தஞ்சாவூர், செப். 14–
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால், நகராட்சிக்கு உள்பட்ட சாலைகள் உள்ளிட்ட சில இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதால், நகராட்சி சாா்பில் அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
3 பேருக்கு பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறும்போது:–
பொதுமக்கள் தொடர் காய்ச்சல், தலைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் தான் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகிறது. எனவே, வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டிகள், பாத்திரங்களை சரியாக மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை நீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு, பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க முடியும் என்று கூறி உள்ளனர்.