சிறுகதை

குற்றம் பார்க்கின் – கரூர். அ. செல்வராஜ்

காலையில் வந்த செய்தித் தாளை மாலையில் மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டிருந்தார் பாலன்.

மாலையில் பெய்த மழையின் குளிர் நிலையைப் போக்க சூடான இஞ்சி டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்த மாலதி தன் கணவனிடம் தந்து விட்டுப் பக்கத்தில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து,

‘‘என்னங்க’’

‘‘சொல்லு மாலதி’’

‘‘சொன்னா கோபப்படுவீங்களா?’’

‘‘மாலதி! சொல்ல வந்த விஷயம் என்னன்னு நீ முதல்லே சொல்லு. அதுக்கப்புறம் எனக்குக் கோபம் வருமா? வராதா? அப்படீங்கிறதைப் பார்க்கலாம்’’.

‘‘சரிங்க, சொல்லறேங்க.. அது வந்துங்க… மதுரையிலே காலியா இருக்கிற வீட்டை என்னுடைய பெரியம்மா வாடகைக்கு கேட்கிறாங்க. குடுக்கலாமா?’’ என்று மெதுவாகக் கேட்டாள் மாலதி.

மனைவி மாலதியின் பேச்சைக் கேட்டு அதற்குப் பதில் சொல்லும் முன்பு இஞ்சி டீயைக் குடித்து முடித்துவிட்டு காலியான டம்பளரை மனைவிடம் தந்து விட்டு பேச ஆரம்பித்தார் பாலன்.

‘மாதவி! நம்ம மதுரை வீடு 7 மாசமா காலியா இருக்குது. புதுசாக் குடியிருக்க வாடகை வீடு தேடறவங்க வாடகை குறைவா கேட்கிறாங்க. காரணம் கேட்டா கொரோனாவாலே வருமானம் குறைஞ்சு போச்சுங்கிறாங்க. நம்ம மதுரை வீட்டை மாதம் 7 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவா வாடகைக்கு விட முடியாது. வீடு வாடகைக்கு கேட்கிற உங்க பெரியம்மாவாலே 7 ஆயிரம் ரூவாய் தர முடியுமா?’’ என்று ஒரு கேள்வி கேட்டார் பாலன்.

‘‘என்னங்க! நான் சொல்ற விஷயத்தைக் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. என் பெரியம்மாவுக்கு இப்ப பென்சன் பணம் மட்டும் தான் வருமானமா வருது. அதை வச்சுதான் வாழணும். பெரியம்மாவின் மகளுக்கு இன்னும் வேலை கிடைக்கலே. இந்த நிலைமையிலே வீட்டு வாடகைப் பணம் 7 ஆயிரம் குடுக்கிறது ரொம்ப சிரமம். நீங்கள் கொஞ்சம் மனசு எறங்கினா நல்லா இருக்கும்’’ என்றாள் மாலதி பணிவாக.

மனைவியின் பேச்சில் உடனே மனம் இரங்காத பாலன்,

‘‘மாலதி! உங்க பெரியம்மாவுக்காக என்னை மனமிரங்கச் சொல்லிக் கேட்கறே. உங்க பெரியம்மா புருஷன் உயிரோடு வசதியா இருந்த காலத்திலே நீ ஒரு உதவி கேட்டே. அதாவது புதுசா வீட்டு மனை வாங்கிறதுக்கு 75 ஆயிரம் பணம் கேட்டே. அதுவும் கடனாதான் கேட்டே. அந்தப் பணத்தை உங்க பெரியம்மா புருஷன் தரலையே? அதைக் கொஞ்சம் உன் மனசிலே நினைச்சுப் பாரு. வாழ்க்கையிலே வசதியும் பணமும் வரும் போகும். ஆனா வாழும் காலத்திலே மத்தவங்களுக்கு உதவி செய்யணும். அதுவும் நெருங்கிய சொந்தங்களுக்கு ஒரு சின்ன உதவியாவது கண்டிப்பாக செய்யணும். அதைச் செய்யத் தவறியவன் நல்ல மனுஷன் இல்ல’’ என்று கடுமை கலந்து கனிவாகப் பேசினார் பாலன்.

கணவனின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்த மாலதி தன் கணவனிடம் ‘‘என்னங்க! குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லங்க. எங்க பெரியம்மா வீட்டுக்காரர் செய்த தவறுக்காக பெரியம்மாவைத் தண்டிக்க வேண்டாம். மதுரை வீட்டை என்னுடை பெரியம்மாவுக்கு வாடகைக்கு விடலாம். வீட்டு வாடகைப் பணமா 6 ஆயிரம் ரூபாய் வாங்கித் தர்றேங்க’’ என்று கெஞ்சிக் கேட்டாள் மாலதி.

மனைவியின் பேச்சைத் தட்டமுடியாத பாலன் தனது சம்மதத்தைச் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *