கல்வியாளர்கள் டாக்டர் மாதவன், தாண்டவன் முன்னிலையில் ‘நாட்டிய பத்மம்’ விருது
சென்னை, மார்ச் 6–
சென்னையில் பிரபலமான பத்மலயா நாட்டியப் பள்ளியின் நிறுவனர் – குரு கலைமாமணி பத்மாலட்சுமி சுரேஷின் மாணவி ஸ்மிருதி ஆனந்தின் நாட்டிய அரங்கேற்றம் தி.நகர் வாணி மகாலில் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் கே.எல். மாதவன் (பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர்), டாக்டர் சுதாசேஷையன் (தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்) டாக்டர் தாண்டவன் (சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மாணவி ஸ்மிருதியையும், குருவையும் வாழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் மூவர் முன்னிலையில் ஸ்மிருதிக்கு ‘நாட்டிய பத்மம்’ என்னும் பட்டம் வழங்கி வாழ்த்தினார் குரு பத்மலட்சுமி.
புஷ்பாஞ்சலி – அலாரிப்பு – ஆண்டாள் கவுத்துவம், வர்ணம் – அகிலம் உய்ய ஐயப்பன் அவதரித்த அற்புதம் (குருவின் குரு ரங்கநாயகி ஜெயராமன் இயற்றியது), போ சம்போ, அம்பாள் ஸ்துதி (ஜெகம் காத்திடவே தேவி தோன்றினாளே…) தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
ஆண்டாள் கவுத்துவத்தில் ஆண்டாள் தோற்றத்தில் வந்து நின்ற கோலம் – அந்த வசீகரப் புன்னகை: இதயத்தில் இடம் பிடித்தார் ஸ்மிருதி. அகிலம் ஐயப்பன் அவதரித்த அற்புதம் – சாமீயே… சரணம் ஐயப்பா சாஸ்தாவின் பெருமையைப் படம் பிடிக்கும் பாடல்.
அடர்ந்த காட்டில் பந்தளராஜன் வேட்டைக்குப் போன இடத்தில் தொலைதூரப் புலி பக்கத்தில் வந்தபோது… ஸ்மிருதி தன் முகத்தில் காட்டிய அச்சம், புலிப்பால் கொண்டு வரப் போன இடத்தில் அச்சுறுத்தும் – குலை நடுங்க வைக்கும் புலியை சாதுவாக்கி, அதன் மீது அமர்ந்து வந்தபோது… முகத்தில் காட்டிய சாந்தம், கம்பீரம் – நுணுக்கமான பயிற்சியில் குரு சொல்லிக் கொடுத்ததை முத்திரை – பாவம் காட்டிய விதம் அருமை, அது குருவுக்குப் பெருமை என்று புகழ்ந்துரைத்தார் சுதா சேஷையன்.
தாண்டவம் எது?
லாஸ்யம் எது?
இந்தியாவில் எத்தனை வகை நாட்டியம் வந்தாலும் பரதத்துக்கு தனிச் சிறப்பு தான். ஆண்கள் – ஆடுவது தாண்டவம். அதில் சற்று ஆண்மை – வேகம், வீச்சு இருக்கும். பெண்கள் ஆடுவது லாஸ்யம். அதில் சற்று பெண்மை – நளினம் இருக்கும். ஆண் – பெண் இருபாலருக்கும் நாட்டியத்தில் உண்டு சமபங்கு என்று விளக்கம் கூறிய சுதா சேஷையன், பக்தி இல்லாமல் பரதத்தைப் பார்க்க முடியாது என்றார்.
பக்தி இல்லாமல் – ஆன்மீக உணர்வு இல்லாமல் – ஆன்மீகச் சிந்தனையில்லாமல் பரதம் இல்லை, பரதம் ஆடவும் முடியாது. நாட்டிய உலகுக்கு நல்லதோர் கலைச்சுடரை (ஸ்மிருதி) அளித்திருக்கிறார் குரு (பத்மலட்சுமி) என்று மனம் திறந்து பாராட்டினார், சுதாசேஷையன்.
நட்டுவாங்கம் : பத்மலட்சுமி, வாய்ப்பாட்டு : சித்ராம்பரி கிருஷ்ணகுமார், மிருதங்கம் – பேட் : வெங்கடசுப்பிரமணியன், வயலின் : கண்டதேவி டாக்டர் விஜயராகவன், புல்லாங்குழல் : தேவராஜ். இந்த மூத்த கலைஞர்களும் – ஸ்மிருதியின் ஆட்டத்துக்கு வலு. ஒலி – ஒளி : கேபிடல் குமார் குழுவினர், தனிச்சிறப்பு.
* 32 ஆண்டுகளுக்கு முன் என் மாணவன் ஆனந்த். அவரின் அன்பு மகள் ஸ்மிருதி. நாங்கள் கொடுத்த ஊக்கத்தால், சொந்த விடாமுயற்சியால், கடின உழைப்பால், வாழ்க்கையில் உயர்நிலைக்கு வந்திருக்கிறார் ஆனந்த். இதேபோல கடின உழைப்பு, தீவிரப் பயிற்சியில் மகள் ஸ்மிருதி நாட்டியத்தில் உயர வேண்டுமென்று வாழ்த்தினார் டாக்டர் மாதவன்.
* நாட்டியம் இன்னதென்றே தெரியாது எனக்கு. ஆனால் என் பெற்றோர்களோ எனக்குத் தாண்டவம் என்று பெயர் சூட்டி விட்டார்கள். தாண்டவத்தின் உண்மை அர்த்தத்தை இந்த 73வது வயதில் தான் தெரிந்து கொண்டேன் அதுவும் டாக்டர் சுதா அம்மையார் பேச்சு மூலம் என்று நகைச்சுவையாகப் பேசிய தாண்டவன், ஸ்மிருதியை வாழ்த்தினார்.
அழகு தமிழில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் முனைவர் (தமிழில் ஆய்வு – டாக்டர் பட்டம்) சுந்தர்ராமன். அவரின் தெளிவான உச்சரிப்பு – ஏற்ற இறக்க வர்ணனை, பார்வையாளர்களோடு சுதா சேஷையனின் தனிப் பாராட்டையும் பெற்றார்.
தொழு நோயாளிகளின் நல்வாழ்வு – சிகிச்சைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் தனியார் மருத்துவமனை செவிலியர் நித்யாநந்தி ரவியை, தன் பத்மலயா அறக்கட்டளை மூலம் மேடை ஏற்றி விருது – உதவி வழங்கி கவுரவித்தார் பத்மலட்சுமி.
திரைமறைவில் தனக்குத் துணை நின்ற லட்சுமி மகேஷ், ருக்மிணி சுப்பிரமணியன், வசந்தி சீனிவாசன், 2 மாணவிகள் ஜெ. வைபவி, எஸ். ஸ்ருதி ஆகியோரையும் அவர் கவுரவித்தார்.
வந்திருந்தவர்களையும், குறிப்பாக தன்னோடு 1985ம் ஆண்டு தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்த நெல்லை சிவா, டாக்டர் சிவகுமார் (சென்னை ரயாலா மருத்துவமனை சிறுநீரக சிகிச்சை நிபுணர்), டாக்டர் தனவேலன் பாண்டியன் (பிடிஆர் காலேஜ் ஆப் என்ஜினியரிங்) ஆர். எஸ். கே. ரகுராமன் (இணைத்தலைவர், பிஎஸ்என்ஏ என்ஜினியரிங் & டெக்னாலஜி) உள்ளிட்ட சக தோழர்களையும் ஆனந்த் – சரிதா ஆனந்த் தம்பதி, மகள் தேவி வரவேற்றனர். ‘ibit’ என்னும் பெயரில் இயங்கி வரும் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனத்தின் நிறுவனர் – தலைமை செயல் அதிகாரி ஆனந்த்.
– வீ.ராம்ஜீ