செய்திகள்

குண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கபே: 8 நாட்களுக்கு பின்பு இன்று மீண்டும் திறப்பு

Makkal Kural Official

சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதி

பெங்களூரு, மார்ச் 9–

குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது. உணவகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பெங்களூரு குந்தலஹள்ளி பகுதியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதுபற்றி கர்நாடக போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வழியே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என தெரிய வந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டது.

ரூ.10 லட்சம் பரிசு

வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த மர்ம நபர் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் முகமூடி, தொப்பி அணிந்திருந்தார். எனினும், கணினி மூலமாக மர்ம நபரின் முகத்தைக் கண்டறிந்துள்ள என்ஐஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தகவல்களை அளிப்பதற்காக தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றையும் பகிர்ந்துள்ளது.

இந்த நிலையில் குண்டுவெடிப்புக்குள்ளான பெங்களூரு ராமேஸ்வரம் உணவகம் 8 நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பட்டிற்காக இன்று திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களிடம் முறையான சோதனை நடத்தப்பட்ட பின்னரே உணவகத்துக்கு உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டது

உணவகத்தை திறப்பதற்கு முன், அதன் இணை நிறுவனர் ராகவேந்திர ராவ் மற்றும் அனைத்து ஊழியர்களும் ஒன்றாக நின்றதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பணிகள் தொடங்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக உணவகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராகவேந்திர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். பாதுகாப்புக் குழுவை நாங்கள் பலப்படுத்தி உள்ளோம். மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு எங்கள் பாதுகாவலர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்து சிசிடிவி காட்சிகளையும், தகவல்களையும் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இவ்வளவு விரைவாக உணவகத்தை மீண்டும் திறக்க உதவிய அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். என்ஐஏ விரைவில் குற்றவாளியை நம் முன் கொண்டுவந்து நிறுத்தும். மேலும் சிசிடிவிகளை எங்கு பொருத்துவது என்பது குறித்து அரசும் காவல்துறையும் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது. வளாகத்தை கண்காணிப்பதற்காக ஒருவரை நியமிக்க உள்ளோம் என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *