சங்கரநேத்ராலயா மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்
சென்னை, நவ.19–
“நம் பாரதத்தில் ஓவ்வொரு வருடமும் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். நம் பாரதத்தின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், குறைப்பிரசவத்துல் பிறந்த குழந்தைகள் பார்வை இழப்பை தடுத்தால் ஒளிமயமான எதிர்காலத்தை வழங்கிட முடியும் என்று டாக்டர் ஹரிஹரன் குறிப்பிட்டார்.
உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு நாள், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. சென்னை, ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மேல்நிலை பதிவாளர் டாக்டர் எஸ். ஹரிஹரன் சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த சங்கர நேத்ராலயாவின் மேல்நிலை, விழித்திரை மற்றும் புற்றுநோய் நிபுணர், டாக்டர் சுகனேஷ்வரி கணேசன், வளர்ச்சியடையா விழித்திரை பற்றி விவரித்தார். 2.5 கோடியில் 17 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்துல் பிறக்கின்றனர். மேலும் இந்த குழந்தைகளுக்கு வளர்ச்சியடையா விழித்திரை நோய் உருவாகும் அதிக வாய்ப்பு உள்ளது.
குழந்தை பிறந்த 25 –- 30 நாட்களுக்குள் முதல் இந்நோய்க்கான பரிசோதனை செய்தால் மட்டுமே இந்த நோயிலிருந்து பார்வை இழப்பைத் தடுக்க முடியும். 2 கிலோவிற்கும் குறைவான அல்லது அதற்கு சமமான எடையுடன் பிறந்திருந்தால், பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன் கண் பரிசோதனை செய்ய வேண்டும். 2 கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தைகளுக்கு, சிகிச்சை அளிக்கும் குழந்தை மருத்துவர் தொற்று, சுவாசக் கோளாறுகள் போன்றவை இருந்தால், அவர்களுக்கும் விரிவான கண் பரிசோதனை செய்ய வேண்டும்.
தாமதமாக அல்லது சிகிச்சையளிக்கப்படாமல் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால், கடுமையாக மீளவே முடியாத பார்வையிழப்பு ஏற்படலாம். இந்தியாவில் இதன் காரணமாக பார்வையிழப்பினைத் தடுப்பதற்கான பல்வேறு வகையான சேவைகளை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் தற்போது பெற்று வருகின்றனர். அவை குழந்தைகள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த் காரியக்ரம் மற்றும் தேசிய பார்வையிழப்பு தடுப்புத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் சங்கர நேத்ராலயாவின் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் கிரிஷ் ஷிவா ராவ், துணைத் தலைவர் மற்றும் குழந்தைகள் கண் மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், தி சங்கர நேத்ராலயா அகாடமி மற்றும் சி யு ஷா கண் மருத்துவ பட்ட மேற்படிப்பு மையத்தின் பதிவாளர் டாக்டர் ஸ்மிதா விட்டல், குழந்தைகள் கண் மருத்துவ துறை துணை இயக்குநர் டாக்டர் ஸ்மிதா அகர்கார் ஆகியோரும் உரையாற்றினர்.