செய்திகள்

குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ இணையதளம்

Makkal Kural Official

அமித்ஷா தொடங்கி வைத்தார்

புதுடெல்லி, ஜன.8-

குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ என்ற இணையதளத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

டெல்லியில் பாரத் மண்டபத்தில் ‘பாரத்போல்’ என்ற இணையதளம் தொடக்கவிழா நடந்தது. குற்ற வழக்குகளில் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற இந்த இணையதளத்தை சி.பி.ஐ. உருவாக்கி உள்ளது.

நிகழ்ச்சியில், ‘பாரத்போல்’ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

‘பாரத்போல்’ இணையதளம் மூலம் மத்திய, மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகள் எளிதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசை தொடர்பு கொள்ளலாம்.

இன்டர்போலில் சேர்ந்துள்ள 195 நாடுகளிடம் இருந்து தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை பெறலாம். அந்த வழக்குகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதன்மூலம் விசாரணையை துரிதப்படுத்தலாம்.

சர்வதேச சவால்கள் மீது நாம் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அதற்கேற்ப நமது உள்நாட்டு அமைப்புகளை தரம் உயர்த்த வேண்டும். அந்த இலக்கை நோக்கிய நடவடிக்கைதான் ‘பாரத்போல்’ ஆகும்.

இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு, வெளிநாட்டில் தலைமறைவாகும் குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன்பு நிறுத்த நவீன தொழில்நுட்பத்தையும், நுணுக்கங்களையும் நாம் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

மோடி அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய 3 குற்றவியல் சட்டங்கள், தலைமறைவு குற்றவாளிகள் மீதான விசாரணை சிறந்தமுறையில் நடப்பதை உறுதி செய்யும்.

‘பாரத்போல்’ தொடர்பாக மாநிலங்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை சி.பி.ஐ. ஏற்றுக் கொள்ள வேண்டும். 3 குற்றவியல் சட்டங்கள் பற்றியும் பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *