சென்னை, பிப்-3
“என்றும் நினைவில் வாழும்” நாட்டிய மேதை கே என் தண்டாயுதபாணி பிள்ளையின் 102 வது பிறந்தநாள் விழாவையும், “நவரச கேந்திரா” நாட்டியப் பள்ளியின் 31 வது ஆண்டு விழாவையும் முனைவர் சித்ரா சுப்பிரமணி ( நாட்டியப் பள்ளியின் நிறுவனர் – தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இசைத் துறையின் தலைவர்) மிகச்சிறப்பாக நடத்தினார்.
விழாவில் “நவரச கேந்திரா” குழுவினரின் “கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்” என்னும் தலைப்பில் நாட்டிய நாடகம் மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் நடைபெற்றது.
சிறையில் கிருஷ்ணன் அவதரிப்பதில் ஆரம்பித்து, இறுதியில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் வரைக்கும் கிருஷ்ணனின் சரிதத்தை நடித்துக் காட்டினார்கள் மாணவிகள்.
@ கிருஷ்ணனாக யாமினி, பி ஏ பி எல் பட்டதாரி, வழக்கறிஞர். சட்டத் தொழிலில் 13 ஆண்டு கால அனுபவம்.
@ பாமா, துரியோதனன் ஆக எம் எஸ் காயத்ரி, பி இ, எம் பி ஏ பட்டதாரி. முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மனிதவளத் துறையில் மேனேஜர். 11ஆண்டு கால அனுபவம்.
சகுனி: நித்யா மெயம்மை
@ ருக்மினி யாக வித்யா ஸ்ரீராமன். எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 4-ம் ஆண்டு பயோ டெக் ( ஜெனிடிக் இன்ஜினியரிங்) மாணவி.
@ யசோதாவாக பிரியா எஸ் விவேக்- தனியார் நிறுவனத்தில் (சிக்லோ கேப் )மார்க்கெட்டிங் மேனேஜர்.
இவரது 3 வயது மகள் ஹிருதயா விவேக், குட்டி பாலகிருஷ்ணனாக.
@ மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரம் சகுனி வேடத்தில் நித்யா மெய்யம்மை. பிகாம் பட்டதாரி, எம் பி ஏ பட்டப் படிப்பை தொடர்கிறார்.
தவிர அஜித்தா பாலாஜி, சந்தோஷினி ரவி, ஏ எல் அபூர்வா, நித்யஸ்ரீ ஐயர், ரம்யா ஸ்ரீராமன், ஷிவானி சந்திரசேகர், வர்ஷா, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ ,அக்ஷயா, நிதி வர்ஷிகா, தீப்சிகா, தன்மயாஸ்ரீ, அத்விதா, ரோஷினி தாரா, அக்ஷரா, ஹர்ஷினி தாரா ஆக மொத்தம் 23 இளம் கலைஞர்கள் பங்கேற்றார்கள்.
3-வது தலைமுறை வாரிசுகள் குழு
பத்மஸ்ரீ தண்டாயுதபாணி பிள்ளையின் 3-வது தலைமுறை வாரிசுகள் கொண்ட கலைக்குழு சித்ராவின் கலைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் முடிந்து, எல்லாம் ஒருவழியாய் முடிவுக்கு வந்த நிலையில் மகாபாரதம் குருசேத்திர யுத்தம் ஏன் என்பதற்கு ஃப்ளாஷ் பேக்கில் பாஞ்சாலி சபதத்தை கடைசி 15 நிமிடங்களில் சிறப்பாக நடத்திக் காட்டினார் குரு சித்ரா சுப்பிரமணி. (ஒப்பனை பூசிய இளம் கலைஞர்களுக்கு வேடம் ஒட்டியது, ஆனால் மீசை சரியாக ஒட்டாமல் தரையில் விழுந்து காணாமல் போனதுதான் ஒரு சிறு குறை. இது தவிர,குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா).
அனைவருக்கும் தெரிந்த மகாபாரதக் கதை. அதை விறு விறுவிறுப்பாக நடத்திக் காட்டினார்கள் மாணவிகள்.
காதில் ஒலிக்கும் உமாசங்கர் குரல்
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பி சாய்ராம், கலைமாமணி ஜெ சூரிய நாராயணமூர்த்தி ( முன்வரிசை நடனக் கலைஞர், குரு), “மக்கள் குரல் ” வி ராம்ஜீ ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குருவையும், சிஷ்யைகளையும் மனம் திறந்து பாராட்டினார்கள்.
“குருவே சரணம் …சத்குருவே சரணம்” என்று குரு வந்தனத்தோடு நிகழ்ச்சி துவங்கி ,புஷ்பாஞ்சலி, கணபதி கௌத்துவம் முடித்து ” கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்” நாட்டிய- நாடகம் நடந்தது.
குரு சித்ரா சுப்பிரமணி- நட்டுவாங் கம், முனைவர் உமா சங்கர் வாய்ப்பாட்டு, வடிவேல் -மிருதங்கம், சடகோபன்- வயலின், பி வி ரமணா -புல்லாங்குழல்: நாட்டிய நாடகத்திற்கு தனிச்சிறப்பு.
மாயவரம் விஸ்வநாதன் எளிமையான உரை நடை- பாடல்களில் கிருஷ்ணன் சரிதை கவனத்தில் நின்றது.
அழகு தமிழ்” ஆரூர் சுந்தரராமன்
“காற்றின் கவிதை இசை என்றால் பாதங்களின் கவிதை பரதம் ”…என்று இன் தமிழ் சுவையில் தன்னுடைய கணீர் குரலால் அழகு வர்ணனையால் பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து பெருமையாய் பேச வைத்தார் வர்ணனை யாளர் “அழகு தமிழ் ” ஆரூர் சுந்தர்ராமன்.
ஆயுத எழுத்து (அக்கன்னா) தமிழுக்கு எப்படி ஒரு சிறப்பு- தனித்துவமோ… அது மாதிரியே சித்ரா சுப்பிரமணியின் நவரச கேந்திரா நாட்டிய பள்ளிக்கு
யாமினி, எம் எஸ் காயத்ரி ,வித்யாஸ்ரீ ராமன் மூவரும். பிரியா எஸ் விவேக்: சித்ராவின் வெற்றிக்கு வலது கரம்.
சித்ரா சுப்பிரமணிகுழுவின் “கிருஷ்ணம் வந்தே ஜெகத் குரும்” சிந்தை மயக்கினார்கள் 23 சிஷ்யைகளும்!
வீ. ராம்ஜீ