செய்திகள்

குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கத்தை இணைத்து புதிய தாலுக்கா அமைக்க நடவடிக்கை

Spread the love

சென்னை, ஜூலை 10–

குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கத்தை இணைத்து புதிய தாலுக்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, ஸ்ரீபெரும்புதூர் உறுப்பினர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்ட மாங்காடு, கொளப்பாக்கம், குன்றத்தூர் ஆகிய வருவாய் குறுவட்டங்களை இணைத்து புதிய தாலுக்கா அமைக்க அரசு முன் வருமா? என்றார்.

அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கையில், அரசாணை நிலை எண்.70ன்படி 10.2.2016ல் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சீரமைக்கப்பட்டு, அதில் உள்ள குன்றத்தூர், மாங்காடு குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் வட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும் மாங்காடு குறுவட்டத்திலிருந்து 13 கிராமங்களை கொண்டு புதிய கொளப்பாக்கம் வட்டம் உருவாக்கி அதனை ஆலந்தூர் வட்டத்தில் சேர்த்து ஆணையிடப்பட்டது. அரசு ஆணைப்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாங்காடு, கொளப்பாக்கம், குன்றத்தூர் ஆகிய வட்டங்களை ஒன்றிணைத்து புதிய வட்டம் உருவாக்க முகாந்திரம் ஏதுமில்லை என்றபோதிலும், இந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாக உறுப்பினர் சொல்லியிருக்கிறார். எனவே அப்பகுதி மக்களின் நலனை கருதி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து அளவுகோள்களையும், விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் மாங்காடு, கொளப்பாக்கம், குன்றத்தூர் ஆகிய குறுவட்டங்களை இணைத்து புதிய தாலுக்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். புதிய தாலுக்கா அமைக்க அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *