சிறுகதை

குரு | ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி ஏழு.கார் ஓட்டிப்பழக டிரைவிங் ஸ்கூலுக்கு தன் நண்பன் கண்ணனுடன் போன தேவராஜ் முதல் நாள் பயிற்சி முடிந்து வீடு திரும்பினான்.
வீட்டுக்குள் நுழைந்தான் தேவராஜ்.கூடவே கண்ணனும் வந்தான்.
மனைவி காயத்திரி இருவரையும் வரவேற்று காபி கொடுத்து விட்டு, கணவன் தேவராஜிடம் முதல் நாள் அனுபவம் பற்றி விசாரித்தாள்.
” அதை ஏன் கேட்கிறே காயு. கீர் மாத்தற விசயத்துல தப்பு பண்ணிட்டேன்.சும்மா காச்மூச்சுனு சத்தம் போட்டார் ஓனர். கிளச்சை மிதிக்கச் சொன்னார்,நான் ஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டேன்.மூளை இருக்காஅறிவு இருக்கானு திட்டினார்.ஸ்பீடு பிக்கப்பண்ணச் சொன்னதுக்கு நான் பிரேக்கை அழுத்திட்டேன்.அதுக்கும் திட்டு.முதல் நாள் தானே,ஸ்டேரிங்கை சரியா எனக்கு பிடிக்க வரலே.அதுக்கு’ வாள் வாள் ‘ னு கத்தினார்.”
” சரியான சிடுமூஞ்சியோ?! கார் வேற வாங்கப்போறம்.திட்டாம கத்தாம எந்த குருவும் அன்பா பொறுமையா சொல்லிக்கொடுக்க மாட்டாங்க போல இருக்கே” என்றாள் காயத்திரி.
இவர்கள் பேசியதை பொறுமையாய் கேட்ட கண்ணன் தன் வீட்டுக்கு புறப்பட்டான்.
கூடவே வாசல் வரை வந்த தேவராஜிடம்,” ஏன்டா தேவா அந்த டிரைவிங் ஸ்கூல் குரு நமக்கு அன்பா, பொறுமையா,பொறுப்பாத்தானேடா சொல்லிக் கொடுத்தார். நீ ஒண்ணும் பெருசா தப்பே பண்ணலையே…பின்ன ஏன் உன் மனைவிகிட்ட பொய் பொய்யா சொன்னே?” என்று கேட்டான் கண்ணன்.
“அது வந்து கண்ணா.. நான் என் மனைவிக்கு ஸ்கூட்டி ஓட்டக்கற்றுக்கொடுத்தேன்.அவள் சைக்கிளோ,டிவிஎஸ்-50 யோ ஓட்டிப்பழகின அனுபவம் இல்லாததால நிறைய தப்பு பண்ணினாள்.நான் ஒண்ணு சொன்னால் அவள் வேற ஒண்ணு செய்வாள்.
அதனால கண்டபடி திட்டிட்டேன். திட்டுக்கு பயந்தே ‘ ஸ்கூட்டி ஓட்டவே பிடிக்கல’ னுட்டாள். அதான் அவளை சந்தோஷப்படுத்த அப்படியொரு பொய்யை சொன்னேன். அடுத்த வாரம் நான் அவளை இனி திட்டாம அன்பா, பொறுமையா சொல்லிக்கொடுத்து ஓட்டிப்பழக உதவலாம்னு முடிவு பண்ணியிருக்கிறேன்”என்றான் தேவராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *