ஒரு கொடியில் இரு மலர்கள், எதிர்காலத்தில் மணம் வீசும் நிச்சயம்!
சென்னை, ஜூலை 25–
சென்னையில் முனைவர் மீனா வெங்கட் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி வரும் “நிருத்ய ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ்” பள்ளியின் மாணவிகள் லேகாஸ்ரீ, ஹரிதா. அக்கா- தங்கை, கலா நரேந்தர்- நரேந்தர் குமார் தம்பதியின் மகள்கள். இவர்களது அரங்கேற்றம் மயிலை பி எஸ் தட்சிணாமூர்த்தி கலையரங்கில் சிறப்பாக நடந்தது.
இருவருக்கும் இடையில் நான்கு ஆண்டுகள் வித்தியாசம் (மூத்தவள் லேகாஸ்ரீ- சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஆக்குபேஷனல் தெரபி படிப்பில் முதலாம் ஆண்டு, இளையவள் ஹரிதா- தி நகர் ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு). இருந்த போதிலும், கலையில் சொல்லிக் கொடுத்த பயிற்சியில் இருவரையும் ஒரே நிலையில் கொண்டு வந்து நிறுத்தியவர் குரு மீனா வெங்கட்.
தஞ்சை அருணாச்சலம் பிள்ளையின் சாகித்யம் பஞ்ச மூர்த்தி அஞ்சலியுடன் (விநாயகர், முருகன், நடராஜர், சக்தி…) நிகழ்ச்சியை துவக்கினார்கள் சகோதரிகள். ஜதீஸ்வரம் (தஞ்சை நால்வர்), ஸ்ரீ விநாயகர் மீதான மதுரை என் கிருஷ்ணனின் சாகித்யம் சப்தம் உருப்படிக்கு ஆடிய பின் திறமையை வெளிக்காட்டும் வர்ணம்.
பாபநாசம் சிவனின் சாகித்யம் “உன்னை நினைந்து உள்ளம் பாகாய் உருகுகிறாள் இரவு பகல் முகுந்தா…”: நாயகனை நினைத்து அவன் நினைப்பிலேயே மெழுகாய் உருகும் நாயகியின் நிலையை உணர்த்தும் பாடல்.
‘‘உனது நீல வண்ண மேனியும், உலக வசீகர வேணு கானமும், மோகன இளநகையும், மதி வதனமும் மறக்கலாகுமோ…?!” என்று அவன் நினைப்பிலேயே தன்னைக் கரைத்து உருகும் நாயகி, தோழியிடம் தன் உணர்வுகளை எடுத்துச் சொல்வது போல பாடல்.
தொடர்ந்து ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் சாகித்யம் “குழலூதி மனம் எல்லாம் கொள்ளை…” பாடலுக்கு லேகாவும் ஸ்ரீ, வாசுதேவச்சாரியார் சாகித்யம்
“ மாமவது ஸ்ரீ சரஸ்வதி” பாடலுக்கு ஹரிதாவும் ஆடினார்கள். நிறைவாக தில்லானா, அடையார் கே லட்சுமணனின் சாகித்யம். பிருந்தாவன சாரங்கா ராகம்- வயது வித்தியாசம் இல்லாமல் ரசிக்க வைத்து இளமையில் துள்ள வைக்கும். அது இங்கே அக்கா தங்கை இருவரது விஷயத்திலும், அப்படியே!
வயதுக்கு பொருத்தமான எளிமையான பாடல்களை தேர்ந்தெடுத்து அதில் சகோதரிகளுக்கு குரு மீனா வெங்கட், உரிய பயிற்சி அளித்து இருப்பது பாராட்டுக்குரியது. ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை உள்வாங்கி அவர் கிழித்த அதே கோட்டில் மாணவிகள் நின்று பாவங்களைக் காட்டியதும் பாராட்டுக்குரியது என்று சிறப்பு விருந்தினர்- பரதநாட்டிய ஆய்வு அறிஞர் முனைவர் எஸ்.ரகுராமன் குறிப்பிட்டார்.
