அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, ஜூலை 15–
குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:– மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீசார் பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.வினர் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனையும் விசாரிக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.
விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை, எதிர்க்கட்சியினரும் பணம் தரவில்லை. இடைத்தேர்தலை அண்ணா தி.மு.க. புறக்கணித்தது.
அண்ணா தி.மு.க. வாக்குகள் தங்களுக்கு விழும் என்று பா.ம.க. நினைத்தது ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தி.மு.க. பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி மிகப்பெரிய எழுச்சியை முதலமைச்சருக்கு தந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்ற வெற்றியை விக்கிரவாண்டி மக்கள் தந்திருக்கிறார்கள்.
இவ்வாறு ரகுபதி கூறியுள்ளார்.