செய்திகள்

கும்பமேளா சென்று வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்: குஜராத் முதல்வர்

அகமதாபாத், ஏப். 18–

கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்புபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் மையமாக மாறியுள்ளது.‌

இந்நிலையில் ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கும்பமேளாவில் கலந்துகொண்டு விட்டு திரும்புபவர்களை கண்காணிக்கவும், அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தங்கள் ஊர்களுக்குள் நுழைவதை தடுக்க, சோதனைச் சாவடிகளை அமைக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’ என கூறினார்.

மேலும், கும்பமேளாவில் இருந்து திரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சோதனையின்போது வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

குஜராத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதும் இதன் மூலம் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 84 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *