சிறுகதை

குருமா குழம்பு… | ராஜா செல்லமுத்து

சந்தோஷ் புரோட்டாவை ஏத்திக்கோ. அப்படியே ரெண்டு ஆம்லெட், ஒரு ஆஃப் பாயில், மூன்றும் கலக்கி’ என்று ஆர்டர் கொடுத்தான் ஓட்டல் உரிமையாளர் மோகன்.

உடம்பில் வழிந்த வியர்வையை வலது கையில் துடைத்தபடியே ஏற்கனவே உருட்டி வைத்திருந்த மைதா மாவு உருண்டையை மறுபடியும் எடுத்து கல்லில் எண்ணெய் தடவி ‘சல்சல்’ என அடித்து அதைப் பெரிதாக்கி புரோட்டாவை கல்லில் அடக்கினான் சந்தோஷ்.

‘உஷ்’ என எரிந்து கொண்டிருந்தது கேஸ் அடுப்பு, முட்டையை உடைத்து அதில் ஏற்கனவே அரிந்து வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை அள்ளிப்போட்டு டொக் டொக்கென கலக்கி ‘சொய்ங்’ என்று கொதித்து கிடந்த கல்லில் ஊற்றினான் சந்தோஷ்.

புல்பாயில், கலக்கி என்று சூடேறிக்கொண்டிருந்த கல்லில் ஊற்றினான். இப்படி நிறைய அடுக்கப்பட்டிருந்த இடத்தில் மீதமிருந்த சிறிய இடத்தில் ஒரு கல் தோசையையும் ஊற்றினான்.

‘‘பய பயங்கரமான ஆளாகியிருப்பான் போல’’

எப்படி சொல்றீங்க?

இருக்கிற சின்ன இரும்பு கல்லுல எத்தனைய போட்டு வச்சிருக்கான் பாருங்க’ என்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் பேசினர்.

‘ம்ம்’ என்று ஆமோதித்தார் இன்னொருவர்.

‘ஒரு கொத்து புரோட்டா போட முடியுமா?

‘கொஞ்சம் இருங்க. இதெல்லாம் எடுத்துட்டு போடலாம் என்று மோகன் உறுதி சொன்னான்.

வழியும் வியர்வையை வழித்து போட்டபடியே புரோட்டாவை புறமுதுகிட்டுத் திருப்பி போட்டான் சந்தோஷ்.

‘ஏங்க, ஆம்லெட் எனக்கு எனக்கு’

‘எனக்கு புரோட்டா, புல்பாயில்’ என்று கணபதி கேட்க,

அவனுக்கு வைத்த இலையில் புரோட்டாவும் புல்பாயிலும் வைக்கப்பட்டன.

‘குருமா’ என்றவனிடம் மோகன் குருமாக் கிண்ணத்தில் குருமாவை நிரப்பி கொடுத்தான். அதை தன் பக்கம் இழுத்த கணபதி,

குருமாப் பாத்திரத்தில் அடி ஆழம் வரை கரண்டியை விட்டு, எலும்பு, கறி என கொத்துக் கொத்தாய் அள்ளித் தன் இலையில் போட்டான். அவன் இலையைச் சுற்றியிருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்த்தனர்.

‘என்னங்க என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறானுக’ என்ற கணபதி குருமாவில் கிடந்த எலும்பு கறியை எடுத்து மடக் மடக் எனக் கடித்து தின்ன ஆரம்பித்தான்.

அவன் அப்படிக் கடிப்பதை விநோதமாகப் பார்த்தவர்களை எரிச்சலோடு பார்த்தான் கணபதி.

‘என்ன?’ என்று கணபதி ஒருவனைப் பார்க்க,

‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையாட்டினான்.

கணபதி அருகிலிருந்த குருமாவை இழுத்த இன்னொருவன் சுற்றிலும் பார்த்துவிட்டு, குருமா கிண்ணத்திலிருந்து குருமா, எலும்பு கறியையும் அள்ளிப் போட்டான். அவன் அப்படி அள்ளி போட்டதை அந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டே இருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க, இலையில் விழுந்த எலும்பு கறிகளை சாப்பிடாதது போல, இலையின் ஓரமாக ஒதுக்கி வைத்தான். அவன் அப்படி ஒதுக்கும் போது முகத்தில் அறுவறுப்பு அரும்பியது.

‘இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்’ என்பது போல் அதை ஒதுக்கியவன், இட்லியைச் சாப்பிட ஆரம்பித்தான்.

கணபதி, எந்த விதமான கூச்சமும் இல்லாமல் எலும்பு, தோல்கறியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.

தன்னுடைய இலையில் ஒதிக்கிய எலும்புக் கறிகளை யாரும் பார்க்காத போது, அவன் எடுத்துத் தின்ன ஆரம்பித்தான். லபக் லபக் என்று அவசரம் அவசரமாக மென்று தின்றவனைக் கணபதி கூப்பிட்டான்.

‘ஹலோ … ஹலோ’ ஏன் இப்படி சாப்பிட்டு இருக்கீங்க?

கொஞ்சம் மெதுவாகவே சாப்பிடுங்க பாஸ். ஓட்டலுக்கு சாப்பிட தான வந்தோம், குருமாவுல கெடக்குற எலும்பு, கறிய எடுத்து சாப்பிடுறது கேவலமில்ல. அத போட்டு சாப்பிடுறது எந்த அவமானமும் இல்ல. நம்மள பாக்குறவன் அவனும் யோக்கியன் இல்லை.

இந்தக் குருமா எலும்ப ஒதுக்குறவன் பெரிய பணக்காரன் இல்லை. யாரும் எதுவும் நம்மள பத்தி நினைப்பார்களோங்கிற அவமானம் வெட்கம் தான், அவங்கள அத எடுத்து சாப்பிட விடாமச் செய்யுது. நாம ஏன் தம்பி வெக்கப்பட்டுக்கிட்டே சாப்பிடணும்.

‘அள்ளி போட்டு சாப்பிடுங்க’ என்று குருமாவில் கிடந்த எலும்பை அள்ளி, வெட்கப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் இலையில் போட்டான் கணபதி.

‘ஐயோ, எனக்கு வேணாம். நான் சாப்பிட மாட்டேன் என்று மறுபடியும் அவன் வெக்கப்பட…

தம்பி சாப்பிடுங்க, சாப்பிடத்தானே ஓட்டலுக்கு வந்து இருக்கோம். தனியா கறி , சிக்கன் வாங்கி சாப்பிட நம்ம கையில காசு இல்ல, அதுக்காக குருமாவுல கெடக்கிற எலும்ப எடுத்து சாப்பிடுறது தப்பே இல்லை’ என்ற கணபதி, ஒரு எலும்பை மொடக்’ எனக் கடித்தான். சுற்றியிருப்பவர்கள் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர்.

அவனுக்காகவே இன்னும் நிறைய எலும்பை அள்ளி குருமாக் குழம்பில் ஊற்றினான் மோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *