முழு தகவல்

குறும்படங்களுக்கு வழி திறக்கும் கீழாம்பூரின் ‘கலைமகள் படைப்பாளிகள்!’

* பாலச்சந்தர் ஸ்டைலில் ஜெயா ஸ்ரீனிவாசன் * பாரதிராஜா பாதையில் டாக்டர்.ஜெ.பாஸ்கரன்

* பாக்கியராஜ் பாணியில் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் * பாலுமகேந்திரா யதார்த்தத்தில் திருப்பூர் கிருஷ்ணன்

தீபாவளி மலரில் பிரமிப்பில் ஆழ்த்தும் சாதனை பெண் ஆடிட்டர் பட்டியல்


கையில் எடுத்தோம், படித்தோம், முடித்தோம்… என்று அரை நாளில் படித்து முடித்து விடக்கூடிய புத்தகமா, கலைமகள் தீபாவளி மலர் 2021.?

இல்லை, ஆற அமர பொறுமையாகப் படித்து ரசிக்க குறைந்தபட்சம் 60 மணி நேரமாவது வேண்டும்.

அந்த அளவுக்கு ஆசிரியர் கீழாம்பூரின் தலைமையில் அவரது சகாக்கள் (கே.ராஜகோபாலன், கெளசிக்ராஜா, கவிஞர் முருகதாசன், கொடுமுடி ஜெயராமன்) உருவாக்கி இருக்கும் வழக்கமான உயர் தரத்தில் தீபாவளி மலர்!

‘‘செந்தமிழை செழிக்கச் செய்வதுதான் லட்சியம். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் கலைமகளின் 90-வது ஆண்டில் வெளியாகி இருக்கும் தீபாவளி மலர், கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் மனம் திறந்தது தலையங்கம். (தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!)

வாகீச கலாநிதி கி.வா.ஜவின் புனைப்பெயர் ஜோதி. அவர் எழுதிய மயிலை உடனுறை தாயார் கற்பகவல்லி மீதான ஒரு பாடல், கற்பகவல்லி தாயாரின் படம் அட்டையில் ஓவியர் வேதாவின் கைவண்ணம்.

‘‘விதியின் மூலம் எது கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு திருப்தியோடு இரு–’’ பகவத்பாதாள் அறிவுரையை மேற்கோள் காட்டும்: திருப்தி உடையவனே பாக்கியசாலி– சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகளின் கட்டுரை

‘‘சாஸ்திரப்படி நடந்தோமானால்… நாம் சௌக்கியமாக வாழலாம், மேன்மை பெற’’ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருள் வாக்கு!

இல. கணேசன் ஆய்வு

‘‘வேதத்தை தொகுத்தவர் வியாசர். என்னைப் பொறுத்தவரை இரண்டாம் வியாசர் தமிழ் வியாசர், தமிழ் தாத்தா உவேசா’’ பற்றி மணிப்பூர் கவர்னர் இல. கணேசன் ஆய்வுக் கட்டுரை!

பாரதம் சுதந்திரம் அடைந்த நேரத்தைக் கொண்டு கணித்த ஜாதகம் பற்றி நித்யாவின் கட்டுரை. சந்திரன் – சனி – சுக்கிரன் – புதன்– சூரியன் இப்படி ஐந்து கிரகங்களும் ஒன்றாய் இருப்பதால் பாரதத்தில் மகான்கள் அதிகம் உள்ளனர் என்று புதுத் தகவல்!

அகில இந்திய வானொலியில் நிரந்தரப் பணியில் ஆஸ்தான (நிலைய) வித்வான்கள் இருப்பதைப்போல… கீழாம்பூரில் கலைமகளுக்கு என்று ஆஸ்தான படைப்பாளிகள் வட்டம். ஒருத்தரை ஒருத்தர் ஓரங்கட்ட வைக்கும் நீயா நானா போட்டி, வலி மையில் அவர்களின் மை!

* ஒரு பொய்யால் ஒரு காதல் கல்யாணம் மலர்ந்தது அருமை, தேவிபாலா மூலம்!

* ஒரு உண்மையால் ஒரு கல்யாணம் நின்றது; அது இன்னொரு கல்யாணம் வென்றது– புதுமை, ராஜேஷ்குமாரின் மெய்யான பொய்கள்!

