செய்திகள்

கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்வு

19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

சென்னை, அக். 16–

திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

கும்பகோணம் மாநகராட்சியை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியிடப்பட்டது. தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளுடன், அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி, 2019 மார்ச் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தன. சட்டசபையில் அறிவித்தபடி தற்போது, தெங்கம்புதுார், ஆளூர் பேரூராட்சிகள், புத்தேரி, திருப்பதிசாரம், பீமநகரி, தேரேகால் புதூர், மேல சங்கரன்குழி, கனியாகுளம் ஆகிய ஊராட்சிகள், நாகர்கோவில் மாநகராட்சியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன.

தர்மபுரம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி பகுதியாக இணைக்கப்படுகிறது. இதனடிப்படையில், மாநகராட்சி வார்டு எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டு, எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல சிவகங்கை மாவட்டம், மானாமதுரை; திருச்சி – முசிறி, லால்குடி; சேலம் – தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்த நகராட்சிகளில் இணைக்க உள்ள ஊராட்சிகள் குறித்து பின்னர் பரிசீலிக்கப்பட உள்ளது. இதேபோல திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருநின்றவூர்; கடலூர் – திட்டக்குடி, வடலுார்; தஞ்சாவூர் – அதிராமபட்டினம்; துாத்துக்குடி – திருச்செந்துார்; கோவை – கருத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை; கரூர் – பள்ளப்பட்டி; திருப்பூர்– திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், இந்த பேரூராட்சிகளின் எல்லைகளில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, ஏழு தேசம் பேரூராட்சிகளையும்; கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் மற்றும் காகித ஆலை புகளூர் பேரூராட்சிகளை இணைத்து, இரண்டு நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் பேரூராட்சியை, கும்பகோணம் நகராட்சியுடன் இணைத்து, புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டு வரையறை செய்து தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *