செய்திகள்

குழந்தைகளை பராமரிக்க 25 சதவீத படுக்கைகள்:ராதாகிருஷ்ணன் பேட்டி


சென்னை, ஜூலை 31–

3 வது அலையில் குழந்தைகளை பராமரிக்க 25 சதவீத படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேவையான நடவடிக்கை
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா மூன்றாவது அலை வருமா? என்பது குறித்து இப்போதே தெரியாவிட்டாலும், அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலம் தீவிர கொரோனா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் கூடுதல் கொரோனா பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அங்கு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. எனவே 25 சதவீத படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *