சிறுகதை

குறிப்பறிதல் – ராஜா செல்லமுத்து

நிறைந்து வழியும் நகரப் பேருந்தில், பயணம் செய்து கொண்டிருந்தான் வடிவேல்.

ஆண்கள் அமரும் இருக்கையின் மேல் திருடர்கள் ஜாக்கிரதை என்றும் பெண்கள் அமரும் இருக்கைக்கு மேலே மகளிர் பூவையர், வளைக்கரம் என்றும் எழுதியிருப்பதாக வடிவேல் தனக்குத்தானே பேசிக்கொண்டு வந்தான்.

அவன் பேசியதை சிலர் ஆமோதித்தார்கள் .

ஆமா சார் நானும் தமிழ்நாடு பூரா சுத்தி இருக்கேன். ஆம்பளைங்க உட்கார பக்கம் மட்டும் தான் திருடர்கள் ஜாக்கிரதை எழுதுறாங்க .ஏன் பொம்பளைங்க எல்லாம் திருட மாட்டாங்களா ?பொம்பளைங்கள்ல திருடியும் இருக்கிறார்கள் என்று வடிவேல் பேசுவதற்கு சாதகமாக பேசிக்கொண்டு வந்தார் ஒரு பயணி.

அந்தக் கூட்டத்தில் ஒருவன் அவனுடைய பாக்கெட்டில் நின்று கொண்டிருந்த ஒருவன் திருடி விட்டதாக சண்டை போட, அங்கே சின்ன சலசலப்பு ஏற்பட்டது .பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் அந்த திருடன் பிடித்து நையப்படைத்தார்கள் .

அவன் தான் திருடவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக அழுது கொண்டு இருந்தான்.

ஆனால் அந்தத் திருடன் தன் பாக்கெட்டில் கைவிட்டதாக ஒருவன் சொல்லிக் கொண்டே வந்தான். இருவரையும் சமாதானப்படுத்தி படுத்தினார் நடத்துனர்

பேருந்து தன்னுடைய வழித் தடத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஊரெல்லாம் மெட்ரோ ரயில் போடும் திட்டத்திற்காக ஆங்காங்கே குழி தோண்டி வைத்திருந்தார்கள். கொஞ்ச தூரம் செல்ல வேண்டுமென்றால் கூட அதிக நேரம் எடுத்தது .

அந்தப் பேருந்து பயணத்தில் ஒரு பெண் ஐயா என்று அலறினாள் மொத்த பேருந்தும் அந்தப் பெண் இருக்கும் திசையை நோக்கி திரும்பினார்கள்.

அந்தப் பெண் தன் கைப்பையில் இருந்த தங்க நகையை யாரோ திருடி விட்டதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

சில்லறை, பணம், திருடு போயிருந்தால் கூட அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யாத மனிதர்கள் தங்க நகை திருடு போனதற்காக ஒருவரும் வாய் கூட திறக்கவில்லை. எங்கே நம் மீது பழியை போட்டு விடுவார்களோ என்று அச்சத்தில் உறைந்து இருந்தார்கள் பேருந்து பயணிகள் .

பேருந்து ஓரிடத்தில் ஓரம் கட்டப்பட்டது. அந்தப் பெண் தன்னுடைய கைப்பையில் 10 சவரன் தங்க நகை வைத்திருந்ததாகவும் அதை யாரோ திருடி கொண்டு போய்விட்டதாகவும் புலம்பிக் கொண்டிருந்தாள்

திருடுனவன் பஸ்லேய வருவான் அவன் இந்நேரம் எங்கு போய் இருப்பானோ? யாருக்குத் தெரியும் தங்க நகைய இப்படியா இவ்வளவு ஆள் இருக்கக் கூடிய பஸ்ல காெண்டு வர்றது. தவறு உங்க மேல தான் என்று நகை திருடு கொடுத்த பெண்ணையே புகார் கூறிக் கொண்டிருந்தார்கள் பயணிகள்.

நான் என்னங்க பண்றது ?இது பப்ளிக் பஸ் தானே ?இதுல வர்றது என்ன தப்பு திருடன குற்றம் சொல்லாம என்ன போய் திட்டிகிட்டு இருக்கீங்களே? என்றாள் அந்தப் பெண். பாேலீசார் வரவழைக்கப்பட்டனர்

பேருந்தில் இருந்த மொத்தப் பயணிகளையும் ஒவ்வொருவராக இறக்கி சோதனை செய்து கொண்டு இருந்தனர் காவலர்கள்.

ஒரு சிலர் தாங்கள் செல்லும் பணி தடைபட்டு விட்டதாகவும் நேரம் ஆகிக் கொண்டிருப்பதாகவும் புலம்பினார்கள்.

ஆனால் அத்தனை பேரையும் ஒரு போலீஸ்காரர்கள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள் மொத்த பேரையும் பரிசோதனை செய்தும் யாரிடமும் நகை இல்லை என்பது தெரியவந்தது.

நகையை பறி கொடுத்தவள் ஓவென்று அழுது கொண்டிருந்தாள் .

ஒன்னும் பயப்படாதீங்க உங்க நக நகைய திருடன் அவனை கண்டிப்பாக புடிச்சிரலாம். நீங்க வீட்டுக்கு போங்க என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார் ஒரு காவலர்.

மறுபடியும் பரிசோதனை செய்யப்பட்ட பயணிகள் எல்லாம் பேருந்தில் ஏறினார்கள்.

சில பயணிகள் பேசிக் கொண்டார்கள் இந்த பொம்பளைங்களே இப்படித்தான் எது இலவசமாக கிடைக்குதோ? அதை பயன்படுத்திக்கிறாக இப்ப பாருங்க 4 லட்ச ரூபா பணத்துக்கு நகை எடுக்க தெரிந்த இந்த பொம்பள, நாற்பது ரூபாய் கொடுத்து ஆட்டோல போகாம, ஓசி பஸ்ல தான் ஏறி வந்ததுனால இந்தச் சூழ்நிலை உருவாயிருக்கு.

இலவசமாக பயணம் செய்யணும். அது எதுக்கு பயன்படுத்தணும்னு தெரியனும்; இல்லன்னா இந்த பொம்பளையோட கதி தான் நமக்கும் என்று அங்கிருக்கும் பெண்கள் சொல்லிக் கொண்டார்கள்.

4 லட்ச ரூபாய் நகையை பறி கொடுத்தவள் பத்து ரூபாய் பேருந்து பயண சீட்டு சேமிப்பதற்காக ,மொத்த நகையும் திருடு கொடுத்து விட்டாள் என்று அங்கு இருந்தவர்கள் சொல்லாமல் நினைத்துக் கொண்டார்கள்.

பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது அந்த பெண் அழுது கொண்டிருந்தாள்.

டிக்கெட், டிக்கெட்என்று நடத்துனர் அடுத்த நிறுத்தத்திலேயே ஏறிய பெண்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

டிக்கெட் வாங்கிட்டீங்களா? என்று கேட்க, வாய் திறக்காமல் வாங்கி விட்டதாக தலையை மட்டும் ஆட்டினாள் நகையைப் பறிகாெடுத்த அந்தப் பெண்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *