சிறுகதை

குணம் – ராஜா செல்லமுத்து

முகிலனுக்கு அவன் வீட்டின் அருகே இருக்கும் நாய் ரொம்பவே தொந்தரவாக இருந்தது . அவனால் எழுத முடியவில்லை . படிக்க முடியவில்லை. எப்போதும் அந்த நாய் குலைத்துக் கொண்டே இருக்கும். பக்கத்து வீடும் முகிலன் வீடும் ஒரே சுவர் என்பதால் முகிலன் இது பற்றி பக்கத்து வீட்டில் அதிகமாகப் பேசவில்லை. பேசினால் ஏதாவது சண்டை வரும் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம்.

ஆனாலும் நாய் ஏன் இப்படி கத்துகிறது? என்று கேள்வி கேட்டால் அது என் சுதந்திரம் .என் வாழ்க்கை என்று பதில் கூறுவார்கள் . இது ஜனநாயக நாடு யாரும் எதையும் வைத்துக் கொள்ளலாம். பேசலாம் . எழுதலாம் அவரவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஏதாவது செய்யலாம் . அதை தட்டிக் கேட்கவோ இதை செய்யக்கூடாது என்று சொல்லவோ எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. இதுதான் ஜனநாயக நாட்டின் உரிமை .இதை கருத்தில் கொண்டு பக்கத்து வீட்டில் எதுவும் பேசுவதே இல்லை. அனுதினமும் குலைக்கும் நாய்க்கு கண்டிப்பாக ஒருநாள் ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்பதே ஒரு முடிவாக இருந்தான் முகிலன்.

இதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்து முடிவு எடுத்த பிறகு தனது உறவுக்காரரான மணியை கிராமத்திலிருந்து வர வைக்கலாம் என்று முடிவு செய்தார். வந்த மணி ஓங்குதாங்காக ஆளைப் பார்த்தாலே 6 அடி உயரம். கைகாலெல்லாம் நீளமாக பார்ப்பதற்கு புஷ்டியாக இருந்தான்.

என்ன மாமா வரச்சொன்னிங்க ஏதாவது விஷயமா? என்று மணி கேட்க , பிரச்சினையை சொல்வதற்கு வாய் எடுப்பதற்குள் அந்த நாய் குரைக்க ஆரம்பித்தது? இதுதான் பிரச்சனை என்றார்.

என்ன பிரச்சனை மாமா என்று சும்மா சொல்லுங்க என்று மணி சொல்வதற்குள் மறுபடியும் ஊளையிட்டது நாய்.. இதுதான் மாப்பிள்ளை . பிரச்சனை காலையில சாயங்காலம் நைட் எப்படி எப்ப பார்த்தாலும் குறைச்சுட்டு இருக்கு. என்னால எழுத முடியல, படிக்க முடியல ஒன்னும் செய்ய முடியல. கஷ்டமா இருக்கு என்று பதில் சொல்ல

அதை முடிச்சுவிட்டறேன் மாமா என்றான் மணி.

எப்படி என்று கேட்க?

அதையே நீங்க கேட்க கூடாது. குணமடைய மட்டும் பாருங்க. ஆப்பரேசன் எப்படி பண்றதுன்னு கேட்க வேண்டாம் என்று சொல்ல அன்று இரவே மணியும் இன்னொரு நண்பரும் பக்கத்து வீட்டு சுவர் ஏறி நாய்க்கு கறியை போட்டு ஒரு சாக்கில் பிடித்தார்கள். கத்திக்கொண்டிருந்த நாய் குரைப்பதை நிறுத்தியது.

அப்படியே அந்த நாயைக் கட்டி தூக்கிக்கொண்டு பெருங்குடி குப்பை கிடங்கு சென்றார்கள். நீதான கத்துன. நீதான் கத்துன?என்று அந்த நாயை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.

*

காலையிலிருந்து முகிலனுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அந்த நாயின் குரல் இல்லை. அதன் தொந்தரவு ஏதும் பிரச்சனை இல்லை. என்ன என்று மணியிடம் கேட்டபோது

பிரச்சனை முடிஞ்சுது மாமா என்றான்.

