செய்திகள்

குமரியில் தொடர் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 2 நாட்களில் 5 பேர் உயிரிழப்பு

நாகர்கோவில், அக். 5-

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் மழை நீடித்தது. ஆறுகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இருந்து விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று பகலில் மிதமான மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு நேற்று 2-வது நாளாக விடுமுறை விடப்பட்டது.

மழை அளவு: பாலமோர், பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

நேற்று காலை 8 மணி வரையான24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறை 97 மி.மீ., ஆணைக்கிடங்கு 94,மாம்பழத்துறையாறு 93, கோழிப்போர்விளை 84, களியல் 79, நாகர்கோவில் 72, பெருஞ்சாணி 67, புத்தன்அணை 63, கொட்டாரம் மற்றும் பாலமோர் தலா 62, தக்கலை 59, முள்ளங்கினாவிளை 57, சுருளோடு 56, அடையாமடை 52, சிற்றாறு இரண்டில் 46, சிற்றாறு ஒன்றில் 42, பூதப்பாண்டி 31, பேச்சிப்பாறையில் 29, குருந்தன்கோடு 28, குளச்சல், திற்பரப்பு மற்றும் முக்கடலில் தலா 26, கன்னிமார் 20, இரணியல் 18 மற்றும் ஆரல்வாய்மொழி 10 மி.மீ. மழை பெய்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை: அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பழையாறு, கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு உட்பட மாவட்டத்தில் உள்ளஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுசீந்திரம் சோழன்திட்டை தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழை, மரவள்ளி, தென்னை, ரப்பர் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும், மலைப் பயிர்களும் சேதமடைந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அணைகளின் நீர்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 30.80 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு 1,546 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது.

அணைக்கு 1,564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 3 நாளில் 10 அடியாக உயர்ந்துள்ளது. மழை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை நீர்ஆதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மாங்காடு – முஞ்சிறை சாலையில்தண்ணீர் தேங்கியுள்ளது. திக்குறிச்சியில் குடியிருப்புகளையும், குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் இறந்தார்.

ஆற்றூர் பகுதியில் மழை பாதிப்பால் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.தக்கலை அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி இறந்தார். இதனால் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *