சென்னை, பிப்.29-
குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை இழக்கின்றன.
2023–24ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து முடிந்து கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து காணப்பட்ட நிலையில், 2023–24-ம் கல்வியாண்டில் ஓரளவுக்கு மாணவர் சேர்க்கை இருந்தது.
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததன் காரணமாக என்ஜினீயரிங் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்ல தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக கொண்ட 11 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரத்தை 2024–25ம் கல்வியாண்டில் வழங்குவதில்லை என்ற முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமல்லாமல், என்ஜினீயரிங் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் 2023–24ம் கல்வியாண்டில் 25 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட 67 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு வரும் கல்வியாண்டில் இணைப்பு அங்கீகாரம் நிபந்தனையுடன் வழங்கப்பட இருப்பதாகவும், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பல்கலைக்கழகம் முடிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.