* பொய்யில் சுகமான ரெயில் பயணம். எதார்த்த நடை, ரசிக்க வைக்கும் டைரக்டர் விசு ஸ்டைலில் நரசய்யாவின் ஞாலத்தின் பெரிது!

* வாழ்க்கைக்கு பக்தி அவசியமோ இல்லையோ சத்தியம் ரொம்ப ரொம்ப அவசியம்: கே.எஸ். ரவிக்குமார் ஸ்டைலில் இலக்கியவீதி இனியவனின் சங்கே முழங்கு!

ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் கவிதை

* பொய் சொல்லி கடன் வாங்கும் வரது; அவரை திருந்த வைக்கும் ஆட்டோ கபாலி: சித்ராலயா கோபு ஸ்டையிலில் சிவி. சந்திரமோகனின் என் பணி கடன் வாங்கிக் கிடப்பதே!

* ஒரு பொய் அடுத்தடுத்து சொல்ல தலைசுற்ற வைக்கும். சுபாஷ் சந்திரனின் வாடகை வீடு!

* சுருக்கென்று மனசைத் தைக்கும் வெட்டி வேர்கள்: ஆர்.பார்த்திபனின்ஸ்டைலில் வித்யா சுப்பிரமணியம்!

* அடுத்தடுத்து பிறவி வேண்டும் நீயே தாயாய் வரவேண்டும். நிஜத்தின் பிரதிபலிப்பில் முனைவர்– ஆடிட்டர் ஜே. சுப்பிரமணியனின் அம்மா கவிதை.

* கல்யாண ராமனுக்கு கல்யாணம், கேள்விக்குறி. கலகலப்பாய் கதை நகர்த்தும் ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன் கே. பாக்யராஜ் ஸ்டைலில்!

* கண்ணைத் திறக்க வைக்கும் டாக்டர்.ஜெ. பாஸ்கரனின் புது ஜாதி, பாரதிராஜா ஸ்டைலில்!

* விழி ஓரம் நெகிழ்ச்சியில் கண்ணீர் திவலைகளை உருள வைக்கும் திருப்பூர் கிருஷ்ணனின் திருப்பங்கள்: பாலுமகேந்திரா ஸ்டைலில்!

சிவசங்கரி, செங்கோட்டை ஸ்ரீராம், இந்திரா சௌந்தரராஜன், டாக்டர் ஜாய்ஸ் திலகம், சுபா, இதயகீதம் ராமானுஜம், பாரதிக்காவலர் டாக்டர் கே ராமமூர்த்தி, ரவீந்திரன், பெண் நாவலாசிரியர் ஜோதி பெருமாள், ஜே ராதாகிருஷ்ணன், கௌசிக் ராஜா ‘கிளிக்’ ரவி, சிங்கப்பூர் புருஷோத்தமன், முனைவர் வ வே சு, ஜோதிர்லதா கிரிஜா, வையவன் படைப்புகளும்: மலரில் ரசிக்க!

* கீழாம்பூரின் பூரி ஜெகநாதர் ஆலயப் பிரவேசம் மாத்தளை சோமுவின் பௌத்த கோவில்கள்: ஆன்மீக உள்ளங்களுக்கு! (இருந்த இடத்திலிருந்தே க்ஷேத்ராடனம்).

* சீனி விசுவநாதனின் மகாகவி பாரதியாரின் பெருந்தன்மை, நல்லி குப்புசாமி செட்டியாரின் காஞ்சி தந்த கலைவண்ணம்: ருசிக்கும் தகவல்களோடு!

தீபாவளி மலர் 204 பக்கம், விலை ரூ.75.

பொய்யின் பின்னணியில் நான்கு கதைகள், கல்யாணம் பின்னணியில் நான்கு கதைகள்: சொல்லி வைத்தாற்போல்!

மனத்திரையை விட்டு நீங்காத மணி மணியான கதைகள். 30 நிமிடம் அல்லது 60 நிமிடம் ஓடும் குறும்படங்கள் எடுக்க வழி திறப்பாள், கலைமகள்! கௌரவமும், கண்ணியமும் கீழாம்பூருக்கே, சங்கே முழங்கு!


வே. ராம்ஜீ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *