செய்திகள்

குழந்தைகளுக்கான ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்

புதுடெல்லி, அக்.13-

வல்லுனர் குழுவின் பரிந்துரையை அடுத்து குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு, இந்தியாவில் விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியை உள்நாட்டில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இந்த தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் உள்ளது. இதே நிறுவனம், குழந்தைகளுக்காக மற்றொரு கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கானது. இதை முதல் ‘டோஸ்’ செலுத்தி, 28 நாட்களான நிலையில் இரண்டாவது ‘டோஸ்’ செலுத்த வேண்டும்.

இந்த தடுப்பூசியினை குழந்தைகளுக்கு செலுத்தி, இரண்டாவது, மூன்றாவது கட்ட பரிசோதனைகளை பாரத் பயோடெக் நிறுவனம் நடத்தி முடித்தது. இதன் தரவுகளை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் சமர்ப்பித்தது.

இந்த தரவுகளை வல்லுனர் குழு பரிசீலித்து, குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால சூழ்நிலைகளில் 2–18 வயது பிரிவினருக்கு செலுத்துவதற்கு அனுமதி அளிக்கலாம் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றிய நோய்த்தடுப்புக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள், சிறப்பு ஆர்வமுள்ள பாதகமான நிகழ்வுகள் தரவுகளை முதல் 2 மாதங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும், அதன் பின்னர் மாதம் ஒரு முறையும் பாரத் பயோடெக் நிறுவனம், முழு பகுப்பாய்வு தகவல்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்பட 4 நிபந்தனைகளுடன் அவசர பயன்பாட்டு அனுமதியை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை விரைவில் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் 12–18 வயது பிரிவினருக்காக உருவாக்கி உள்ள ‘ஜைகோவ்–டி’ என்ற தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கி உள்ளார். இதுதான் உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி ஆகும்.

இந்த நிலையில் குழந்தைகளுக்கான கோவேக்சின் தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டு அனுமதி கிடைத்து விட்டால், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கான இரண்டாவது தடுப்பூசி என்ற பெயர் அதற்கு கிடைத்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *