இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்
தூத்துக்குடி, செப். 16–
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
இந்திய விண்வெளி ஆய்வு மையம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, ராக்கெட்டுகளை விண்ணிற்கு செலுத்தும் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட உள்ளன. இதுவரை 140-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள் செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டுக்குள் நிறைவு
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான 2,400 ஏக்கா் நிலத்தில் 2,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 400 ஏக்கா் நிலம் வரும் நவம்பருக்குள் கையகப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஏவுதளம் அமைவிடத்துக்கு சுற்றுச்சுவர், கட்டடம் கட்டும் பணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவுபெற்று, ராக்கெட் ஏவும் பணி தொடங்கும் என சிவன் கூறினார்.