஏழைத் தாய்.
அன்பின் உச்சத்தில் மகிழ்ந்திருந்த அந்தக் குழந்தை தாயின் இடுப்பிலிருந்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தது .
அந்தப் பெண்ணின் அருகில் வந்து காெண்டிருந்த தகப்பன் அந்தக் குழந்தையிடம் ஏதோ பேச அந்த குழந்தை குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே வந்தது.
பூங்காவிலிருந்து இதைப் பார்த்தவர்களுக்கு என்னவோ போலானது .
இது எதையும் சட்டை செய்யாமல் அந்தப் பணக்கார வீட்டு குழந்தையை வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்கள், பணக்கார வீட்டுத் தம்பதிகள்.
ஏழைத்தாயின் இடுப்பிலிருந்த குழந்தை தன் தாயின் மார்போடு கட்டிப்பிடித்திருந்தது. குழந்தை அருகே சென்ற தகப்பன் ஏதோ சொல்ல கீச்சு…. கீச்சு என்ற குரலில் சிரிப்பு சத்தத்தை எழுப்பியது, அந்தக் குழந்தை.
குழந்தையின் சிரிப்பொலி அந்தப் பகுதியையே நிறைத்தது.