பதட்டம் இல்லாமல் ஆடியதும், அரங்கு நிறைந்திருந்ததும் சிறப்பு என்று குறிப்பிட்டவர், சமீப காலத்தில் அரங்கு நிரம்பிய அரங்கேற்றத்தைக் கண்டதில்லை என்றார்.
முனைவர் எஸ். ரகுராமன், குருவின் குரு (மீனா வெங்கட் நடனத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுவதற்கு கைடு) என்னும் அந்தஸ்தில் இருப்பதால், மீனா வெங்கட்டின் குரு பக்தியையும், மாணவிகள் மீதான அக்கறையையும் குறிப்பிட்டு வாழ்த்தினார்.
(முனைவர் பட்டத்திற்கு “வழிகாட்டி” முனைவர் ரகுராமனின் பாசம் இழைந்தோடிய அன்பு அறிவுரையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தலையசைத்து கை கூப்பி நன்றி சொன்ன மீனா வெங்கட்டின் பெருந்தன்மை- சபாஷ்)
அக்கா – பேசும் விழி; தங்கை – கொடி இடை
லேகா ஸ்ரீ இடம் மொழி பேசும் விழிகளும், மோகனப் புன்னகையும் சிறப்பு. ஹரிதாவிடம் நாட்டிய கலைஞருக்கான கொடி இடையும், உணர்வு வெளிப்பாட்டு பாவங்களும் அருமை . வெள்ளைத் தாளில் சிந்திய மையை ஒற்றி எடுக்கும் ‘பிளாட்டிங் பேப்பர்’ போல் குரு சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஆடி காட்டியதில் இருவருக்கும் சம பங்கு உண்டு என்று மக்கள் குரல் வீ. ராம்ஜீ பாராட்டினார்.
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைகளின் பொது மேலாளர் வத்தே ஸ்ரீனிவாஸ், தனக்கும் மாணவர்களின் தந்தை நரேந்திர குமாருக்கும் இருக்கும் நட்பைக் குறிப்பிட்டார். நாட்டியம் பற்றி தனக்குத் தெரியாவிட்டாலும்… ஒரு சாமானிய ரசிகன் எப்படி ரசிப்பானோ அப்படி ரசிக்கும் விதத்தில் ரசித்து சுவைபட தன் ரசனையே வெளிப்படுத்தினார்.
– நட்டுவாங்கம் – குரு மீனா வெங்கட், வாய்ப்பாட்டு – மும்பை ஷில்பா, மிருதங்கம்– எம். எஸ். சுகி, புல்லாங்குழல் – முத்துக்குமார், வீணை – சௌமியா: மூத்த கலைஞர்கள், அரங்கேற்றத்திற்கு வலிமை சேர்த்தவர்கள்.
சிறப்பு விருந்தினர்கள், ஒப்பனை திவ்யபாரதி உள்ளிட்ட திரை மறைவுக் கலைஞர்களை நரேந்திர குமார் தம்பதியினர் கௌரவித்தனர்.
வேக நடையில் – துரித கதியில் இரு சாகித்யங்களை எடுத்திருந்தால் விறுவிறுப்பு இன்னும் கூடி இருக்கும், சகோதரிகள் ஆட்டத்தில் பெருமை மேலும் சேர்ந்திருக்கும். இருந்தாலும்-
நிருத்யா முனைவர் மீனா வெங்கட்டின் கலைத் தோட்டத்தில் எதிர்காலத்தில் மணம் வீசும் ஒரு கொடியில் இரு மலர்கள்- லேகாஸ்ரீ, ஹரிதா!
வீ. ராம்ஜீ
#Dr. S. Raguraman #papanasamsivan #Tanjore Quaraplate #Makkalkural Ramjee #Venkatsubbaiyar