சிறுகதை

குழந்தைக்கு முன்னாடி அப்படிப் பேசலாமா? | செருவை நாகராசன்

Spread the love

அன்று மாலை மூன்று மணியிலிருந்தே மாலதி பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தாள்.

சம்பா கோதுமையை ஆட்டுக்கல்லில் போட்டு அரைத்து பால் பிழிந்து கொண்டாள். பிறகு அதை வாணலியில் ஊற்றி வாயு அடுப்பைப்பற்ற வைத்தாள். கொதிக்கும் கோதுமைப்பாலில் சீனியையும் கேசரிப்பவுடர் சிறிதையும் சேர்த்து நெடுநேரம் கிண்டினாள் கெட்டிப்பதம் வந்தவுடன் நெய் முந்திரிபருப்பு இடித்த ஏலக்காய் சேர்த்தாள். அல்வா தயாராகி முடியவும் நான்கு மணியாகவும் சரியாக இருந்தது.

‘ வாழைக்காய் பஜ்ஜி மட்டும் செய்து விட்டால் போதும்; அவர் வரும் போது பேக்கரியில் கேக் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். விருந்தினரை சமாளித்து விடலாம்..’ என்று நினைத்துக்கொண்டாள்.

அப்போது ‘கிறீச்’ வாசற்கதவு திறக்கப்படும் ஒலி கேட்டதும் மாலதி உள்ளேயிருந்து எட்டிப்பார்த்தாள் . அவள் எதிர்பார்த்தது போலவே அவளது ஐந்து வயது மகன் அழகப்பன் பள்ளி முடிந்து வந்து கொண்டிருந்தான்.

‘‘திங்க என்னம்மா.. இருக்கு..’’ என்றவனுக்கு அல்வாவில் சிறிது எடுத்து சின்னத்தட்டு ஒன்றில் கொடுக்க அதை அவன் சாப்பிட்டுவிட்டு வெளியே போய்விட்டான்.

மாலதியின் மனம் முழுக்க விருந்தினர் வருகை குறித்த சிந்தனை . ஐந்து மணிக்கு அவளது நெருங்கிய தோழி பாரதி குடும்பத்துடன் வருகிறாள். பள்ளியில் பழகிய நட்பு. பிறகு இருவருக்கும் திருமணமாகி விட சென்ற பத்து ஆண்டுகளாக எவ்வித தொடர்பும் இல்லை. மூன்று நாட்கள் முன்பு தான் ஒரு திருமண விருந்தில் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டார்கள்.

‘‘அவர் இங்கே ட்ரான்ஸ்பர் ஆகவும்.. நாங்க இந்த ஊருக்குக்கு குடிவந்து முழுசா மூணுவருசம் ஆச்சுடி.. நீ.. என் கண்ணிலே இதுவரை படவேயில்லையே..’’ என்று பாரதி ஆச்சரியத்துடன் சொல்ல அவளைக் குடும்பத்துடன் தன் வீட்டிற்கு அழைத்திருந்தாள் மாலதி.

சுவர் கடிகாரம் ஐந்து மணி காட்டவும்

‘‘இன்றைக்காவது அவர் சீக்கிரம் வரக்கூடாதா..? என்று எரிச்சல் பட்டுக் கொண்டே உடை மாற்றி தயாரானாள்.

அவளது கணவன் தினகரன் அலுவலகம் முடிந்து தினமும் ஆறு மணிக்கு வீட்டிற்கு வருவது வழக்கம். சில நாட்களில் பூப்பந்து விளையாடிவிட்டு ஏழு மணிக்கும் வருவான். அவன் தாமதமாக வீடு வரும் போது ஏன் லேட்டு.. சின்னவீட்டுக்குப் போயிட்டு வந்தீங்களாக்கும். அது தான் அய்யாவுக்கு இவ்வளவு நேரமாயிட்டு போலேருக்கு. என்ன சின்ன வீட்ல ரொம்ப ஜாலியா? என்று மகனைப்பக்கத்தில் வைத்துக்கொண்டே மாலதி தினகரனை சீண்டுவாள்.

‘‘சீ.. போடி.. வேற நினைவு உங்களுக்கெல்லாம் வராதே. பையன் இருக்கானேன்னு பார்த்துப்பேச மாட்டியா? என்பான் சிறிதே கண்டிப்பான குரலில். அவள் வெளியூர் போய்விட்டு வீடு வரும் போது

‘‘ வேலைக்காரி வந்திருப்பாளே.. அவ கிட்ட தப்பா நடந்தீங்களா..? நான் இல்லாத குறையை அவ ஈடுசெஞ்சிட்டாளா..? அய்யாவுக்கு நாலு நாளும் ஜாலி தான் போல..’’ என்று சிரித்துக்கொண்டே சொல்லுவாள். அதனை அழகப்பனும் அருகில் நின்று பெற்றோர் பேசிக்கொள்வதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பான்.

‘‘என்னைப்பற்றி உனக்கு நல்லாவே தெரியும். அதானல குழந்தை எதிரில் விளையாட்டுக்குக் கூட இந்த மாதிரியெல்லாம் பேசாதே..’’ என்று மனைவியைக் கடிந்து கொள்வான் தினகரன்.

ஆனால் மாதி மட்டும் மாறவேயில்லை. கணவனிடம் திரும்பத் திரும்ப இந்த மாதிரியான கிண்டலும் கேலியும் தொடரவே செய்தது.

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்கவும் மாலதிக்கு மகிழ்ச்சி உடனே அவள் வெளியே விரைந்து வந்தாள். பாரதி சிரித்த முகத்துடன் முன்னாள் வர பின்னால் அவளது கணவன் மணிவண்ணன் வந்து கொண்டிருந்தான். பாரதியைப் போலவே அவளது கணவனும் ஒல்லியாக சிவப்பாக இருந்தான்.

‘‘என்னடி புள்ளைங்களை அழைச்சிக்கிட்டு வரலே.. என்று உரிமையுடன் பாரதி கைப்பற்றியவள் மணிவண்ணனைப் பார்த்து

‘‘வாங்க அண்ணா.. என்று வரவேற்றாள். அவன் பதிலுக்குப் புன்னகை செய்தான். இருவரையும் கூடத்தில் சோபாவில் உட்கார வைத்து மின்விசிறியை சுழலவிட்டாள். மணிவண்ணன் அருகே மேசை மீதிருந்த வார இதழ் ஒன்றைக்கையிலெடுத்துக் கொள்ள தோழிகள் இருவரும் அவர்களது மற்ற தோழிகள் குறித்தும் பிற விசயங்கள் குறித்தும் நிறைய பேசினர்.

‘‘உன் பெயர் என்ன? நீ.. எந்த வகுப்பு படிக்கிறே..?’’ என்று அழகப்பனிடம் பாரதி கொஞ்சத் தவறவில்லை.

நேரம் ஆறு மணியை நெருங்கவும்..

‘‘மாலதி.. உங்க வீட்டுக்காரர் எப்ப வருவார்..? தினமும் லேட்டாதான் வருவாரா..!’’ என்றாள் பாரதி

அதற்கு மாலதி பதில் சொல்லும் முன்பாக அழகப்பன் முந்திக்கொண்டு

‘‘எங்கப்பா.. சின்ன வீட்டுக்கு போய் ..ஜாலியா இருந்துட்டு தினமும் லேட்டாதான் வீடு வருவார்.. அது போல அம்மாவும் நானும் ஊருக்கு போனால் அப்பாவுக்கு வேலைக்காரி கூட ஜாலி இருப்பார்.. இல்லையம்மா..’’ என்றான் சிறுவன் அழகப்பன்.

அப்போது உள்ளே நுழைந்த தினகரன் திகைத்து நின்றாலும்

‘‘வாங்க..’’ என்று விருந்தினரை சிரித்தப்படியே வரவேற்றான். அப்போது பாரதியும் அவள் கணவனும் ஒரு மாதிரியாக தினகரனைப் பார்க்க

‘‘அய்யோ அவரு அப்படி இல்லீங்க . எனக்கு மனசாலயும் துரோகம் நினைக்கமாட்டார். நான் விளையாட்டுக்குச் சொன்னதை கேட்டுட்டு இந்த பய என்னென்னமோ சொல்றான். மற்றபடி அவரு ரொம்ப சுத்தமானவருங்க என்று மூச்சுவிடாமல் பேசினாள்.

குழந்தைக்கு முன்னாடி அப்படிப் பேசலாமா? பேசாதேன்னேன். கேட்டியா ?

தினகரன் தலை குனிந்து பேசினான்.

‘‘மன்னிடுங்க’’ என்றாள் மாலதி.

குழந்தை எதிரில் எதைப் பேசலாம் எதைப் பேசக்கூடாது என்று தெரியாமல் தோழி குடும்பம் நடத்தும் அழகை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள் பாரதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *