பத்திரிகையாளரின் செல்போன் பறிமுதல்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் குட்டு
திருவனந்தபுரம், ஜூலை 11–
பத்திரிகையாளரின் செல்போனில் குற்றம் பற்றிய சில தகவல்கள் இருப்பதால் மட்டும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் அதை பறிமுதல் செய்ய முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மூத்த பத்திரிகையாளர் ஜி.விசாகன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரிகள் எனது வீட்டை சோதனையிட்டு, யூடியூப் சேனலின் செய்தி ஆசிரியர் ஷஜன் ஸ்காரியாவைப் பற்றிய தகவல்களைக் கேட்டதாகவும், பிறகு தனது செல்போனை பறிமுதல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பத்திரிகைப் பணி எனும் வாழ்வாதாரத்தின் அடிப்படையே அந்த செல்லிடப்பேசிதான் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் கூறும்போது, ஒரு பத்திரிகையாளர், தனது செல்போன் வாயிலாகத்தான் பல்வேறு தகவல்களைப் பெறுகிறார். ஆனால், எதனை ஒளிபரப்ப வேண்டும், எது உண்மை என்பதை அவர் பெறும் அனைத்துத் தகவல்களையும் பரிசீலனை செய்த பிறகே முடிவு செய்வார். தனக்கு வரும் தகவல்கள் அனைத்தையும் ஒளிபரப்பி விடுவது என்பது, பத்திரிகை தர்மம் ஆகாது.
அடுக்கடுக்கான கேள்வி
எனவே, ஒரு வழக்குத் தொடர்பான தகவல் அவருக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அதற்காகவே உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவரது செல்போனை பறிமுதல் செய்துவிடக் கூடாது. இந்த மனுவில், மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்காரியா சம்பந்தப்பட்ட குற்றத்தில் தன் மீது எந்தக் குற்றமும் சாட்டப்படவில்லை என்றும், இதுநாள் வரை குற்றஞ்சாட்டக்கூடிய எந்த ஆதாரமும் இல்லை என்றும் மனுதாரர் மேலும் கூறுகிறார். செய்தியாளர்களிடையே செய்திகளைப் பகிர்வது வழக்கமான நடைமுறை என்றும், ஆனால் அண்மையில், மனுதாரர் செய்திகளைப் பகிர்வதற்காக ஸ்கரியாவிடமிருந்து எந்த ஊதியமும் பெறவில்லை என்றும், வேறு சிலர்தான் அவரது செய்திகளை பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரின் செல்லிடப்பேசியில், குற்ற வழக்கு தொடர்பான தகவல்கள் இருப்பதால், அதனை பறிமுதல் செய்ய வேண்டியது அவசியம் என்றாலும், உரிய நடைமுறைகளை பின்பற்றியே பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காவல்நிலைய அதிகாரிக்கு, எந்த சூழ்நிலையில் மனுதாரரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து வாக்குமூலம் பதிவு செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் ஒத்திவைத்துள்ளார்.