நாடும் நடப்பும்

குப்பை கழிவுகளில் இருந்து கட்டுமானம், மின்சாரம்: தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தும் முதலமைச்சர் ஸ்டாலின்!


ஆர். முத்துக்குமார்


குப்பை கழிவுகளில் இருந்து நகரின் வளர்ச்சிகளை உணர முடியும்! அதிக குப்பைக் கழிவுகள் சேர்வது நகரின் வளர்ச்சியை காட்டுகிறது. கூடவே அப்பகுதியின் இயற்கை வளங்களை நாசம் செய்வதையும் புரிந்து கொள்ள முடிகிறது!

இதிலிருந்து தப்பித்துக் கொள்ள என்னதான் வழி? முதல் கட்டமாக மக்கும் குப்பை, மக்கா குப்பையை இனம் கண்டு பிரித்தாக வேண்டும். இன்றும் தெருமுனைகளில் பளபளவென இருக்கும் குப்பைத் தொட்டிகளில் எதில், எதை போடுவது என்று சாமானியனுக்கு புரிந்ததாக தெரியவில்லை.

மக்களிடம் விழிப்பில்லை

வீட்டின் முன் வந்து வாகனங்களில் குப்பை கழிவுகளை அகற்றும் திட்டம் எல்லாத் தெருக்களிலும் இருந்தும், அந்த வண்டிகளின் பயனை, குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு புரிதலோடு உபயோகிக்க முடியாத நிலையே பெருவாரியான இடங்களில் இருக்கிறது.

கடற்கரை போன்ற ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தள்ளு வண்டி உணவகங்கள் பிரபலமானவை. ஆனால் எந்த வண்டியின் முன்பும், குப்பைகளை போட குப்பைத் தொட்டிகளே கிடையாது, நல்ல குடிநீர் விற்பனையும் கிடையாது!

அதாவது பேப்பர் போன்ற மக்கும் கழிவும் அப்படியே வீசப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடையாது என்பதால், தண்ணீர் பாக்கெட்டுகள் சிதறி கடற்கரை எங்கும் இருக்கிறது.

இதன் அடுத்த கட்டமே குப்பைகளை அகற்றி அதை ஒரு இடத்தில் மலைபோல் குவித்து வைத்து அந்த வீணானவற்றை உபயோகமானதாக மாற்றுவது. அந்தக் கட்டத்தில் சென்னை நகரம் நல்ல முன்மாதிரியாகவே இருக்கிறது.

பெருங்குடி குப்பை கிடங்கு

பெருங்குடி குப்பை கிடங்கு 225 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள 9 முதல் 15வது மண்டலம் வரையான பகுதிகளில் உள்ள குப்பைகள், கடந்த 25 ஆண்டுகளாக பெருங்குடியில் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது.

இங்கு பயோமைனிங் முறையில் குப்பை மறு சுழற்சி செய்யப்படுகிறது. மேலும், அங்கு மின் இணைப்பு வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குப்பை கிடங்கில் தென்னை நார்க்கழிவு கொட்டப்பட்டிருந்த நிலையில், அதிக வெயிலில், மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாகவே தீப்பற்றியது. 225 ஏக்கர் பகுதியில், 8 ஏக்கர் அளவில் பரவிய தீயை அணைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 12 தீயணைப்பு வாகனங்கள் அங்கு உள்ளன. தீயணைப்புத் துறை டிஜிபி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கேயே தங்கி, இரவு–பகலாக தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வழங்கல் துறை மேலாண்மை இயக்குனரும் அங்கு உள்ளார்.

சென்னை குடிநீர் வாரிய மறு சுழற்சி மையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, தீயணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய திட்டத்துக்கு ஆய்வு

இந்தப் பணிகளை கடந்த மாத இறுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, உடனடியாக அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அதன் சிறப்புகளை கண்டனர்.

பெருங்குடி குப்பை கொட்டும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கேள்விப்பட்டே, முதலமைச்சர் இந்த ஆய்வுப்பணியை மேற்கொள்ள, அமைச்சர் தலைமையில் ஓர் உயர்மட்ட ஆய்வுக்குழுவை அனுப்பி வைத்தார். அதோடு மறு சுழற்சி பணிகளையும் பற்றி தெரிந்து கொண்டு அத்திட்டத்தை தமிழ்நாடு எங்கும் நிறுவிடவும் முடிவு செய்துள்ளார்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், குப்பையை மூடி அதிலிருந்து மீத்தேன் வாயு தயாரித்து சிலிண்டரில் நிரப்பி விற்பனை செய்யும் திட்டம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களையும் அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் சேகரித்துள்ளனர். விரைவில் தமிழ்நாட்டில் 3 இடங்களில் மக்காத குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. பேரூராட்சிகளில் தனியார் நிலங்களில் மறு சுழற்சிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் பெருங்குடி குப்பை கிடங்கு பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இப்படி அன்றாடம் சேரும் பல ஆயிரம் டன் குப்பையில் இருந்தும், கழிவுகளில் இருந்தும் பல உபயோகங்கள் வரத் துவங்கினால் தமிழ்நாடு குப்பையில் இருந்து விடுதலை பெறுவதுடன் மாணிக்கமாய் மின்னும்!

தென்கொரிய முன்மாதிரி

தென் கொரிய தலைநகர் சியோலில் (Seoul) 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது கூவத்தையும் அதன் கரையோர பகுதிகளையும் நினைவுபடுத்தும் நகரமாக இருந்ததை நவீன நகரமாக மாற்றி விட்டனர்.

நகர குப்பைகளை 10 கிலோ மீட்டருக்கு அப்பால் நகர எல்லையில் குவித்தனர். சில மாதங்களில் ஒரு பெரிய குன்றாக உயர்ந்திடாமல், தரை மட்டமாக சமப்படுத்தினர். அதையே தரையாக கொண்டு அதன் மீது நகர வசதிகளை உருவாக்கி விட்டனர்!

அதாவது குப்பைகள் பையில் அடைக்கப்படுவது போல், நகரே அதை அடைத்து வைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் அதல பாதாளத்தில் மீத்தேன் எரிவாயுவும், மின்சார உற்பத்தியும் நடைபெற்று மேற்பகுதி நகரத்தின் எரிவாயு தேவையையும், மின்சார உபயோகத்திற்கும் வினியோகிக்கப்படுகிறது.

அது போன்று வரும் காலத்தில், தமிழ்நாடு எங்கும் குப்பை கழிவுகளை எப்படி உபயோகிக்கலாம்? என்பதற்கான ஆய்வுகளில், முன்னணி பொறியியல் நிறுவனங்கள் ஈடுபட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு, புதிய கோணத்தில் தமிழ்நாட்டை வழி நடத்திச் சென்றாக வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published.