செய்திகள்

குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் நடைபயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்குகிறார்

புதுடெல்லி, செப்.3-

குமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்குகிறார்.

நாடு 2024–ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் குமரி முதல் காஷ்மீர் வரை (ஸ்ரீநகர்) ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவை இணைக்கும் யாத்திரை) நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.

வரும் 7–ந்தேதி இந்த நடைபயணத்தை ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இதற்காக தமிழகம் வருகிற அவர், அன்றைய தினம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுச்சின்னத்தில் நடைபெறுகிற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் நடைபயண தொடக்க விழா நடைபெறுகிறது.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ராகுல் காந்திக்கு தேசியக்கொடியை வழங்குகிறார். அங்கிருந்து ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களுடன் பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து செல்கிறார்.

ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரையில் 3,570 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்கிற இந்த நடைபயணத்தை 8ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறார்.

இந்த நடைபயணம், கேரளாவை 11–ந்தேதி அடையும். அங்கு 18 நாட்கள் நடக்கிறார்கள். பின்னர் 30–ந்தேதி கர்நாடகம் சென்றடைகிறார்கள். அங்கு 21 நாட்கள் நடைபயணம் நடக்கிறது. அதன்பின்னர் வட மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.

இந்த நடைபயணத்தில் ராகுல் உள்ளிட்ட 118 தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களில் ராகுல் உள்ளிட்ட 9 தலைவர்கள் 51–60 வயது பிரிவினர். 20 பேர் 25–30 வயது பிரிவினர். 51 பேர் 31–40 வயது பிரிவினர். 38 பேர் 41–50 வயது பிரிவினர்.

நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்கி திருவனந்தபுரம், கொச்சி, நீலம்பூர், மைசூரு, பெல்லாரி, ரெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன்கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகர் சென்றடைகிறது.

இந்த தகவல்களை காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published.