“அனு…… அனு …. நீ எங்க இருக்க? வீடு முழுவதும் பாத்துட்டேன். எங்க இருக்குன்னு தெரியலையே அனு? என்று அம்மா குரல் கொடுக்க
” எங்க இருக்கப் போறா? இங்கதான் எங்கயாவது இருப்பா பாரு. ஏன் இப்படிக் காலையில காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்க” என்று தன் மகள் அனுவுக்குச் சாதகமாக பேசினார் வாசுதேவன்.
” இல்ல குளிக்கணும்னுட்டு போனா போய் ஒரு மணி நேரம் ஆச்சு குளிக்கிறாளா? இல்ல… குளியல் அறையிலேயே தூங்கிறாளான்னு தெரியல. அதுதான் கூப்பிட்டு பார்த்தேன் என்று தன் மகளுக்கு சாதகமாக பேசினாலும் ஜோதி மணிக்கு தன் மகள் குளியல் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று ஒரு விதமான கேள்விக் குறியைத் அவளுக்குத் தந்தது.
சவரியில் இருந்து விழும் தண்ணீர் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. கதவைத் தட்டி கேட்கலாம் என்றால் சிடுமூஞ்சி குளிச்சிட்டு இருக்கேன்; இல்ல ஏன் இப்படி கதவ தட்டுற ? என்று எரிந்து விழுவாள் என்று நினைத்த ஜோதிமணி குரல் மட்டுமே கொடுத்தாள்.
வாசுதேவன் அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தார். உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை அவர் வாய்விட்டு படித்து அத்தனை செய்திகளுக்கும் பின்னோட்டம் சொல்லிக் கொண்டே இருந்தார்.
” என்ன இது தமிழ்நாடு பூராம் கொலைக் களமா இருக்கு. காசுக்கு கொலை பண்ற கூட்டம் அதிகமா போச்சு. அதனாலதான் நானெல்லாம் யாருகிட்டயும் பிரச்சனையை வளக்குறது இல்ல. அம்பது ரூபா கொடுத்தா கூட ஆளை வெட்டிட்டு போயிடுவாங்க போல . அந்த அளவுக்கு மனுஷ உசுரு ரொம்ப மலிவா போச்சு” என்று அன்றைய நாளிதழில் வந்த கொலைச் செய்திகளை படித்துக் கொண்டே வருத்தப்பட்டுச் சொல்லி கொண்டிருந்தார் வாசுதேவன்.
” இதெல்லாம் எப்பவும் நடந்துக்கிட்டு தான் இருக்கு . அரசர் காலத்தில் இருந்து அரசியல் காலம் வரை இதெல்லாம் சகசமான வேலை தான். நம்மால யாரும் பாதிக்கக் கூடாது. .நாம யாரையும் பாதிப்படைய வைக்கக் கூடாது. அப்படி வாழ்ந்தோம்னா நமக்கு எந்த பயமும் இல்லை. அடுத்தவன் கிட்ட இருந்து அடிச்சு புடுங்குறது. இல்ல நம்மகிட்ட இருந்து எவனோ பிடுங்கிறது. இதனால் தான் மத்தவங்க மேல நமக்கு கோபமும் வெறுப்பும் வரும். இது இல்லாம இருக்கிறதை வச்சு சந்தோஷமா வாழ்ந்தோம்னா எங்க வேணாலும் எப்ப வேணாலும் பயம் இல்லாமல் போயிட்டு வந்துட்டு இருக்கலாம்” என்று சமையலறையில் இருந்து ஜோதிமணி குரல் கொடுக்க
” இவ்வளவு அறிவாக பேசுகிறாளே? என்று தன் மனைவி ஜோதி மணியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் வாசுதேவன்.
குளியல் அறையில் சவரில் இருந்து விழும் தண்ணீர் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அதை வாசுதேவன் கவனிக்காமல் இல்லை. வயதுக்கு வந்த பெண் பிள்ளை குளியலறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று கேட்பது ஒரு தகப்பனின் நாகரிகம் அற்ற வார்த்தை தான். அதனால் தான் ஜோதிமணி முன்பு கேட்டதைக் கூட அவளைத் திட்டி அனுப்பினாரே தவிர குளியல் அறையில் இருக்கும் அனுவை எதுவும் கேட்டதே இல்லை. ஆனால் இப்போது வாசுதேவனுக்கு கொஞ்சம் நெருடல் ஏற்பட்டது
” ஆமா அவ சொன்னது உண்மைதான், எதுக்காக இவ்வளவு நேரம் குளிக்கிறா?என்று அவருக்குள் ஒரு சின்னதாக நெருடல் ஏற்பட தன் மனைவி ஜோதி மணியை மெல்லக் கூப்பிட்டார்
ஜோதிமணி என்று குரல் கொடுக்க
” என்ன? ” என்று அங்கிருந்து கேட்ட ஜோதிமணி .
“நீ சொன்னது உண்மைதான். அனு குளியலறையில் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருக்கா நான் கூட நீ சும்மா திட்டுறன்னு நெனச்சேன். உண்மைதான் அவன் குளியலறைக்குள்ள போயி ரெண்டு மணி நேரத்துக்கு மேலாகும் பாேல . அவ என்ன பண்றான்னு தெரியலையே? கொஞ்சம் பாரு” என்று மனைவியிடம் முறையிட
“அதான் நான் அப்பவே சொன்னேன். நீங்க தான் கேட்கல. பெருசா மகளுக்கு சப்போர்ட் பண்ணுனீங்க. இப்ப தெரியுது இல்ல. அவளுடைய பவுசு என்னான்னு?” என்று சொல்லிக் கொண்ட ஜோதிமணி குளியல் அறையின் கதவை தட்டினாள்.
“அனு ….அனு … குளியல் அறையில இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருக்க? அப்பாவும் வெளில போகணும். அவரும் குளிக்கணும். சீக்கிரம் வெளிய வா என்ற போது, அப்போதும் எந்த சத்தமும் வரவில்லை. சவரில் இருந்து விழும் தண்ணீர் சத்தம் வீடு முழுவதும் பெருகியது.
” என்னங்க எதுவும் பேச மாட்டேங்கிறீங்க அவ செல்போன் எங்க இருக்கு. அடிச்சுப் பாருங்க” என்று ஜோதிமணி சொல்ல, இதற்கு பதில் சொல்லாத வாசுதேவன் தன் செல்போனை எடுத்து அனுவிற்கு ஃபோன் செய்தார்.
“நிலா ….நிலா…. நீ என் நிலா……”என்ற ரிங்டாேன் கேட்டது. அது அவள் இருக்கும் குளியல் அறையில் இல்லை அவளுடைய அறையிலிருந்து பாடிக்கொண்டிருந்தது.
“ஏங்க போனை இங்கேயே வச்சுட்டு போயிருக்கா போல, சும்மாதான் குளியலறைக்குள்ள போய் இருக்கா” என்று சொல்லிய ஜோதிமணி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் குளியலறையின் கதவை வேகமாக தட்டினாள். அப்போதும் எந்த சத்தமும் இல்லை .ஏதோ அவர்களுக்குள் ஒரு நெருடல் ஏற்பட
” ஏங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு. என்னன்னு வந்து பாருங்க என்று கணவன் வாசுதேவனிடம் ஜோதிமணி முறையிட ,வயதுப் பெண் குளித்துக் கொண்டிருக்கும் குளியலறைக் கதவைத் தட்டுவது அவருக்கு ஒப்பவில்லை என்றாலும் வேறு வழி இல்லை என்று அவரும் தன் பங்குக்குக் கதவைத் தட்டினார்
குளியலறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. பயந்து போன இருவரும்
“என்ன இது?எந்த சத்தமும் இல்லையே? என்று குளியலறைக் கதவை வேகவேகமாகத் தட்டினார்கள். அப்போதும் சத்தம் வரவில்லை.
“எனக்கு என்னமோ பயமா இருக்குங்க. என்னன்னு பாருங்க என்று கதறினாள் ஜோதிமணி.
வாசுதேவனுக்கு வேர்த்துக் கொட்டியது. தன் மகளுக்கு என்னவோ நடந்து விட்டது? என்று நினைத்தவர் தன் பலம் கொண்ட மட்டும் அந்தக் குளியலறைக் கதவை தன் தோள்பட்டையால் இடித்து மோதித் திறந்தார்.மூடி இருந்த கதவு பட்டென்று திறந்து கொண்டது.
” என்னப்பா என்ன செஞ்சிட்டு இருக்கீங்க ? ஏன் குளியலறை கதவை உடைச்சீங்க ? என்று அனுவின் குரல் கேட்டது.
குரல் குளியலறை இருந்து வரவில்லை.
” என்னம்மா நீ எங்க போயிருந்த . நீ குளியலறைக்குள்ள போகலையா? என்று வாசுதேவனும் ஜோதி மணியும் ஒரு மாதிரியாகக் கேட்க
” குளிக்க பாத்ரூமுக்குள்ள போனேன். ஆனா சாம்பு இல்ல.சோப்பு இல்ல. அதான் வெளியே போய் வாங்கப் போனேன் .அம்மாவும் சமையல் அறையில இருந்தாங்க. நீங்களும் பேப்பர் படிச்சிட்டு இருந்தீங்க. உங்களை தொந்தரவு பண்ண கூடாதுன்னு வெளியே போனேன். சவரைத் திறந்து விட்டதை மறந்திட்டு அத அடைக்காம போயிட்டேன். வெளியே தாழ்போட்டு இருந்தனே அத நீங்க பாக்கலையா?” என்று அனு சொல்ல, உடைந்த கதவை உற்றுப் பார்த்தார் வாசுதேவன், வெளிப்பக்கம் தாழிடப்பட்ட்டிருந்தது தெரிந்தது
அய்யய்யோ தவறு பண்ணிட்டோமே? நல்ல கதவு போச்சே. வருத்தப்பட்டார் வாசுதேவன்
“சரி போங்கப்பா. நான் குளிச்சிட்டு ஆபீஸ் போகணும்? என்று உடைந்த கதவைத் தூக்கி நிமிர்த்தி வைத்து உள்ளே குளிக்க போனாள் அனு.
ஜோதிமணியைக் கொலை வெறியோடு பார்த்தார், வாசுதேவன்.
ஜோதிமணிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது
இன்னும் அடங்கவில்லை.
#அறைகள் சொல்லும் கதைகள் #சிறுகதை