எப்படி? என்று முகிலன் கேட்க

உங்களுக்கு உடம்பு குணம் ஆயிடுச்சு இல்ல . அது போதும் என்ன ஆபரேஷன் பண்ணினன்னு கேட்காதீங்க என்று மறுபடியும் அதே வார்த்தையை மணி சொன்னான்.

அதை கேட்பதோடு விட்டுவிட்டார் முகிலன் ; அவனுக்கு ஒரு பரம திருப்தி. தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்த நாய், இப்போது தன் குரலை அடக்கிக் கொண்டது.

அவருக்கு அலாதி மகிழ்ச்சி. எப்படியோ தனக்கு விடுதலை கிடைத்தது நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.

மணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் முகிலன் . இரண்டு நாட்களுக்குள் அகிலன் வீட்டில் ஒரு விழா நடந்தது.

சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள், ஊர் உறவுகள் அனைவரும் வந்து முதலில் வீட்டில் குவிந்தார்கள் . கறி விருந்து தடபுடலாக நடந்தது . ரொம்பவும் பெரிதும் இல்லாமல் ரொம்பவும் சின்னதும் இல்லாமல் இருந்த வீட்டுக்கு ஆட்கள் நிறைய வந்தார்கள்.

மணிக்கு எங்கே அமர்ந்து சாப்பிடுவது? என்று தெரியவில்லை .டைனிங் ஹால் நிரம்பி ,அடுப்படி வழிந்து போர்டிகோ வரை சென்றிருந்தது. மணிக்கும் பரிமாறப்பட்டது. கறிவிருந்து.

மணி தன் கையில் ஏந்திய தட்டை அப்படியே கொண்டு வந்தான் அவன் தட்டில் சுக்கா வறுவல், கறி .மீன் சிக்கன் பிரியாணி சகிதம் இருந்தது. அவன் அமர்ந்து சாப்பிடுவதற்கான இடம் அந்த வீட்டில் இல்லை என்ன செய்வதென்று விழித்தான் மணி. அடைத்து இருந்த ஒரு கதவை திறந்தான் .

அது நவீன சவர் குளியல் அறை. சரி ஆபத்துக்கு பஞ்சமில்லை என்று நினைத்த மணி அங்கு அமர்ந்து கறி விருந்து சாப்பிட ஆரம்பித்தான் .

அது வரையில் யாருக்கும் தெரியாமல் இருந்தது . மணி சாப்பிடும் இடம்.

ஒருவர் அந்த வழியாக ஒருவர் வந்தபோதுதான் மணி குளியலறையில் அமர்ந்து சாப்பிடுவது தெரியவந்தது .பார்த்தவருக்கு கோபமாக வந்தது . வாந்தி எடுப்பது போல சைகை செய்து விட்டு ஓடினார் . மணி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எந்த கவலையும் இல்லாமல் அவன் பாட்டுக்கு அங்கேயே அமர்ந்து கறி, மீனை தின்று கொண்டிருந்தான்.

ஓடிப் போனவர் சொல்ல மற்றவர்களும் வந்து அமர்ந்து சாப்பிடும் இடத்தைப் பார்த்தார்கள் இது அவன் குணமா இருக்கும்

நம்ம என்ன செய்ய முடியும்? அது எங்க அவங்களுக்கு பிடிக்குதோ உக்காந்து சாப்பிட்டட்டும். விடுங்க என்று சொல்ல மணி இரண்டு சிக்கன் ஒரு மீன் கொஞ்சம் பிரியாணி குடுங்க என்று கழிவறையிலிருந்து ஆர்டர் கொடுத்தான்.

அவன் கேட்டதை ஒரு உணவு சமைப்பாளர் எடுத்துக்கொண்டு போனார் .அவருக்கும் கோபமாக வந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த அசைவ உணவுகளை வாங்கி மெல்லச் சாப்பிட ஆரம்பித்தார் மணி.

அங்கு வந்திருப்பவர்கள் அத்தனை பேருக்கும் மணியின் செய்கை ரொம்பவே ஒருமாதிரியாகப்பட்டது .

அது ஒரு சிலரோட குணம். நாம அத மாத்த முடியாது என்று அங்கிருந்த பெரியவர்கள் பேசி சென்றார்கள்.

மணி அசைவ உணவுகளை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சிலர் குணம் மாறுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *