செய்திகள்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணத்திலும் பங்கேற்றார்

குருவாயூர், ஜன. 17

கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

கேரளா மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்துள்ளார். கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை ஏராளமான பாரதீய ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

அங்கிருந்து ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு கேரள பாரம்பரிய உடையை மாற்றிக் கொண்டார். பின்னர் குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடியை கோவில் நிர்வாகிகள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு தரிசனம் செய்த பிரதமருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாக கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்கு சென்ற மோடி பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார். நேற்று, ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். இன்று கேரள மாநிலம் சென்ற பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குருவாயூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதீய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *