மலை ரெயில் சேவை இன்று ரத்து
குன்னூர், செப். 30–
குன்னூரில் பெய்த கன மழையால் மண் சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்று இரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கன மழையில் திடீரென்று அங்கு நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
இதன் சப்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் மண்சரிவில் சிக்கி கொண்டார். மேலும் வீட்டில் இருந்த அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு துறையிருக்கு தகவல் அளிக்கபட்டதில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து வீட்டில் சிக்கி கொண்ட மூவரையும் பத்திரமாக மீட்டனர்.
இருந்த போதிலும் மண்ணில சிக்கிய ஜெயலட்சுமியை 3 மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர், வருவாய்துறையினர், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைரெயில் ரத்து
இந்த நிலையில் மழை காரணமாக மேட்டுப்பாளையம்- – உதகை மலை ரயில் பாதையில் கல்லார்- அடர்லி ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை – -மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.