செய்திகள்

குமாரி வாத்சல்யாவின் சங்கீத உபன்யாசம்; 5 சிறுவர்களின் சேர்ந்திசை: சென்னை பைன் ஆர்ட்ஸ் விழாவில் ‘அமர்க்களம்’

சென்னை, மே. 21

சென்னை பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தாசரதி சங்கீதோத்ஸவம் திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இசையியல் வல்லுனர் பி.எம். சுந்தரம் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் வி.எல்.வி. சுதர்சனால் தொகுக்கப்பட்டு மெட்டு அமைக்கப்பட்ட புரந்தரதாஸ் பஞ்சரத்ன கீர்த்தனைகள் என்ற நூல், விழாவில் வெளியிடப்பட்டது.

தியாகராஜரின் பஞ்சரத்னங்கள் போலவே இவையும் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகிய கன ராகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கன்னட மொழில் உள்ள சாஹித்யங்கள் சிறப்பாக ஸ்வரப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தவரான புரந்தரதாஸருக்கு இந்நூல் ஒரு பாராட்டுக்குரிய சமர்ப்பணமாகும். புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து அதில் உள்ள பாடல்களை முனைவர் சுதர்சன் குழுவினரோடு பாடினார்.

* 2ம் நாள் நிகழ்ச்சியாக குமார் வாத்சல்யா துளசீதரனின் சங்கீத உபன்யாசம் நடைபெற்றது. அம்பரீஷ் மகாராஜாவின் சரித்திரத்தை வெகுச் சிறப்பாக வழங்கினார் வாத்சல்யா. தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இவர் கொண்டுள்ள பாண்டித்யம் காண்போரை வியக்க வைத்தது. கதையில் இருந்த விறுவிறுப்பு இவர் பாடும்போதும் குறையவில்லை. கிரிஜா ராமசுவாமியின் சீடரான இவர், சிறு வயதிலேயே இந்த அரிய கலையில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

* கடைசி நாள் வீணை இசைக் கலைஞர் நித்யஸ்ரீயின் மாணவர்கள், 10 வயது கூட நிரம்பாத 5 சிறுவர்கள் சேர்ந்திசைத்தனர். இந்த இளம் வயதில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய சிறுவர்கள், அனைவரின் பாராட்டையும் பெற்றனர். கடந்த 5 ஆண்களைப் போலவே இந்த ஆண்டும் தாசரதி சங்கீதோத்ஸவம் சிறப்பாக நடந்தேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *