சென்னை, மே 21–
காவல் நிலையங்களில் குற்றவாளிகள் போலீசாரை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில், “காவல் நிலைய மரணங்கள் தடுப்பு” என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம், தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் இன்று காலை துவங்கியது.
கருத்தரங்கிற்கு முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
காவல் நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இதில் 350 பேர் பயிற்சி எடுக்க உள்ளனர். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில், 919 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 84 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
பயிற்சி வழங்கப்படும்
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், காவல் நிலையங்களில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அவர்களை லத்தியால் தாக்காமல், எப்படி விலங்கு போடுவது என்பது குறித்த பயிற்சி தரப்பட உள்ளது. காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது என தெரிவித்த அவர், உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள் என குறிப்பிட்டார். அதேபோல சிலர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார். காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என தெரிவித்த டிஜிபி, லாக் அப் மரணமே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இந்த இந்த பயிற்சியின் நோக்கம் என குறிப்பிட்டார்.