கூடுதல் பாதுகாப்பில் போலீசார், துணை ராணுவம்
லக்னோ, பிப். 3–
கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமியை முன்னிட்டு நேற்று முதல் இன்று காலை வரை 63 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13–ந்தேதி துவங்கியது. வரும் 26–ந்தேதி வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில் இதுவரை, 35 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மகா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வசந்த பஞ்சமி தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நெரிசல், அசம்பாவிதத்தை தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இன்று மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாட்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது. பௌஷ பௌா்ணமி (ஜனவரி 13), மகர சங்கராந்தி (ஜனவரி 14), மௌனி அமாவாசை (ஜனவரி 29), வசந்த பஞ்சமி (பிப்ரவரி 3), மாகி பௌா்ணமி (பிப்ரவரி 12), மகா சிவராத்திரி (பிப்ரவரி 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர்.
இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டார் புனித நீராடினர். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
இதேபோன்று நிகழ்வு நடக்காமல் இருக்க வசந்த பஞ்சமி நாளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.